காவல் மரணங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிவது என்பது இவ்விவகாரங்களில் நீதி மற்றும் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும். அதுவும் இது பெரும்பான்மை மக்களின் ஒப்புதலுடன் நடப்பது ஒரு ஜனநாயக நாட்டிற்கு இன்றியமையாததாகும்.
2022-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15-ம் தேதி, டெல்லி திஹார் சிறையில் நீதிமன்றக் காவலிலிருந்த இஸ்லாமிய விசாரணைக் கைதியான ஜிஷான் மரணமடைந்தார். அவர் உடலில் பல காயங்களும் உள் காயத்திற்கான தடயங்களும் தென்பட்டன. இருப்பினும் அவரது மரணம் ‘இயற்கையான காரணங்களால் ஏற்பட்டது’ என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது போன்ற வழக்குகளில் காவல் மரணங்கள் இயற்கையாக நடக்கின்றன என்று சித்தரிக்கப்படுவதை மறு ஆய்வு செய்வது மிக அவசியமாகும்.
காவல் மரணங்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்; இந்தியாவில் உத்தரபிரதேசம் முதலிடம்
2020 ஆம் ஆண்டில் சிறைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,887 ஆக இருந்தது என்றும், அதில் 1,642 பேர் ‘இயற்கையான முறையில் மரணமடைந்துள்ளார்கள்’ என்றும், 189 பேர் ‘இயற்கைக்குப் புறம்பான முறையில் மரணமடைந்துள்ளார்கள்’ என்றும் சிறை புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இது குறித்த விவரங்கள் 2021 தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் உள்ளன.
1,542 பேர் உடல்நலக் குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது. காவல் மரணங்களில் பெரும்பாலானவை இவ்வாறு இயற்கையான முறையில் நிகழ்பவை என்று சொல்லப்படுகின்றன. இயற்கைக்கு மாறான மரணங்கள் மிகக் குறைந்த அளவிலேயே பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு சிறை அதிகாரிகளின் அலட்சியமும் அத்துமீறலுமே காரணம்.
ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் உண்மை கண்டறியும் குழு இந்த காவல் மரணங்கள் தொடர்பாக ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் காவல் மரணங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், ஜிஷான் மரணத்திற்கு பின்னுள்ள காரணங்களை விளக்கியது. இத்தகைய காவல் மரணங்களில் அரசு தரப்பு போதிய அக்கறையுடன் செயல்படவில்லை என்றும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் உண்மையை மறைப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளில் 157 காவல் நிலைய மரணங்கள் – குஜராத் அரசு தகவல்
மேலும், 2020 ஆம் ஆண்டில், சென்னை உயர் நீதிமன்றம் காவல் மரண வழக்குகளில் விசாரணை நடத்த பல வழிகாட்டுதல்களை வழங்கியது. மக்களுக்காக தான் இந்த அரசு செயல்படுகிறது என்பதை உணர்த்துவதற்கு காவல் மரணத்திற்கு பிந்தைய நீதியை நிலைநாட்டப் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மிக முக்கியமானவை என்றும் காவல் வன்முறைக்கு எதிரான நீதியை உறுதி செய்வதற்கு மருத்துவ வல்லுநர்கள், மற்றும் தடயவியல் நிபுணர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்று அவர்களின் முக்கியத்துவத்தைக் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
காவல் சித்திரவதைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியுள்ள மக்கள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை மீட்புக் குழுக்களின் தலையீட்டிற்கு பின்னர் உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவின் சாராம்சம் பின்வருமாறு கூறுகிறது, “மக்கள் தங்களது அரசை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதுதான் அனைத்து ஜனநாயக அரசாங்கத்தின் அடித்தளமாக உள்ளது.
