உத்தரப் பிரதேச மாநிலம் காஷ்மீர், கேரளா அல்லது மேற்கு வங்கமாக மாறும் என பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.
பிப்பிரவரி 9 அன்று மாலை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது மாநில மக்களுக்கு காணொளி வழியாக அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, “உத்தரப் பிரதேசத்தை கைப்பற்றி ஆட்சி அமைக்க சிலர் முயல்கிறார்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலோ, வாக்கு செலுவத்தில் இருந்து கொஞ்சம் தவறினாலோ இந்த ஐந்தாண்டுகள் நான் செய்த உழைப்புகள் அழிந்துவிடும். காஷ்மீர், கேரளா மற்றும் மேற்கு வங்கம் போல உத்தரப் பிரதேசம் மாறிவிடும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்திருந்த கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், “யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல் உத்தரப் பிரதேசம், கேரளாவாக மாறினால், சிறந்த கல்வி, சுகாதார சேவைகள், சமூக நலன், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அம்மக்கள் பெறமுடியும். மேலும், மதம் மற்றும் சாதியின் பெயரால் மக்கள் கொல்லப்படாத ஒரு நல்லிணக்கமான சமுதாயமாக அம்மாநிலம் மாறும். அதைத்தான் உத்தரப் பிரதேச மக்களும் விரும்புவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
யோகி ஆதித்யநாத்தின் கருத்துகளுக்கு பல தலைவர்களிடம் இருந்தும் கண்டனம் வந்தன.
கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள மக்களே! உத்தரப் பிரதேசம், கேரளாவைப் போல ஆக வாக்களியுங்கள். மதவெறி விடுத்து பன்முகத்தன்மை, நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றைத் தேர்ந்தெடுங்கள். கேரளக்காரார்கள், வங்காளிகள் மற்றும் காஷ்மீரிகளும் பெருமைமிகு இந்தியர்கள்தான்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று(பிப்பிரவரி 11), மக்களவையில், யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மாநிலங்களவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ், யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இது தொடர்பாக விவாதத்திற்கு அனுமதி கோரியுள்ளார்.
“ஆனால், விவாதத்திற்கு அனுமதி வழங்கப்படாததால், இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் இளமரம் கரீம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.