Aran Sei

’நேற்று விவசாயிகளுக்கு நன்றிக்கடன்; இன்று தடியடி, கல்வீச்சு’ – இரா.முத்தரசன் கண்டனம்

‘நாடு விவசாயிகளுக்கு பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளது’ என்று குடியரசு தலைவர் நேற்று தெரிவித்தார். ஆனால், இன்று மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வுரிமையினைப் பறித்துப் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜனவரி 26), அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த நவம்பர் 26ஆம் தேதியில் ‘டெல்லி சலோ’ அழைப்பை ஏற்று, தலைநகர் டெல்லி சென்ற விவசாயிகளை மத்திய அரசின் காவல்துறையினர் வழிமறித்து தடுத்து நிறுத்தியதால், டெல்லி நகர எல்லைப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து, அமைதி வழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்று அவர் நினைவூட்டியுள்ளார்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒருவர் உயிரிழப்பு – காவல்துறை சுட்டதுதான் காரணமா?

இப்போராட்டத்தை ஆதரித்துப் பல்வேறு மாநிலங்களிலும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்ற நிலையில், இன்று (ஜனவரி 26) குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பு நடைபெறும் என்று விவசாயிகள் போராட்டக் குழு அறிவித்திருந்தது என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகளின் குடியரசு தின அணிவகுப்பைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் விவசாயிகள் திட்டமிட்டபடி அரசின் அதிகாரபூர்வ அணிவகுப்பு முடிவடைந்ததும், விவசாயிகள் குடியரசு தின அணிவகுப்பைத் தொடங்கினர். இந்த அணிவகுப்பு அமைதியாக நடைபெறவிடாமல் டெல்லி காவல்துறை விவசாயிகளையும், அவர்களது வாகனங்களையும் தடுத்து, கண்ணீர் புகைகுண்டுகளை வீசியுள்ளது. தடியடி நடத்தியுள்ளது. கல்வீச்சும் நடத்தப்பட்டுள்ளது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘உழைக்கும் மக்களுக்கு எதிரான மோடி அரசின் அரசப்பயங்கரவாதம்’ – விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம்

மேலும், “நேற்று (25.01.2021) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ’நாடு விவசாயிகளுக்கு பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். ஆனால், மோடியின் பாஜக மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வுரிமையினைப் பறித்துப் போராடும் ஜனநாயக உரிமையை மறுத்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

’விவசாய சட்டத்தை ஆதரித்த எடப்பாடி அரசு ; தமிழக விவசாயிகள் மன்னிப்புக் கேட்கிறோம்’ – பி.ஆர்.பாண்டியன்

மத்திய அரசின் ஜனநாயக விரோதச் செயலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கும் முறையிலும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு கட்சியின் மாவட்டக் குழுக்கள், இடைநிலைக் குழுக்கள், கிளைகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும்  கேட்டுக் கொள்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

’நேற்று விவசாயிகளுக்கு நன்றிக்கடன்; இன்று தடியடி, கல்வீச்சு’ – இரா.முத்தரசன் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்