குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் தலித் மணமகனை குதிரையில் ஏற விடாமல் தடுக்க முயன்றதோடு, திருமண ஊர்வலத்தின் மீது கற்களை வீசியது தொடர்பாக, கிராம தலைவர் உட்பட 28 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த கல் வீச்சில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
“இச்சம்பவம் அம்மாவட்டத்தின் பலன்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட மோட்டா கிராமத்தில் நடந்துள்ளது. சம்பவம் நடந்த அடுத்த நாள் காட் காவல் நிலையத்தில், சட்டவிரோதமாக கூட்டம் கூட்டியது(பிரிவு 143), மிரட்டல் (506) மற்றும் எஸ்.சி.,/எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று துணை கண்காணிப்பாளர் குஷால் ஓசா கூறியுள்ளார்.
“திருமண ஊர்வலம் கிராமத்தின் வழியாகச் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஊர்வலத்தின்மீது கற்களை வீசி இருக்கிறார்கள். இதனால், மணமகனின் உறவினர் ஒருவர் காயமடைந்திருக்கிறார். நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்து, இதன் விசாரணையை எஸ்சி/எஸ்டி பிரிவு துணைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 7ஆம் தேதி, தனது இளைய மகன் அதுலுக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் இச்சம்பவம் நடந்ததாக விராபாய் செகாலியா என்பவர் புகார் அளித்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கிராம தலைவர் பாரத்சிங் ராஜ்புத் உள்ளிட்ட சில கிராமத்தினர், அதுல் செகாலியா அவரது திருமண ஊர்வலத்தின் போது குதிரையில் சவாரி செய்வார் என்பதை அறிந்ததும், அவர்கள் அவரின் தந்தையை அழைத்து, ‘இத்திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்’ என மிரட்டி இருக்கிறார்கள் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.
அதுல் செகாலியா குடும்பத்தினர் தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்ததை அடுத்து, பிப்பிரவரி 6 அன்று, கிராம பஞ்சாயத்து தலைவர் கிராம மக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
அக்கூட்டத்தில், திருமண ஊர்வலத்தின் போது எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குதிரையில் உட்காரக் கூடாது என மணமகனின் குடும்பத்தினரிடம் பாரத்சிங் ராஜ்புத் உள்ளிட்டோர் பகிரங்கமாக கூறியதாகவும் தங்களுடைய கட்டளைகளைப் பின்பற்றாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என குடும்பத்தினர் அச்சுறுத்தியதாகவும் செகாலியா தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த பிரச்சினையை மேலும் வளர்க்க விரும்பாத அதுல் செகாலியா குடும்பம், மணமகனை குதிரையில் ஏற்றும் யோசனையை கைவிட்டது. ஆனாலும், திருமண ஊர்வலத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல்துறையினரை அக்குடும்பத்தினர் நாடியிருக்கிறார்கள்.
நேற்று(பிப்பிரவரி 7) காலை, காவல்துறையினரின் பாதுகாப்பில் தொடங்கியுள்ள ஊர்வலம், ஒரு பால் கடை அருகே சென்றபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் திருமண ஊர்வலத்தில் உள்ள சில ‘சஃபாஸ்’ (தலைப்பாகைகள்) அணிந்திருப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் சாதிவெறிக் கருத்துக்களை கூறியதாகவும் அடையாளம் தெரியாத நபர்கள் ஊர்வலத்தின் மீது கற்களை வீசியதாகவும் என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் உதவியுடன், ஊர்வலம் மணமகளின் கிராமத்திற்கு சென்று, திருமணம் முடிந்து மாலையில் திரும்பியுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.