Aran Sei

காலநிலை மாற்றம்: அறிவுசார் உரையாடலுக்கான தேடல் – மு.அப்துல்லா

காலநிலை மாற்றம் இன்று நிலவும் எதார்த்தம் என்பதை ஒப்புக்கொண்ட பிறகே அதன் தொடர்பான செயல்பாடுகளை எதிர்கொள்கிறோம். இதனை, ஒரு அவசரப் பிரச்சனையாகக் கருத வேண்டுமா, நாளையே பூமி அழிந்துவிடப் போகிறதா என்ன? போன்ற சாமானிய வாதங்கள் தொடங்கி சூழலியல் போராட்டங்களுக்கு எதிரான அரசியல் வரை காலநிலை மாற்றம் குறித்த வாதங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ‘காலநிலை மாற்றம் என்பதே பொய்'[1] என்று கூறிய ட்ரம்ப் போன்ற சிறப்பு மனிதர்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால், இன்றைய சூழலியல் நெருக்கடிகளை நன்கறிந்தவர்கள், கல்விப்புலத்தில்  மேனிலையில் இருக்கும் அறிவுஜீவிகள், ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் போன்றவர்கள் அது சார்ந்த உறுதியான நிலைப்பாட்டை ஏற்க மறுக்கின்றனர். சூழலியல் செயற்பாடுகளை வளர்ச்சியோடும் தொழில்நுட்பத்தோடும் ஒப்பிட்டு, அதனை ஓர் பிற்போக்கு அம்சமாகக் குறை கூறுவதிலும் பலர் முன்னணியில் இருக்கிறார்கள். இந்நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான திறந்த உரையாடலை எவ்வாறு மேற்கொள்வது, குறிப்பாக இந்தியா போன்ற பொருளாதாரத்தில்  பிற்பட்ட நிலப்பகுதியிலிருந்து அதன் அரசியலை அணுகுவது என்ற தேடலே நாளைப் பற்றிய கவலையாக இருக்கும்.

காலநிலை மாற்றம் ஒரே நொடியில் நம்மை அடித்து வீழ்த்திவிடும் பூதமல்ல, அப்படி எதுவும் இன்று இருப்பதாகத் தெரியவில்லை போன்ற கவலையின்மையைக் குறை கூறமுடியாது. ஒருவிதத்தில், இந்த நிலைப்பாடே நமக்கான சமாதானமாகக் கூட எடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்னொருபுறம், இயற்கையே ‘சிக்கலான அமைப்புமுறையை'(Complex System) கொண்டது[2]. பூமி தோன்றிய காலத்திலிருந்து ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அதன் தன்மையின் மாற்றத்தைத் தடுக்க முடியாது. அதன்போக்கில் பயணிக்க வேண்டும் என்று தர்க்கத்தோடு வாதிடுபவர்களும் உண்டு. ஆனால், பூமியின் இயக்கத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் குறித்த கால இடைவெளி, இயற்கை காரணங்கள், அதைக் கணிக்கத் திடமான வகைமைகளும் இருந்தது. காலநிலை மாற்றம் இயற்கையால் மட்டும் நிகழ்வதல்ல, மனித செயலினால் ஏற்பட்டது. மனித ஆற்றலால் கட்டுப்படுத்த முடியாத எதிர்நிலைக்குச் சென்றுள்ளது. இதனை நாம் உணரும் முன்னரே தொழில்நுட்பத்தில் முன்னேறிய மேற்கத்திய ஆளும் வர்க்கம் உணர்ந்திருந்தது. சூழலியல் பாதுகாப்பைச் சந்தையைப் பாதிக்காமல் மேற்கொள்வது என்ற ரீதியில், அதை ஒரு பொருளின் (Product) டிவி விளம்பரமாகச் சுருக்கியதே அவர்கள் செய்த அருமுயற்சி.

“தென்னாடுடைய சிவனும் நந்தனை எரித்த நெருப்பும்” – சூர்யா சேவியர்

‘அமெரிக்காவை அழகாக வைத்திருத்தல்’ (Keep America Beautiful) என்ற பெயரில் 1953ம் ஆண்டு தொடங்கிய பிரச்சார இயக்கம் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் மீது கவனம் குவித்தது. ‘வாழ்விடத்தை நேசித்தல்’ (Love where you Live) என்று 2011ம் ஆண்டு பிரிட்டனில் உருவான இயக்கமும் குப்பைகளையும் ஆற்று மாசுவையும் பேசியது. இன்று COP26 க்கு உலகின் முன்னணி நிறுவனங்கள் ‘பிராண்ட் தூதர்களாக’ மாறியதுபோல், அன்றே  பிரிட்டன் டெடி, இம்பேரியல் டொபாக்கோ, மெக் டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் அந்த பிரச்சாரங்களைச் செய்தனர். சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களோ இல்லையோ பிரிட்டனின் பள்ளிக்குழந்தைகள் வரை டொபாக்கோவை அறிமுகப்படுத்தினார்கள் என்ற பெருமையும் அவர்களுக்குண்டு.

