குடியரசு தின விழா நிகழ்வுகளின் இறுதியில் பாசறைக்குத் திரும்பும் அணிவகுப்பில் இசைக்கப்படும் ‘அபைட் வித் மீ’ என்று காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான பாடலை நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1950ம் ஆண்டு முதல் விஜய் சௌக் பகுதியில் ஜனவரி 29 அன்று நடைபெறும் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வில் ‘அபைட் வித் மீ’ இசைக்கப்பட்டு வந்துள்ளது.
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான பாடல் என்பதால் தான் 1950ல் இந்தப் பாடல் பாசறைக்கு திரும்பும் முப்படைகளின் அணிவகுப்பில் சேர்க்கப்பட்டு கடந்த 71 ஆண்டுகளாக இசைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தப் பாடல் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். வீர ஈகியர்களான நமது படைவீரர்களை நினைவு கொள்வதற்காகவே இந்தப் பாடல் இசைக்கப்படுகின்றது.
காயப்பட்ட உள்ளங்களை தேற்றுவதைத் தான் இந்தப் பாடல் வெளிப்படுத்துகின்றது. இந்தப் பாடலை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைப்பது ஒன்றிய அரசின் குறுகிய பார்வையை வெளிப்படுத்துகின்றது.
கோட்சேவைப் புகழும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாஜக காந்தியடிகளை புறந்தள்ள எடுத்துவரும் பல மறைமுக முயற்சிகளில் ஒன்றாகவே இந்தப் பாடல் நீக்க முடிவும் அமைந்துள்ளது.
முப்படைகளின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பாலிவுட் பாடல் ஒன்றுக்கு கடற்படை வீரர்கள் நடனமாடி இசைக்கும் பாடல் அணிவகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் இணையதளம் அளிக்கும் தகவல் மோடி அரசின் தராதரத்தை அம்பலப்படுத்துகின்றது.
காந்தியடிகளுக்குப் பிடித்தமான பாடல் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என கோட்சே சாய்வு ஒன்றிய அரசை இந்திய மக்களின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.