‘பொதுமக்கள் காவல் நிலையம் செல்லவே பயப்படுகின்றனர்’ – உயர் நீதிமன்ற மதுரை கிளை
அரசு முதன்மையாகத் தனது இராணுவக்கட்டமைப்பின் மூலம் இயங்கினாலும், அதன் செயல்கள் சரியான முறையில் நடக்கின்றன என்று அதன் மக்கள் உணர்வுப்பூர்வமாக உணர வேண்டும். அரசாங்கம் செய்யும் ஒவ்வொரு செயல்களின் மூலமும் மக்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இங்கு காவல் மரணம் ஏற்படும் பொழுதும், மக்களுக்காக செயல்படுகிறது என்று கூறும் அரசின் நல்லாட்சிக்கு ஒரு பெரிய இழுக்கு ஏற்படுகிறது. இந்த காவல் மரணங்களுக்கு வெளிப்படையான விசாரணையை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே அத்தகைய இழுக்கை சரிசெய்ய முடியும். மரணமடைந்த ஒவ்வொரு நபருக்கும் அவரது மரணத்திற்கான நீதி கிடைக்க உரிமை உண்டு. நான் அதை மரணத்திற்குப் பிந்தைய நீதி என்று அழைக்கிறேன்.
ஜிஷான் மரண வழக்கு
19 வயதான ஜிஷான், 2021 நவம்பரில் ஒரு கடையிலிருந்து சிகரெட் பாக்கெட்டுகளை திருடியது தொடர்பாக கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜிஷானை 2021 நவம்பர் முதல் 2022 ஜனவரி இறுதி வரை, அவர் குடும்பத்தினர் பல முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இருப்பினும், கடந்த பிப்ரவரி மாதம் அவரது குடும்பத்தினருக்கு திடீரென ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் ஜிஷான் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவரது இறந்த உடல் மருத்துவமனையில் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து மாதங்களில் 1,067 பேர் காவலில் மரணமடைந்துள்ளனர் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் தகவல்
ஜிஷான் மரணத்திற்கு “மார்பு வலி, குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை மற்றும் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டதுதான் காரணம், ஆகவே இது இயற்கையான மரணம் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் அறிக்கை கேள்வி எழுப்பியது. மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர், இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யும் சடங்குகளின்போது ஜிஷானின் குடும்பத்தினர் அவரது உடலில் பெரிய வெளிப்புற காயங்கள், வடுக்கள் மற்றும் உள் காயங்கள் இருப்பதை பார்த்துள்ளனர். இதனால் அவர் குடும்பத்தினரும் பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிமை உரிமைகள் குழுவான ஜன் ஹஸ்தக்ஷேப் இந்த விவகாரம் குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதன் விளைவாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல்துறை இந்த விவகாரத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரிக்கத் துவங்கியது.
லாக் அப் மரணங்களில் 70 சதவீதம் விளிம்புநிலை மக்களே – மனித உரிமை அமைப்பு
காவல் மரணங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பல வழிகாட்டுதல்கள் உள்ளன. இதற்கு எதிராக இன்னும் உரிய நடவடிக்கை தேவைப்படும் நிலையிலும், இத்தகைய அலட்சியமே பதிலாக கிடைக்கிறது. ஜிஷான் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரது உள் மற்றும் வெளிப்புற காயங்களுக்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
திஸ் ஹசாரியில் உள்ள நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் கட்டாய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது மற்றும் பிரேதப் பரிசோதனை பிப்ரவரியில் நடத்தப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் முகம், மார்பு மற்றும் தோள்பட்டையில் இருந்த வெளிப்புற காயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் குடும்பத்தினர் தெரிவித்த மற்ற காயங்களை அதில் குறிப்பிடவில்லை.
ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் அறிக்கை குறிப்பிடுவது போல, சந்தேகத்திற்குரிய, இந்த காயங்கள் அனைத்தையும் பதிவு செய்த பின்னரும் பிரேதப் பரிசோதனை அறிக்கை எந்த முடிவையும் வெளிப்படுத்தவில்லை மற்றும் சில உள் காயங்கள் இருந்தது. ஆனால் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையினால் “பெருமூளையில் உள் ரத்தக்கசிவு” ஏற்பட்டு ஜிஷான் இறந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அவ்வறிக்கை, அடிப்படையில், ஜிஷானின் மரணம் “இயற்கையான காரணங்களால்” ஏற்பட்டது என்று கருதியது. “குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை” மற்றும் ஜிஷானின் “போதைப்பொருள் பழக்கம்” ஆகியவை அவரது மரணத்திற்கு காரணம் என்று சிறை அதிகாரிகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் மருத்துவமனை சென்றபோது, ஜிஷான் தனது காயங்களுக்கு இரண்டு வெவ்வேறு காரணங்களைக் கூறினார், ஒன்று அவர் சிறையில் கீழே விழுந்தது. மற்றொன்று சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டது.
ஜிஷான் கைதிகளால் அல்லது சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது சிறை அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு அளிக்காதது மற்றும் மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் அவரது மரணத்திற்கு வழிவகுத்ததா போன்ற கேள்விகளை எழுப்புகிறது. இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படாவிட்டால், ‘இயற்கையான காரணங்களால் தான் ஜிஷான் மரணமடைந்தார் என்று கூறுவது உண்மையை மறைப்பதற்கான மற்றொரு வழியாகும்.
இறுதியில் இயற்கையான காரணங்களால் ஒரு நபர் இறக்கிறார் என்று கூறுவது மரணத்திற்கு முந்தைய உண்மையான சூழ்நிலைமைகளை மறைக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் அறிக்கை ஜிஷானின் மரணம் தொடர்பாக நியாயமான மற்றும் சுயாதீனமான விசாரணையைக் கோருகிறது. மேலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் கூட சுயாதீனமான கண்காணிப்பு இல்லாத பட்சத்தில் பலனளிக்காது என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மதச் சுதந்திரம் மோசமடைந்துள்ளன – சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அறிக்கை
காவல் சித்திரவதைகளால் மரணமடைந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு ஒரே மாதிரியான சில பொது வழிகாட்டுதல்களை பொதுநல மனித உரிமைகள் முன்முயற்சி மற்றும் உடல்நலம் மற்றும் அதுசார்ந்த விஷயங்களின் விசாரணை மையம் போன்ற குடிமை சமூக குழுக்கள் உருவாக்கியுள்ளது. மருத்துவர்கள்தான் இந்த மரணங்கள் காவல் சித்திரவதைகளால் நடந்ததா இல்லையா என்பதை உறுதி செய்யும் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றனர்.
அண்மைக்கால முன்முயற்சிகள் சுயாதீனமான மருத்துவ நிபுணர்களால் நடத்தப்படும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன. இவை காவல் மரணத்திற்கு பிந்தைய நீதியை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குற்றவியல் நடவடிக்கைகளின் பொழுது நீதியை பெற்றுத் தருவதில் மருத்துவர்களின் முக்கியத்துவத்தை மருத்துவ ஆய்வாளர் அமர் ஜேசானி நீண்ட காலமாக வலியுறுத்து வருகிறார். ஆனாலும் கூட ஜிஷானின் விஷயத்தில் மருத்துவர்கள் தங்களது கடமையைச் செய்யத் தவறி விட்டனர்.
ஜிஷானின் மரணம் பற்றிய உண்மை கண்டறியப்பட வேண்டும். மற்ற காவல் மரணங்களுக்குப் பின்னால் உள்ள மர்மங்களும் வெளிகொண்டு வரப்பட வேண்டும். அதுவே இவ்விவகாரங்களில் நீதி மற்றும் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முதல் நடவடிக்கை ஆகும். ஜனநாயக அரசின் இன்றியமையாத கடப்பாடு இது என்பதை அரசு உணர வேண்டும்.
ஜினீ லோகனீதா, நியூ ஜெர்சியில் உள்ள ட்ரூ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலைக் கற்பிக்கும் பேராசிரியராக உள்ளார்.
the wire இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.