அர்னாப் கோசாவாமிக்கும், பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் இடையே, பாலகோட் தாக்குதல் தொடர்பாக நடந்த வாட்ஸ் அப் உரையாடல்கள், தேசப் பாதுகாப்பு விதிகளை மீறியது என்பதால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று (ஜனவரி 22) காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றுள்ளது. அதற்கு, கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கியுள்ளார்.
கூட்டத்தில் சோனியா காந்தி, “அனைத்து விவகாரங்களும் வெளியே வந்தபின்பும் எதுவும் தெரியாததுபோல் மத்திய அரசு மவுனமாக இருக்கிறது. தேசப் பற்றாளர்கள், தேசியவாதம் பற்றி பிறருக்குச் சான்றளித்தவர்களின் நிலைப்பாடு தற்போது அம்பலமாகிவிட்டது.” என்று விமர்சித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடல் தேசப் பாதுகாப்பு விதிகளை மீறியது, ரகசியக் காப்புச் சட்டத்தை மீறியதால் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘தேசதுரோகி அர்னாப் கோஸ்வாமியை கைது செய்’ – மகாராஷ்ட்ராவில் வலுக்கும் எதிர்ப்பு
அந்த தீர்மானத்தில், “…நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து யாரெல்லாம் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும், யாருக்குப் பங்குள்ளது என்பது குறித்தும், குறிப்பிட்ட காலவரையரைக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் உரையாடல்களில் கூறப்பட்டுள்ளவைகள் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமின்றி, தேசப் பாதுகாப்பைச் சமரசம் செய்துகொள்வதாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள தீர்மானத்தில் “ராணுவச் செயல்பாடுகள் தொடர்பான நுணுக்கமான தகவல்கள், பாதுகாப்பு விதிகளும் மீறப்பட்டுள்ளன. மத்திய அரசில் உயர்ந்த அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் இதில் தொடர்பில் உள்ளனர் என்பது தெளிவாகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான மோசமான தாக்குதல், அரசின் கொள்கைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துதல், அவதூறு செய்தல், அரசின் கட்டமைப்புகளை அடிபணிய வைத்தல் போன்ற மன்னிக்க முடியாத விஷயங்கள் நடந்துள்ளது என்று அந்த தீர்மானம் குறிப்பிட்டுள்ளது.
“அரசு சாராத நபர்களுடன் இணைந்து மோடி அரசு வெட்கக்கேடான சமரசம் செய்து கொண்டது வெளிப்பட்டுவிட்டது. ஆனால், இவ்வளவு நடந்தும், பிரதமர் மோடியும், மத்திய அரசும் தொடர்ந்து மவுனமாகவே இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதற்கும், இந்திய எதிரிகளுக்கு உதவியதற்கும் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.