Aran Sei

‘கொள்ளை’ கட்டணத்தை எதிர்த்து கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – உணவின்றி மாணவர் மயக்கம்

டலூர் அரசு மருத்துவ கல்லூரியில், கட்டணக் குறைப்பை வலியுறுத்தி மாணவர்கள் 40 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் மின்சாரம், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ், ராஜா முத்தய்யா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகள், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டவுடன், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி,  கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரி என்று முறையே அழைக்கப்படுகிறது.

இங்கு இளங்கலை பொது மருத்துவப்படிப்பான, எம்பிபிஎஸ் கல்வி கட்டணம், ஆண்டுக்கு 5,40,00 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. முதுகலை கல்வி கட்டணம் ஆண்டுக்கு 9,60,000 ரூபாய் வாங்கப்படுகிறது. ஆனால், பிற அரசு கல்லூரிகளில், இளங்கலை மருத்துவப்படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.13,600 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. முதுகலை படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.25,000 மட்டும்தான்.

பிற அரசு பல் மருத்துவ கல்லூரிகளில், இளங்கலை பல் மருத்துவ படிப்பிற்கு ரூ.10,600. கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை படிப்பிற்கு 5,40,000 ரூபாயும், முதுகலைக்கு ரூ.9,60,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

’தனியாருக்கு இணையாக அரசு மருத்துவக் கல்லூரி கட்டணம்’ – கட்டண குறைப்பு கோரி மாணவர்கள் போராட்டம்

ஆகவே, பிற அரசு மருத்துவக் கல்லூரிகளை போல், கடலூர் மருத்துவக் கல்லூரியிலமுஅரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க கோரி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியையும் உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

ஆகவே, கடலூர் மருத்துவக் கல்லூரியையும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.

உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் இணைந்து, போராட்டத்தை நடத்தின. போராட்டத்தில், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

இதற்கிடையில், கடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களும், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் 43 நாட்களை எட்டிய நிலையில், நேற்று முன் தினம் (ஜனவரி 21), கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவம் பயிலும் மாணவர்கள், அன்று மாலை 4 மணிக்குள், தங்கள் விடுதியையும், பல்கலைகழக வளாகத்தையும் விட்டு வெளியேற வேண்டும் என்றும், அதை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் சார்பாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவக்கல்வி : சமூக நீதிப் பயணத்தில் மற்றும் ஒரு மைல் கல்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராஜா முத்தய்யா மாணவர்கள் மன்றத்தை சேர்ந்த மாணவர் கூறும் போது, “1928-ல் இருந்தே ராஜா முத்தய்யா மருத்துவக் கல்லூரி அரசுடையதாகதான் இருந்தது. ஆனால் நிர்வாக உரிமை மட்டும் நிறுவனர்களிடம் இருந்தது. 2013-ல் இருந்து அது அரசிடம் சென்றது. கடலூர் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரி என்று பெயர் மாற்றப்பட்டு, அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படுகிறது. இதற்கு 2000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்தார்.

அரசு மருத்துவ கல்லூரிக்கு எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டுமோ அதை வசூலிக்காமல், கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய அம்மாணவர், “கூடுதல் கட்டணத்தை எதிர்த்து நாங்கள் இங்கே 42 நாட்களாக போராடி வருகிறோம். இத்தனை நாள் போராட்டத்தில் அரசாங்கமோ பல்கலைக்கழக நிர்வாகமோ எங்களிடம் வந்து பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. 43-வது நாள், வெளிநோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம் என்று புறக்கணிப்பதாக எச்சரிக்கை கடிதத்தை நிர்வாகத்திற்கு அனுப்பினோம். எந்த பதிலும் இல்லை. நாங்களும் புறக்கணித்தோம்.” என்று கூறினார்.

நீட் மரணங்கள் – கூட்டு மனசாட்சியின் தோல்வி – சீ.நவநீத கண்ணன்

மேலும், “நேற்று முன்தினம் எல்லா மாணவர்களையும் உடனே கல்லூரியிலிருந்து வெளியேற சொல்லி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். அன்று மாலையே உணவு, தண்ணி, மின்சாரம் எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது. கழிப்பறை வசதி இல்லை. விடுதிகள் பூட்டப்பட்டு விட்டது. வெளியே உள்ள அரங்கில் தான் எல்லா மாணவர்களும் இருக்கிறோம். தூங்குவதும் இங்குதான். காலையில் இருந்து சாப்பிடாததால், ஒரு மாணவர் மயக்கமடைந்துவிட்டார். முதலுதவி கொடுத்திருக்கிறோம். இப்பொது, வெளியிலிருந்து ஆள் வைத்து சமைக்கிறோம்.” என்று அந்த மாணவர் கூறினார்.

மருத்துவக் கல்லூரி தவிர்த்து, வெளியிலிருந்து ஆதரவுகள் வருகின்றனவா என்ற கேள்விக்கு, “சிதம்பரத்தில் உள்ள பொது மக்கள் பலர் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். சில உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.” என்று தெரிவித் அவர், போராட்டத்தை குலைக்க நிர்வாகம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் தங்கள் உறுதியை குலைக்காது என்றும், கோரிக்கை வெல்லப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.

‘கொள்ளை’ கட்டணத்தை எதிர்த்து கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – உணவின்றி மாணவர் மயக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்