ஆசிய-பசிபிக் நாடுகளில் நிகழும் புலம்பெயர்வு, ஆட்கடத்தல், அகதிகள் சிக்கல், ஆவணங்களற்ற குடியேறிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை விவரிக்கும் அண்மைச் செய்திகளின் தொகுப்பு இது.
இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் இடம்பெயர்ந்த 49 லட்சம் மக்கள்: ஐ.நா. அறிக்கை
கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரிடர்களின் காரணமாக 49 லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமையின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அறிக்கையின் கூற்றுப்படி, போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள், உணவு பாதுகாப்பின்மை, காலநிலை நெருக்கடி காரணமாக உலகெங்கும் 10 கோடி மக்கள் கட்டாய புலம்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இயற்கைப் பேரிடர்கள் காரணமாக சீனாவில் 60 லட்சம் பேரும் பிலிப்பைன்சில் 57 லட்சம் பேரும் இடம்பெயர்ந்திருக்கின்றனர். இயற்கைப் பேரிடர்களால் நிகழும் பெரும்பாலான இடப்பெயர்வுகள் தற்காலிகமானவை என ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கனமழை, பெருவெள்ளம், நிலச்சரிவு காரணமாக சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் 72 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 1.86 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். மேகாலயாவில் 30 பேர் பலியாகியுள்ளனர்.
இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தை சந்தித்த ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர்
ஆஸ்திரேலியாவில் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியிருந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தினர் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் சந்தித்து உரையாடியிருக்கிறார்.
தாராளவாத- தேசிய கூட்டணி ஆட்சி நிகழ்ந்த காலகட்டத்தில், இந்த குடும்பத்தினரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. அம்முயற்சி தடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் தடுப்பு முகாம், சமூகக் காவல் என நான்காண்டுகள் சிறைப்பட்டுக் கிடந்தனர். இக்குடும்பத்தினரின் விடுதலைக்காக பிலோலா நகர மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தொழிற்கட்சி அரசாங்கம் இக்குடும்பத்தினருக்கு இணைப்பு விசாக்களை வழங்கி முன்பு வாழ்ந்த பிலோலா நகருக்கள் அனுமதித்திருக்கிறது.
கடந்த 2012 யில் நடேசலிங்கமும் 2013 யில் பிரியாவும் இலங்கையிலிருந்து படகு வழியாக வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தவர்கள். ஆஸ்திரேலியாவிலேயே சந்தித்து திருமணம் செய்துகொண்ட தஞ்சக்கோரிக்கையாளர்களான இவர்களுக்கு கோபிகா, தர்ணிகா எனும் இரு பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த குடும்பத்தினரை நான்காண்டு காலம் சிறை வைத்திருந்ததற்காக 30 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை தாராளவாத அரசாங்கம் செலவழித்திருக்கிறது.
அகதிகளை சிறைவைக்கும் கடல் கடந்த தடுப்பு முகாமை நடத்துவதில் உறுதியாக இருக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களை சிறைவைக்க பயன்படுத்தப்பட்டு வரும் நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் தொடர்ந்து செயல்படும் என ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் உறுதியாகக் கூறியுள்ளார். பிராந்திய பரிசீலனை மையம் என அழைக்கப்படும் இந்த நவுருத்தீவு முகாம் ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. இந்த முகாமிற்காக நவுருத்தீவு அரசுக்கு 135 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை ஆஸ்திரேலியா கட்டணமாக செலுத்துகிறது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் மீண்டும் செயல்பட்டு வரும் இம்முகாமில் பல ஆண்டுகளாக இன்னும் 112 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா? – ஆர். அபிலாஷ்
பசிபிக் தீவு நாடான நவுருத்தீவின் 2022-23 வரவு செலவு திட்டத்தின் படி, அந்த நாட்டின் வருவாய் மதிப்பீடு 250 மில்லியன் டாலர்களாகும். அதில் சரி பாதிக்கும் மேலான தொகை இந்த அகதிகள் தடுப்பு முகாமின் வருவாயிலிருந்தே (135 மில்லியன்) கிடைக்கிறது.
ஆஸ்திரேலியாவை நோக்கி மீண்டும் படகுகளில் செல்லும் இலங்கைத் தமிழ் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி உணவு, எரிபொருள், வேலை, மருந்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளின் மீதும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. இந்த சூழலில், கடந்த பல ஆண்டுகளாக குறைந்திருந்த ஆஸ்திரேலியாவை நோக்கிய படகுப் பயணங்கள் மீண்டும் பெருமளவில் நிகழ தொடங்கியிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் சுமார் 400 இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சித்திருக்கின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆஸ்திரேலியாவின் கடல் பகுதியில் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்
ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சி வந்துள்ளதால் ‘அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்’ என இலங்கை மக்களை ஆட்கடத்தல்காரர்கள் நம்ப வைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், ‘படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ என்ற எல்லைக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. கடந்த காலங்களில் போர் மற்றும் இன ரீதியிலான அச்சுறுத்தல் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் பயண ஆவணங்களின்றி நுழைய முயன்ற இந்தியர்கள் கைது
தாய்லாந்தின் Dannok எல்லை வழியாக மலேசியாவின் Changlun பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக 6 இந்தியர்களை மலேசிய படையினர் கைது செய்துள்ளனர்.
வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றி வந்த நான்கு லாரிகளில் உதவியாளர்களை போல வந்த இந்தியர்களை சோதித்த பொழுது முறையான பயண ஆவணங்களின்றி 6 இந்தியர்களும் பயணித்தது தெரிய வந்துள்ளது. இந்திய குடியேறிகளை கடத்தி வருவதற்காக லாரி ஓட்டுநர்களுக்கு 500 மலேசிய ரிங்கட்டுகளை (சுமார் 9 ஆயிரம் இந்திய ரூபாய்- ஒரு குடியேறிக்கு) ஆட்கடத்தல் கும்பல் செலுத்தியிருக்கிறது. இதில் கைதான இந்தியர்கள், ஆட்கடத்தல் கும்பலின் பேச்சை நம்பி மலேசியாவில் வேலை செய்ய வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
– தமிழ்ப் பிரபாகரன்
இந்தியாவுக்கான புலம்பெயர்வு செய்தியாளர்
சர்வதேச புலம்பெயர்வு திட்டம்
பாஜக ஆப்ரேஷன் தமிழ்நாட்டில் நடக்காது | Maharashtra political crisis | Surya Xavie
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.