தேசதுரோக சட்டம் என்பது அரசு கையில் இருக்கும் அதிகாரமிக்க ஆயுதம், அந்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை கைது செய்கிறேன் எனும் பேரில், அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை கைது செய்யக் கூடாது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் காவலர்களிடையே பேசிக்கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்த தேவிலால் புர்தாக் எனும் நபர், “டெல்லி காவல்துறையில் கலகம் ஏற்பட்டுள்ளது, 200 காவல்துறை அதிகாரிகள் மொத்தமாக ராஜினாமா செய்கின்றனர்” என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை குறிப்பிட்டு, ஸ்வரூப் ராம் என்பவர் மற்றொரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில், ஃபேஸ்புக்கில் போலியான செய்தியை பரப்பியதாக , தேவிலால் புர்தாக் மற்றும் ஸ்வரூப் ராமை டெல்லி காவல்துறை கைது செய்தது. அவர்கள் மீது தேசதுரோகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கூடுதல் சிறப்பு நீதிபதி தர்மேந்தர் ராணா முன் விசாரணைக்கு வந்துள்ளது. அய்போது “தேசதுரோக சட்டம் என்பது அரசு கையில் இருக்கும் அதிகாரமிக்க ஆயுதம். அந்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை கைது செய்கிறேன் எனும் பேரில் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை கைது செய்யக் கூடாது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலோ வன்முறையை தூண்டும் வகையிலோ மனுதாரர் எதுவும் தெரிவிக்காத நிலையில், அவர் மீது திட்டமிட்டு தேசவிரோத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று நீதிபதி கூறியதாக என்டிடிவி கூறுகிறது.
அயோத்தியில் ”ஆசாதி” முழக்கம் – தேச துரோக வழக்கை திரும்பப் பெற்ற காவல்துறை
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ வின் (தேச துரோகம்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது விவாதற்குரிய விஷயம் என குறிப்பிட்டுள்ள நீதிபதி, கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.