வருங்கால இந்தியாவுக்கு தமிழ் மொழியும் அதன் கலாச்சரமும் முக்கியமானது என்றும் அதை நசுக்க முயற்சி நடைபெறுகிறது என்றும் மதுரைக்கு ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரவுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, இன்று (ஜனவரி 14) ராகுல் காந்தி டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது, அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
அங்கிருந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்துக்குச் சென்று, பார்வையாளர்கள் மேடையில் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை ராகுல் காந்தி கண்டு ரசித்துள்ளார். ராகுல் காந்தி அருகில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இருந்துள்ளார்.
மதுரைக்கு ஜல்லிக்கட்டு பார்க்க வரும் ராகுல் காந்தி – இது ’ராகுல் காந்தியின் தமிழ் வணக்கம்’
இதனை அடுத்து, விழா மேடையில் பேசிய ராகுல் காந்தி, “உங்கள் கலாசாரம், பண்பாட்டை அறிந்த கொள்ள வந்துள்ளேன். விழா ஏற்பாடு நிறைவாக இருந்தது. வருங்கால இந்தியாவுக்கு தமிழ் கலாச்சரமும் மொழியும் முக்கியமானது. தமிழ் மொழியும், கலாச்சாரமும் செழிக்க பாடுபடுவர்களுக்கு என் வாழ்த்துகள். தமிழக மக்களோடு சேர்ந்து உறுதுணையாக இருப்பேன். மாடு பிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும்.” என்று தெரிவித்துள்ளார். இதைக் காங்கிரஸ் தமிழக கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
அப்போது, விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி, சில மாடுபிடி வீரர்கள் கருப்புக் கொடியுடன் முழக்கமிட்டதாகவும், அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் ‘புதிய தலைமுறை’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதைக் தொடர்ந்து, மதுரை மாவட்ட தென்பலன்ஞ்சி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை துன்புறுத்துவார்கள் என்று முதலில் என்னிடம் சொல்லப்பட்டது. ஆனால், ஜல்லிக்கட்டை நேரில் பார்க்கும்போது அதில் எந்த துன்புறுத்தலும் இல்லை என்ற உண்மையை இன்று தெரிந்துகொண்டேன். ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று புரிந்துகொண்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
‘தமிழ்மொழி எதிர்ப்பில் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் அதிமுக ‘ – கனிமொழி குற்றச்சாட்டு
“தமிழக மக்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதற்காக தமிழக மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலாசாரங்கள் நசுக்கப்படுகின்றன. தமிழ் மொழியை நசுக்க முயற்சிகள் நடைபெறுகிறன.” என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு பிரதமரா? அல்லது தொழிலதிபர்களுக்கு பிரதமரா? மத்திய அரசுக்கு நண்பர்களாக உள்ள 4 பேருக்காகதான் விவசாய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. விவசாய சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை அழிக்க முயற்சிகள் நடைபெறுகிறது.” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மறுபுறம், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இன்று (ஜனவரி 14) சென்னை மதுரவாயலில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள ’நம்ம ஊர் பொங்கல்’ விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும், பின்னர் கலைவாணர் அரங்கில் நடக்கும் துக்ளக் விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.