இதுபோன்ற பெரு நிறுவனங்களின்  மேலோட்டமான சூழலியல் பிரச்சாரங்கள், பிற்காலத்தில் சூழலியல் தொடர்பான அறிவியலை வரையறுப்பது என்ற தீவிர நிலையை அடைந்தது. ‘தனிநபர் கார்பன் வெளியீடு’ (Personal Carbon Footprint) கண்டுபிடிக்கப்பட்ட  பிறகு, பிரிட்டனின் பன்னாட்டு எண்ணெய் நிறுவனமான ‘பீபி’ (BP) புதைபடிம எரிபொருளுக்கு (Fossil fuels) எதிரான போராட்டத்தைத் திசைதிருப்பத் தனிநபர் கார்பன் வெளியீட்டை சூழலியல் கேட்டின் பிரச்சாரமாக்கியது. குளிர்காலத்தில் ஸ்ட்ராபெரி உண்ட தனது கடைநிலை ஊழியனின் நுகர்வைக் குறித்து நொந்துக்கொண்ட ஷெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Ben van Beurden, ‘அளவாக உண்ணுங்கள், அதிகம் மறு சுழற்சி செய்யுங்கள்!’ என்று  2019ம் ஆண்டு தனது உரையில் கூறினார்[3]. இந்த குற்றச்சாட்டெல்லாம் ஒட்டுமொத்த சூழலியல் கேட்டிற்கும் பொறுப்பாகச் சாமானியனை கைகாட்டியது. ஆரம்பக் காலங்களில், மக்கள் தொகை பெருக்கம்தான் வளங்கள் பற்றாக்குறைக்குக் காரணம் என்பது தொடங்கி ஒரு சாமானியன் மரம் நடத்தவறியதும், மழை நீரைச் சேமிக்காததும்தான் மகா பாவம் என்று பள்ளி புத்தகங்கள் முதல் அரசின் விளம்பரங்கள் வரை போதித்தன. ஒவ்வொரு தனிநபர்களுக்கும் தாம் வாழும் சூழல் மீதான பொறுப்புணர்வு உண்டு  என்றாலும், சீரற்ற அமைப்பை அதனால் மாற்றிவிட முடியாது. காலநிலை மாற்றம் தொடர் இயக்கத்தின் விளைவாக ஏற்படுகிறது, அந்த இயக்கத்தை நிகழ்த்தும் அமைப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலமே அதனைத் தடுக்க முடியும். அதில் சிறிய தீர்வுகள் (Micro Sollutions) எதுவும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. உதாரணமாக, மக்கள் அனைவரும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கூட அந்தளவிற்கு சூழலியல் கேட்டின் காரணியல்ல என்ற ஆய்வும் இருக்கவே செய்கிறது. டென்மார்க் சுற்றுச்சூழல் அமைச்சரவையின் ‘வாழ்வாதார சுழற்சி மதிப்பீடு 2018’ (Life cycle Assessment), ‘ஒரு சாதாரண பிளாஸ்டிக் எவ்வித பயனும் இல்லையென்றாலும், காலநிலை மாற்றம், ஓசோன் பாதிப்பு, தண்ணீர் பயன்பாடு, காற்று மாசு ஆகியவற்றைக் கணக்கிடையில்  ஒரு இயற்கை காட்டன் பையின் பாதிப்பு 20,000 பிளாஸ்டிக் பைகளுக்கு ஈடானது’ என்று கூறுகிறது[4]. ஆதிக்கம் செலுத்தும் காரணிகளைத் தவிர்த்து பிளாஸ்டிக்கை நோக்கி மட்டுமே குவியும் பரப்புரைக்கு எதிரான வாதமாக இதைக் காண வேண்டும்.

‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்

வெகுமக்கள் மீது திணிக்க முற்படும் பாப்புலிச பிரச்சாரங்களைக் கடந்து சூழலியல் விளைவு தவிர்க்க முடியாமல் போனதே ஆளும் வர்க்கங்களின் நவீன அக்கறைகளுக்குக் காரணம். முக்கிய உதாரணம், தொழில்நுட்பவாதியும் உலகின் முன்னணி முதலாண்மைவாதியுமான பில் கேட்ஸ் காலநிலை மாற்றத்திற்கு எதிரான தூதுவராக மாறியது. இயற்கை பேரிடர் அருட்கொடைகள், சொற்பொழிவுகள் என்று செயல்பட்டு வந்த பில் கேட்ஸ், தன் பணியின் உச்சபட்சமாக  ‘காலநிலை மாற்றத்தைத் தவிர்ப்பது எப்படி?’ (How to Avoid a Climate Disaster: The Solutions We Have and the Breakthroughs We Need) என்ற மாபெரும் நூலை எழுதி கடந்தாண்டு வெளியிட்டார். நம்முன் இருக்கும் பிரச்சனை சிறியதாக இல்லாதபோது எளிதில் கடந்து சென்றுவிட முடியாது எனும்  அவர், அதை எதிர்கொள்ள மூன்று தீர்வுகளை வழங்குகிறார். முதலில் கார்பன் வெளியேற்ற அளவை பூஜ்யமாக்குதல் (Net Zero Carbon). தற்போது ஆண்டுக்கு 51 பில்லியன் டன் பசுமை வெளி வாயுக்கள் (Green House gases) வெளியிடப்படுகிறது. இரண்டாவது, ஆற்றல் துறையில் புதுப்பிக்கக் கூடிய வளங்களான சோலார், காற்று மற்றும் பிற அதிவேக உபகரணங்களைப் பயன்படுத்துதல், மூன்றாவது, புதிய தொழிற்நுட்பங்களை கண்டடைதல். இவை மூன்றும் அறிவியலாளர்கள் சொல்வதும் அனைத்து தரப்பினராலும் ஏற்பதுமே ஆகும். ஒருவகையில் புதைபடிம எரிபொருள்கள் சார்பாக மேற்கொண்ட பிரச்சாரத்திலிருந்து விலகியிருக்கிறார் கேட்ஸ். ‘பசுமை வெளி வாயுக்கள் வெப்பநிலையை அதிகரிக்கிறது என்று தெரியும். ஆனால், ஏதாவது சுழற்சியல் மாற்றமோ அல்லது இயற்கையான தடுப்போ சூழலியல் அழிவைத் தடுத்துவிடும் என்றே நம்பியிருக்கிறேன். ஆனால், மனிதனால் வெளியிடப்படும் பசுமை வெளி வாயுவானது வெப்பநிலையை அதிகரிக்க செய்யுமே ஒழிய மாற்றமடையாது என்பதை ஒப்புக்கொள்ளக் கடினமாகவே இருக்கும்’ என்கிறார்[5].

சாதிய ஒடுக்குமுறையும் சென்னை ஐஐடியும் – சாதிப் பாகுபாட்டை எதிர்த்து பதவி விலகிய பேராசிரியர் விபினோடு நேர்காணல்

பில் கேட்ஸின் வாதமும் தீர்வும் அறிவியல் முழுமை கொண்டிருந்தாலும், அதை அடையும் வழிமுறையே அவரை கேள்விக்குள்ளாக்க வைக்கிறது. புதைபடிம எரிபொருள்  நிறுவனங்களிருந்து தனது முதலீட்டை திரும்பப் பெற்றுவிட்டதாகவும், நீடித்த வளங்களின் மீது முதலீடு செய்துள்ளதாகவும் கூறும் பில் கேட்ஸ் அறிவியலுக்கு எதிராக இல்லை. ஆனால், அந்த அறிவியல் தனது வர்க்க நலனை (வர்க்க மேலாண்மை என்பது பொருத்தமாக இருக்கும்) பாதிக்கக் கூடாது என்பதே அவரின் நிலைப்பாடு. நாம் ஒருவிதத்தில் அறிவியல் முற்றுப்பெற்ற அரசியல் அதிகாரத்திற்கு எதிராகவே இன்று போராடுகிறோம் எனலாம். தனது நூல் முழுக்க மனித செயலினாலே பசுமைவெளி வாயு வெளியேற்றம் மோசமாகியுள்ளது எனும் கேட்ஸ், ராட்சத அளவில் வெளியேற்றும் புதைபடிம முதலாளித்துவத்தைச் சாட விரும்பவில்லை. மாறாக அனைத்து மனிதர்களையும் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறார். ஐநாவால் வெளியிடப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு கூட ‘காலநிலை மாற்றத்தை ஈடு செய்ய முடியாத அளவிற்கு மனிதர்களே ஏற்படுத்தினார்கள்’ என்று கூறுகிறது. மேலும், அவர்கள் இந்த உலகை அழிப்பதற்கு முன்பான எச்சரிக்கை இந்த அறிக்கை என்கிறார் ஐநாவின் பொதுச்செயலாளர் António Guterres. அறிவியல் வாதத்தின்படி இதை மறுக்க முடியாது. அதையே சமூக காரணியோடு பொருத்திப்பார்க்காமல் முற்றுப்பெற்ற அறிவியலோடு  நிறுத்திக்கொள்ளும் அறிவுஜீவிகளைக் கேள்விக்குள்ளாக்குவதிலேயே இடதுசாரிகளின் சூழலியல் செயற்பாடு தொடங்குகிறது.

