Aran Sei

உயர்த்தப்படும் அரசு ஊழியர்கள் வயது வரம்பு – ‘தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ரசுப் பணியில் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் படித்துப் பட்டம் பெற்று, ஆண்டுக்கணக்கில் வேலையின்றி காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளன. அரசு வேலை கேட்டு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை சுமார் 1 கோடிக்கும் (ஆண்களும் – பெண்களுமாக) மேல் உள்ளது. பதிவு செய்தாலும் வேலை கிடைக்காது என அதிருப்தியில் பதிவு செய்யாமல் இருப்போரும் பல லட்சம் பேர் இருப்பர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி-களில் அநியாயமாக மறுக்கப்படும் இட ஒதுக்கீடு –  ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்

“மத்திய – மாநில அரசுகள், அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் நேரடி வேலைவாய்ப்பைத் தருவதற்கு மாறாகவும், இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துக் கட்டவும் திட்டமிட்டு தனியாருக்கு பொதுத்துறை நிறுவனங்களைத் தாரை வார்ப்பதோடு – அரசுப் பணிகளில் அவுட்சோர்சிங் முறையை ஊக்குவித்தும், ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில் ஊழியர்களைப் பணியமர்த்தியும் வருகின்றன. இதனை எதிர்த்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வாலிபர், மாணவர், மாதர் இயக்கங்களும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.” என்று அறிக்கையில் நினைவூட்டப்பட்டுள்ளது.

“இந்நிலையில், தமிழகத்தில் அரசுப் பணியில் குறிப்பாக, பல்துறைச் சார்ந்த பணிகளிலும், ஆசிரியர் பணியிடங்களிலும் மொத்தமாக 5 லட்சத்திற்கும் மேலாகக் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இவற்றை பூர்த்தி செய்வதற்கு மாறாக, ஏற்கெனவே பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பைக் கடந்த ஆண்டு 58லிருந்து 59ஆக உயர்த்தியதை சமூக அக்கறையுள்ள செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்ததை தமிழக அரசுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என்று கூறிப்பட்டுள்ளது.

சிங்காரவேலர்: தொழிலாளர் வர்க்க மாவீரன் – பேரறிஞர் அண்ணா

“ஓரிரு மாதங்களில் தமிழகம், சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், வாக்கு வங்கியை மனதிற்கு கொண்டு பல்துறைச் சார்ந்த அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 59லிருந்து 60 ஆக உயர்த்திட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடக செய்திகள் மூலமாக அறிய முடிகிறது. இது காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய மறுப்பது மட்டுமின்றி, வேலை இல்லாமல் தவிக்கும் தமிழக இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் அதிமுக அரசு இழைக்கும் மற்றொரு அநீதியாகும்.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

“அதிமுக அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஓய்வுபெறும் ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணப் பயன்களைக் காலத்தே கொடுப்பதற்கு அரசின் கஜானாவில் பணம் இல்லையென்ற காரணத்திற்காகவே ஓய்வு பெறும் வயது வரம்பை தமிழக அரசு  உயர்த்தி உத்தரவிட்டது என்பதை அரசு மறுக்க இயலாது.” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

“அதேபோல போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு இன்று வரையில் ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்படாமல் பல ஆண்டுகள் இழுத்தடித்து கொண்டுள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பைத் தமிழக அரசு உயர்த்திக் கொண்டே போகும்போது, ஒருகட்டத்தில் ஓய்வுபெறும் போது ஓய்வு கால பலன்கள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற அச்சமும் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.” என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு இமாலய துயரம் கற்பிக்கும் ஆறு பாடங்கள் – ராமச்சந்திர குஹா

“தமிழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எதிர்கால நலன் கருதி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி ஓய்வு வயதை உயர்த்தும் தமிழக அரசின் உத்தேச வயது வரம்பு முடிவை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், கடந்தாண்டு ஓய்வு பெறும் வயது வரம்பை 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் பணி ஓய்வு செய்வதோடு, அவர்களுக்குச் சேர வேண்டிய ஓய்வு கால பலன்களை நிலுவையில்லாமல் வழங்கிட வேண்டும்.” என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனவும், மதிப்பூதியம், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

 

உயர்த்தப்படும் அரசு ஊழியர்கள் வயது வரம்பு – ‘தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்