பஞ்சாப் மாநிலம் லூதியானா மாட்டத்தின் ஏகோலஹா கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான விவசாயி சோராவர் சிங், குடியரசு தினத்திலிருந்து காணவில்லை என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்னர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி, பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சட்டங்களை திரும்ப பெறக் கோரி ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது முதல், 1.5 ஏக்கர் விவசாய நிலம் கொண்ட இந்த குறு விவசாயியான சோராவர் சிங், போராட்ட களத்தில் நின்றுள்ளார். தனது மகளுடன் ஜனவரி 26 ஆம் தேதி வரை தொடர்பில் இருந்தவர், அதன் பின்னர் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பாக, டெல்லி சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை ஒட்டியுள்ள சோராவர் சிங்கின் மகள் பரம்ஜீத் கவுர், “அப்பா, நவம்பர் 26 ஆம் தேதி சிங்கு எல்லைக்குச் சென்றார். அதன்பிறகு அவர் திரும்பவேயில்லை.” என்று கூறியுள்ளார்.
விவசாயிகள் போராட்டம் – விவசாய சங்க தலைவர் மீது துப்பாக்கிச் சூடு, கொலை முயற்சி
மேலும் இதுகுறித்து பரம்ஜீத் கவுர் கூறும் போது, “ என்னுடைய அப்பா சோராவர் சிங், பாரதிய கிசான் யூனியனின் உறுப்பினராக உள்ளார். எங்களது பகுதியைச் சேர்ந்த விவசாயிகளை இப்போராட்டத்திற்கு அணிதிரட்ட, நாட்டுப்புற இசை கருவியான தும்பியை அப்பா வாசிப்பார். அக்டோபரில் பஞ்சாபில் தொடங்கிய ரயில் மறியல் போராட்டங்களின்போது, அவர் தண்டவாளங்களில்தான் உறங்குவார். கன்னா நகர ரயில் பாதையில் இருந்து, அவர் ஃபதேஹ்கர் சாஹிப்பில் நடந்த போராட்டத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து டெல்லி சிங்கு எல்லைக்கு சென்றார். அப்பாவை வீட்டிற்கு திரும்பி வந்துவிடுங்கள் என்று கோருவதற்காகவே, நானும் தொடர்ந்து இந்த போராட்டங்களுக்கு செல்வேன்.” என்று தன் நினைவுகளை அவிழ்கத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர் “கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அப்பா மற்ற விவசாயிகளுடன் டெல்லி போராட்டத்திற்கு சென்றார். அவர் அலைபேசி பயன்படுத்துபவர் இல்லை என்பதால், அவரைப் பற்றி பக்கத்து கிராமங்களிலுள்ள விவசாயிகளிடமிருந்து கேட்டு தெரிந்துகொள்வேன். அவர் சிங்கு எல்லை போராட்டத்திற்கு சென்றதிலிருந்து, ஒருமுறைகூட வீட்டிற்கு வந்து போகவில்லை. சில நாட்கள் மட்டும் வீட்டிற்கு திரும்ப சென்று, மீண்டும் திரும்ப போராட்டத்திற்கு வரும்படி உடனிருந்த விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். ஆனால், அவர் அவற்றுக்கெல்லாம் செவி மடுக்கவில்லை.” என்று தன் தந்தையின் மன திடத்தை குறிப்பிடுகிறார் பரம்ஜீத் கவுர்.
“ஜனவரி 22 ஆம் தேதி, நானே அப்பாவை சந்திக்க சிங்கு எல்லைக்குச் சென்றேன். விவசாயச் சட்டங்களுக்கு எதிரான இந்த போரில் நாங்கள் வெற்றி பெற்றவுடன் தான் திரும்பி வருவதாக என்னிடம் கூறினார். எனக்கு உடல்நிலை நன்றாகதான் இருக்கிறது, நீ என்னைப் பற்றி கவலைப்படாதே என்று கூறினார்.” என்று குறிப்பிட்ட பரம்ஜீத் கவுர், “குடியரசு தினத்திற்குப் பிறகு எங்கள் கிராமத்தினர் யாரும் அப்பாவை போராட்டத்தில் பார்க்கவில்லை. எங்கும் கேள்விப்படவுமில்லை. போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் கூட அப்பாவின் பெயர் இல்லை. இப்போது வரை அவரைப் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. நான் முழுவதும் உருக்குலைந்து போயுள்ளேன்.” என்று வழியும் கண்ணீரையும் மீறி அவரின் வலி பேசத் தொடங்கியது.
காணாமல் போன 75 வயதான விவசாயி சோராவர் சிங்கின் மகள் பரம்ஜீத்துக்கு, 5 வயதில் ஒரு மகன் உள்ளார். தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு பரம்ஜீத்தின் தாய் குர்மீத் கவுரும் காலமாகிப்போனார். தங்கைக்கு திருமணமாகி வெளியூர் செல்ல, அண்ணன் மட்டும் அதே கிராமத்தில் வசித்து வருகிறார்.
இத்தனை தடைகற்களுக்கிடையிலும், தனது தந்தையை தேடி ஐந்து வயது மகனுடன் சிங்கு எல்லைக்கு வந்த பரம்ஜீத், எந்த தகவலும் கிடைக்கப் பெறாமல், வெறும் ஏமாற்றத்தை மட்டும் சுமந்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
பரம்ஜீத் தனது தந்தையைப் பற்றிய விவரங்களை அவரது படத்துடன் ஒரு காணொளியாக பதிவு செய்து பகிர்ந்துள்ளார். அவரை பற்றிய தகவல்கள் கிடைத்தால், உடனே தனக்கு தெரிவிக்கும்படி பொதுமக்களை அக்காணொளியில் கோரியுள்ளார்.
சோராவர் சிங் பற்றி, பாரதிய கிசான் யூனியனின் (ராஜேவால்) தலைவர் ஓங்கர் சிங்கைத் தொடர்பு கொண்டபோது, “பரம்ஜீத் என்னிடம் தன் தந்தையை பற்றி கூறியிருந்தார். எங்களுக்கு அவரை பற்றிய தகவல்கள் கிடைத்தால் கூறும்படி மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அவருக்கு எங்களால் முடிந்தா எல்லா வகையிலும் உதவுவோம். ஏற்கனவே, எங்களுடைய வழக்கறிஞர்கள் குழு, இதுபோன்ற பிரச்சனைகளில் மக்களுக்கு உதவுவதற்காக இங்கே உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
பர்னாலாவில் கூடிய லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் – டெல்லி போலீசுக்கு எச்சரிக்கை
அப்பாவை பற்றிய விவரங்கள், டெல்லி சிங்கு எல்லையின் போராட்ட மேடையில் இரண்டு முறை அறிவிக்கப்பட்டன என்றும், அந்த விவரங்கள் சுவரொட்டிகளாக அடித்து, எல்லையைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன என்றும் பரம்ஜீத் தன் நம்பிக்கையை விடாது ஏந்தியபடி கூறுகிறார்.
(தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.