கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ராமு என்ற நபர் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து அனைத்துக் கட்சியினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள போகம்பட்டி அடுத்த பொன்னாங்காணி பகுதியை சேர்ந்தவர் ராமு (47). இவர் தனது சக்கர வாகனத்தில் கடந்த 7ஆம் தேதி சென்று கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த மயில்சாமி என்கிற பால் வியாபாரியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் இரு சக்கர வாகனங்களும் இரண்டும் கீழே விழுந்த நிலையில் மயில்சாமி கொண்டு வந்த பால் கீழே கொட்டியது.
இது தொடர்பாக இரு தரப்பினரின் குடும்பத்தினரும் மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அன்று மாலை மீண்டும் ராமுவின் வீட்டுக்கு சென்ற மயில்சாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் ராமுவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த ராமு, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக ராமுவின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ராமு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் மயில்சாமி உட்பட 14 பேர் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இந்த சம்பவம் தொடர்பாக பொன்னாங்காணி பகுதியைச் சேர்ந்த பாலகுரு, பூபதி, மயில்சாமி, மாரிமுத்து, மோகன்ராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இன்று அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் கணேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் ராமு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் திராவிட தமிழர் கட்சி ,ஆதி பேரவை , புரட்சிகர இளைனர் முண்ணனி , திராவிட விடுதலை கழகம் , உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.