இந்தியாவை பொறுத்தவரை சொந்தத்திற்குள், அதுவும் நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் தமிழ்நாட்டில் தான் அதிகளவில் உள்ளது என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-2021 இல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்ளும் நடைமுறையில் 27.9விழுக்காட்டுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக கர்நாடகா 26.6 விழுக்காட்டுடன் இரண்டாவது இடத்திலும், 26.4 விழுக்காட்டுடன் ஆந்திரா மூன்றாம் இடத்திலும், 19.2 விழுக்காட்டுடன் புதுச்சேரி நான்காம் இடத்திலும், 18.2 விழுக்காட்டுடன் தெலுங்கானா ஐந்தாம் இடத்திலும் உள்ளது.
ஆனால் இந்திய அளவில் நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் 11 விழுக்காடாக உள்ளது.
இந்த ஆய்வின்படி, தமிழ்நாட்டில் இன்றைய இளம் பெண்கள் பலரும் தங்கள் கணவருக்கு ஏதோவொரு வகையில் உறவுக்காரராக இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கிராமத்தில் வசிப்போர், நகரத்தில் வசிப்போர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், எல்லா பெண்களுமே இப்படியான வரைமுறைக்குள் சிக்கிக்கொள்கின்றனர் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.
இஸ்லாமியர்களின் கருவுறுதல் விகிதம் கடும் சரிவு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்
மதரீதியாக பார்க்கையில், இஸ்லாமியர்கள் அதிக அளவில்(15.8%) சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு அடுத்தபடியாக புத்த மதம் / நவ -புத்த மதத்தை சேர்ந்த 14.5 விழுக்காட்டினர் நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்கின்றனர். கிறிஸ்தவர்களிடையே இது 11.9 விழுக்காடாகவும், இந்துக்களிடையே 10.1 விழுக்காடாகவும் உள்ளது.
சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அதிகபட்சமாக நடுத்தர வர்க்கத்தினரிடையே 13 விழுக்காடாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மேல் நடுத்தர வர்க்கத்திடம் 12.7 விழுக்காடாகவும், கீழ் நடுத்தர வர்க்கத்திடம் 10.8 விழுக்காடாகவும், பணக்கார வர்க்கத்திடம் 9.6 விழுக்காடாகவும், ஏழை மக்களிடம் 7.5 விழுக்காடாகவும் உள்ளது.
இந்திய அளவில் 2.5 விழுக்காட்டுக்கும் அதிகமான குடும்பங்களால் நடத்தி வைக்கப்படும் திருமணங்கள் வெவ்வேறு உறவு முறைகொண்ட, ஆனால் ரத்த சம்பந்தம் இருக்கும் நபர்களுக்குள்தான் நடக்கிறது. 0.1% பெண்கள், தங்கள் அக்கா கணவரின் தம்பி முறை உள்ள நபர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
தாய்வழி சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும் விகிதம் தேசிய அளவில் 4 விழுக்காடாக உள்ளது. அதே சமயம், இவ்விகிதம் அதிகபட்சமாக கர்நாடகாவில் 13.9 விழுக்காடாக உள்ளது. அடுத்த இடங்களில் ஆந்திரா (11.6%), தமிழ்நாடு (11.2%), புதுச்சேரி (7.6%), தெலங்கானா (5.3%) மாநிலங்கள் உள்ளன.
தந்தைவழி சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும் விகிதம் தேசிய அளவில் 4 விழுக்காடாக உள்ளது. அதே சமயம், இவ்விகிதம் அதிகபட்சமாக ஆந்திராவில் 10.5 விழுக்காடாகவும், அதற்கு அடுத்த இடங்களில், தமிழ்நாடு (10%), தெலங்கானா (9.9%), கர்நாடகா (9.6%), புதுச்சேரி (7.6%) உள்ளன.
இந்த ஆய்வு முடிவை தொடர்ந்து “இப்படி நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மரபு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அதுகுறித்து அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, தங்களுக்கு தாலிசீமியா, நோயெதிர்ப்பு குறைபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்றும், அப்படி இருந்தால் உறவுக்குள் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை மீறி திருமணம் செய்துகொள்ளும்பட்சத்தில், அந்த பெற்றோர் தங்களின் கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு அது சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
“நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் என்பது சாதி மற்றும் பரம்பரை என்ற 2 காரணங்களால் தான் இந்தியாவில் நடக்கிறது. சாதி என்பது கடந்த காலத்தின் ஒரு விஷயம் என்று நாம் எவ்வளவுதான் நம்ப விரும்பினாலும், அது இன்றளவும் தொடரும் பரவலான சமூக அமைப்பாகும். இப்பொழுதும் கூட ஒரே சாதியில் உள்ள துணை சாதிகளிடம் திருமண உறவை வைத்து கொள்ள பலர் விரும்புவதில்லை. நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்வதுதான் அவர்களின் சொத்தை கடத்துவதற்கு வசதியாக உள்ளது” என்று பிரபல சமூகவியலாளர் ஆர்.இந்திரா தெரிவித்துள்ளார்.
Source : TOI, the hindu
கலைஞரை வசைபாடும் சாதிவெறியர்கள் | Makizhnan | Indra Kumar
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.