விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் பேரணியின்போது நடந்த வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வி தான் காரணம் என்றும் இதற்கு உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அமித் ஷாவை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
நேற்று (ஜனவரி 27), இது தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறும்போது, “சட்ட ஒழுங்கு மற்றும் உளவுத்துறை தோல்விகளால் இந்த வன்முறை நடந்துள்ளது. இது கடந்த ஓராண்டில், தலைநகர் டெல்லியில் நடக்கும் இரண்டாவது வன்முறை சம்பவமாகும்.” என்று சென்ற ஆண்டு டெல்லியில் குடியுரிமை சட்டத்தை நீக்கக் கோரிய போராட்டத்தின்போது நடந்த வன்முறை சம்பவத்தை மேற்கோள்காட்டி, இரண்டிற்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் அல்லது அவரைப் பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
செங்கோட்டை டிராக்டர் பேரணி வன்முறை: விவசாயிகள் தலைவர்கள் மீது வழக்கு
வன்முறையாளர்களை விடுத்து விவசாயச் சங்கத் தலைவர்கள்மீது மத்திய அரசு வழக்குத் தொடுத்து வருகிறது என்றும் இது மோடி அரசின் சதியையும் சூழ்ச்சியையும் அம்பலப்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “உளவுத்துறை எச்சரித்தும் விவசாயிகள் பேரணியில் வன்முறையாளர்கள் புகுந்திருக்கின்றனர் என்றால் அதற்கு அமித் ஷா தான் காரணம். எனவே அவர் உள்துறை அமைச்சராக இருக்க தகுதியற்றவர். பிரதமர் மோடி அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். இல்லையேல், பிரதமர் அமித்ஷாவிற்கு அரணாக இருந்து அவரைப் பாதுகாத்து வருகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.” என்று ரந்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.