Aran Sei

‘ஸ்டாலினின் கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டும்’ – இலங்கை எம்.பி., கோரிக்கை

மிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு எம்.பி.,யுமான மனோ கணேசன் கோரியுள்ளார்.

ஏப்ரல் 7ஆம் தேதி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசியிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அனுமதி அளிக்குமாறு கோரியிருந்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, ஏப்ரல் 7ஆம் தேதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்துப் பேசினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையைப் போன்றே இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் – சஞ்சய் ராவத் எச்சரிக்கை

“இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்” என்று கூறப்பட்டிருந்தது.

“இதுதொடர்பாக இந்தியப் பிரதமரை கடந்த 31-3-2022 அன்று சந்தித்து, தான் முன்வைத்த கோரிக்கைகளை நினைவுகூர்ந்த முதல்வர், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்றும் அப்போது கேட்டுக் கொண்டார்” என்று அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் மலையகத் தமிழர்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 10), தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு எம்.பி.,யுமான மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதலமைச்சரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்வரின் மு.க.ஸ்டாலினின் சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டுமென கோருகிறோம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் உச்சத்தை தொட்டுள்ளது. அதனால், மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

‘ஸ்டாலினின் கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டும்’ – இலங்கை எம்.பி., கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்