தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வை இணைத்தது பாஜகவின் உண்மை முகத்தைக் காட்டுவதாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டதை அமைச்சர் மனோ தங்கராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த ட்விட்டர் பதிவை முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய பக்கத்தில் ரீட்வீட் செய்திருந்தார்.
ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட தமிழணங்கு ஓவியத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்துடன், ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே…’ என்று பெருமையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்திருந்தார்.
`டான்’ – லும்பன் கலாச்சாரம், மாணவர் அரசியல், முதல் தலைமுறை பட்டதாரிகள் – ஒரு பார்வை
இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தமிழணங்கே’ என்ற தலைப்பில் எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்கிற வரிகளுடன் தமிழ் தாய் என்று ஒரு ஓவியத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த ஓவியத்தை ம.யாஷிகா என்பவர் வரைந்திருக்கிறார்.
பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்த ஓவியத்தின் பின்னணியில் ‘ஸ’ என்கிற எழுத்துப் பதியப்பட்டிருந்தது.
‘ஸ’ வைச் சுட்டிக்காட்டி தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார். pic.twitter.com/XjtVP1nGKq
— Thangam Thenarasu (@TThenarasu) May 16, 2022
அமைச்சர் பகிர்ந்த குறளும் அதன் விளக்கமும்
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து – 828
உரை: பகைவர்கள் வணங்கும் போதும் அவர்களின் கைக்குள் கொலைக்கருவியை மறைத்து வைத்திருப்பர். அதுபோல, அவர்கள் கண்ணீர் சிந்தி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
தமிழர்கள் கொல்லப்படும் போது Modi என்ன செஞ்சாரு? Seeman
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.