Aran Sei

மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடிப்பதா? – சீமான் கண்டனம்

த்தியப்பிரதேசத்தைப் போலவே, டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தகர்த்து, வீடற்றவர்களாக மாற்றத்துடிப்பதா  என்று கேள்வி எழுப்பி இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டெல்லியில் அனுமன் ஜெயந்தி நிகழ்வின்போது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும், கலவரத்தையும் காரணமாகக் காட்டி, அங்கு வாழும் இசுலாமிய மக்களைக் குறிவைத்துத் தாக்குவதும், அவர்கள் மீது கொடுஞ்சட்டங்களைப் பாய்ச்சுவதும், அவர்களது வீடுகளை இடித்துத் தகர்ப்பதுமான ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. ஏற்கனவே, மத்தியப்பிரதேசத்தில் ராம நவமி ஊர்வலத்தின்போது நடந்த வன்முறைகளைக் காரணமாகக் காட்டி, அம்மாநில பாஜக அரசு இசுலாமிய மக்களின் வீடுகளையும், குடியிருப்புகளையும், கடைகளையும் இடித்துத் தகர்த்த நிலையில் அதனை அடியொற்றுவது போல டெல்லி, ஜஹாங்கீர் நகரிலும் நடைபெற்று வரும் மக்கள் விரோத எதேச்சதிகாரப்போக்குகள் இந்நாட்டின் சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளும் கொடுஞ்செயல்களாகும்.

ஜஹாங்கிர்புரியில் வீடுகள் இடிப்பு: ‘நாம் நரகத்திற்கு செல்லும் வழியில் இருக்கிறோம்’ – ப.சிதம்பரம்

மத்தியப்பிரதேசத்தை ஆளும் முதல்வர் சிவராஜ் செளகான் தலைமையிலான பாஜக அரசு, எவ்வித விதிமுறைகளையும் கடைபிடிக்காது மதவெறிக்கண்ணோட்டத்தோடு, அம்மாநிலத்திலுள்ள இசுலாமியர்களின் குடியிருப்புகளையும், கடைகளையும், வீடுகளையும் தகர்த்த நிலையில், அதேபோன்ற நடவடிக்கைகள் டெல்லியிலும் தொடருவது நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதம மந்திரி வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளையும், விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதெனக்கூறி, மத்தியப்பிரதேசத்தில் இடித்துத்தள்ளியிருப்பதும், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி, டெல்லியில் வீடுகளைத் தகர்த்து முடிப்பதுமான பாஜக ஆட்சியாளர்களின் நிர்வாகச்செயல்முறைகள் வெட்கக்கேடானவையாகும். மதச்சார்பற்ற சனநாயக நாடெனப் போற்றப்பட்ட இந்நாட்டில், ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் துணையோடு நிகழ்த்தப்படும் மதவெறியாட்டங்களும், இசுலாமியர்கள் மீதான கோரத்தாக்குதல்களும், அரசின் பாரபட்சமான மதவாத நடவடிக்கைகளும் கடும் கண்டனத்திற்குரியதாகும். பாஜக அரசு பதவியேற்றது முதலே இசுலாமிய மக்கள் மீது நாள்தோறும் தாக்குதல்களும், நெருக்கடிகளும் நிகழ்த்தப்படுவதும், அவர்களுக்கான மதவுரிமைகளும், சனநாயக உரிமைகளும் மறுக்கப்படுவதுமான நிகழ்வுகள் வெளிப்படையாக நிகழ்ந்தேறும் சனநாயகப்படுகொலையாகும். சொந்த நாட்டு மக்களை மதத்தின் பெயரால் துண்டாடி, நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைத்துவிட்டு, குடிகளைக் கொடிய ஆட்சி முறையால் சாகடித்துவிட்டு பிணங்களின் மீது நாற்காலியிட்டு அமர்ந்திருக்கும் பாஜகவின் ஆட்சியதிகாரமும், அதன் தத்துவக்கோட்பாடும், அரசியல் நிலைப்பாடும் மானுடகுலத்திற்கே எதிரானப் பேராபத்தாகும்.

அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சொன்னதற்கு கைதா? – ஜிக்னேஷ் மேவானி கேள்வி

உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, உலகத்தின் கண்முன்னால் பாபர் மசூதியையே இடித்துத் தகர்த்தவர்களுக்கு இசுலாமிய மக்களின் வீடுகளை இடிப்பதா கடினம்? ஆட்சியும், அதிகாரமும் கைவசமிருக்கும் துணிவிலும், பதவிபோதை தரும் மமதையிலும், எதிர்க்க எவருமில்லையெனும் திமிரிலும், நாட்டு மக்களை நாளும் வாட்டிவதைத்து பேயாட்டம் போடும் பாஜகவின் பாசிசச்செயல்பாடுகளுக்கு முடிவுகட்டப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. ‘ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பானதாகும்’ எனும் நபிகள் பெருமகனாரின் கூற்றுக்கிணங்க, மக்களின் கண்ணீரும், துயரமும், அதனால் எழுந்திடும் கோபமும், பேரெழுச்சியும் பாஜக அரசு செய்திடும் அநீதியை மொத்தமாய் வீழ்த்தும் காலத்தை விரைவில் உருவாக்குவோமெனவும், சனநாயகப்போர் புரிந்து, நாட்டையாளும் பாஜக அரசின் கோர முகத்தை முழுவதுமாகத் தோலுரிப்போமெனவும் இச்சமயத்தில் தெரிவித்துக்கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

*******************                            **********************                      ***************************

இளையராஜாவை எவ்வாறு புரிந்துகொள்வது – விளக்குகிறார் தோழர் மருதையன்

மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடிப்பதா? – சீமான் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்