இயற்கை அறிவியலாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் சமூகத்தில் எந்தெந்த படிநிலையில் தாக்கம் செய்கிறது என்று கவனிக்கத் தவறுவது அவர்கள் துறைக்கு உட்பட்டது. ஆனால், கேட்ஸ் போன்றவர்கள் சமூகத்திற்கான தீர்வை கோருகிறார்கள். கட்டுப்பாட்டிற்கு மீறிய சூழலியல் கேடு இன்றைய சமூக பொருளாதார இயக்கத்தால் ஏற்படுகிறது. அதன் பெயர் முதலாளித்துவம். அதை நிர்வகிப்பவர்கள் சொற்ப தனிநபர்களே அன்றி, ஒட்டுமொத்த மனிதர்களும் அல்ல. ஆகவே இடதுசாரிகளின் அரசியல் முதலாளித்துவத்திற்கு எதிராக உள்ளது. பல சிக்கலான இடர்களைக் கடந்தும் மறுசுழற்சிக்கு உட்பட்டுவந்த இயற்கை, இன்று அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படுவது மனித செயற்பாடு என்பதை நாம் நம்பும் பெரிய மனிதர்களே ஒப்புக்கொண்டாகிவிட்டது. அறிவியல்படி, நாம் பூமியிலிருந்து பெறப்படும் ஆற்றல் மற்றொரு வடிவத்தில் பூமியை அடைவதன் மூலம் ஒரு சமநிலையை (Balancing) அடைகிறது. ஆனால், முதலாளித்துவம் இந்த சமநிலையைச்  சிதைத்து கட்டற்ற ஆற்றலை இயற்கையிடமிருந்து நுகர்கிறது. அவை, மீண்டும் இயற்கைக்குத் திரும்ப முடியாத அளவிற்கு வரம்பு மீறியுள்ளது. இதனை ‘வளர்சிதை மாற்றப்பிளவு'(Metabolic Rift) என்கிறார் மார்க்ஸ். ‘காலநிலை மாற்றம் மார்க்ஸ் கண்டறிந்த சமூகவியல் காரணியின் அப்பட்டமான வெளிப்பாடு’ என்கிறார் மார்க்சிய சூழலியல் ஆய்வாளர் ஜான் பெல்லாமி போஸ்டர்[6]. இயற்கையின் சுழற்சியில் பிளவை ஏற்படுத்திய முதலாளித்துவம் சுரண்டிய ஆற்றலை முடங்கிய சொத்து வளங்களாகத்தான் (Frozen Wealth) சேமிக்கிறதே ஒழிய, அடுத்த தலைமுறைக்குத் தேவையான இயற்கை வளமாக அல்ல. இதனை, முதலாளித்துவம் நிலப்பரப்பைக் கடந்து மட்டும் சுரண்டவில்லை, அது காலத்தைக் கடந்து சுரண்டுகிறது என்கிறார் சூழலியல் எழுத்தாளர் ஜார்ஜ் மான்பியோட்[7].

பில் கேட்ஸின் அர்த்தமற்ற வாதம்……. தொடரும்…..

Notes

  1. Helier Cheung, What does Trump actually believe on climate change?, 23 January 2020, BBC
  2. Christopher K R T Jones, Earth’s climate: a complex system with mysteries abound, Feb 28th 2016, blog.oup
  3. Emily Gosden, Eat seasonally and recycle more to cut emissions, says Shell. June 11 2019, The Times
  4. Zoe Schlanger, Your cotton tote is pretty much the worst replacement for a plastic bag, April 2 2019, Quartz
  5. Bill Gates, How to Avoid a Climate Disaster: The Solutions We Have and the Breakthroughs We Need, Penguin Random House LLC, Newyork, p12.
  6. John Bellamy Foster, Marx and the Rift in the Universal Metabolism of Nature, Dec 01, 2013, Monthly Review
  7. George Monbiot, Capitalism is killing the planet – it’s time to stop buying into our own destruction, 30 Oct 2021, The Guardian

கட்டுரையாளர் – அப்துல்லா.மு, ஊடகவியலாளர்

காலநிலை மாற்றம்: அறிவுசார் உரையாடலுக்கான தேடல் –  மு.அப்துல்லா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்