ஜெய்பீம். சந்தேகமே இல்லாமல் ஆகச்சிறந்த சினிமா. தமிழ் சினிமாவின் நிழலே படாத இருளர்களின் வாழ்வியலை வலியோடு இப்படம் கடத்தியிருக்கிறது.
பல இடங்களில் என் அகம் உடைந்தது. காவல்துறையின் வன்முறைக் காணும்போது கலங்கியதைவிட, போலிஸ் ஜீப்பில் ஏறாமல் செங்கேணி வைராக்கியமாக மகளுடன் நடந்து வரும் தருணம் கண்ணீருடன் கரம் தொழுதேன்.
பார்வையாளரின் பரிதாபத்தையும், அதிர்வையும், அடிப்படை உணர்வுகளாக கோரி நிற்கிற படங்கள் சிலவற்றில் அலட்சியமான திரைக்கதை இருக்கும். போதுமான அளவு தன்னிறைவு அம்சங்கள் இருக்கிறதென மேலோட்டமாக கையாளப்பட்டிருக்கும். ஆனால், ஜெய்பீம் எந்த வகையிலும் சுவாரசியமும் குன்றாமல் எழுதப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு நாள்: தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட்ட அரசியல் வரலாறு – சூர்யா சேவியர்
தொடர்ந்து காட்டப்படும் வதையுறும் காட்சிகளைப் பார்க்கையில் அதில் உழலாமல், அதனையொட்டிய பல்வேறு சிந்தனைகளுக்கு அவை இட்டுச் செல்கிறது. இத்தனை ஆண்டுகாலம் அவர்கள் மீது நிகழ்த்தியவற்றை மறைபிரதியாக உணர்த்துவதாகவே எனக்கு தோன்றுகிறது. Full metal jacket’ல் வதைபயிற்சி முகாம் காட்சிகளைப் போல.
இப்படத்தில் வரும் வசனம் ஒவ்வொன்றும் நம் நீதியுணர்ச்சியை கேள்விக்குட்படுத்துகின்றன. வழக்குமன்றத்தில் சந்துருவின் புதிரவிழ்ப்புகள் ஒவ்வொன்றும் கதையின் நகர்வை வேகப்படுத்துகின்றன. சூர்யா போன்ற நடிகர் இதில் நடிக்கும்போது அவர்களுக்கேயுரிய நாயக அம்சங்கள் தவிர்க்க இயலாதவை. ஆனால் அவரை முன்வைத்து இப்படம் சென்றடையும் உயரத்திற்கு முன் அவையொரு பொருட்டல்ல. சொல்லப்போனால் இதில் நாயக அம்சங்களுக்கு இன்னும் வாய்ப்பிருந்தும் அவை தவிர்க்கப்பட்டிருக்கிறது. (உதா. சந்துரு டீச்சரம்மா காதல், சந்துரு fight scenes, சந்துரு கதைக்கு வெளியே சமூகநீதி புள்ளிவிவர வசனங்கள் பேசும் அபாயம்)
‘நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள்’ – பூவுலகின் நண்பர்கள்
வட்டார வழக்கிலுள்ள அடர்த்தி, உரையாடும்போது வெளிப்படும் அங்கதம், சடங்குகள், நம்பிக்கைகள் இவற்றில் வெளிப்பட்ட உண்மைத்தன்மை போன்றவை அவர்களின் வாழ்விற்குள் நம்மை அணுக்கமாகிவிடுகிறது. அழுகை என்றளவில் நின்றுவிடாமல் இந்த எழுத்துதான் உடன் பயணிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவு, இசை, கலைப்பதிவு, படத்தொகுப்பு என எல்லா வகையிலும் தரமான ஒரு திரைப்படத்தை வழங்கிய படக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலை வணங்குகிறேன்.
சமத்துவத்திற்கான நீண்ட போராட்டமும் மறுக்கப்படும் அரசியல் உரிமைகளும் – மீனா கந்தசாமி
ஒரு சமூகத்தை குறித்து இன்னொருவர் திரைப்படம் எடுக்கும்போது அதன் விடுபடல்களை அச்சமூகத்தில் இருந்து எழுந்துவரும் படைப்பாளிதான் இட்டு நிரப்புவான். ஆனால், தான் எடுத்துக்கொண்டதில் எந்த அளவுக்கு நேர்மையாக ஓர் இயக்குனர் இருக்கமுடியும் என்பதற்கு இப்படமும் ஓர் உதாரணம் என்று அவதானிக்கிறேன். நுட்பங்களே கலையாகிறது. அதைத் தொகுத்து பரிமளிக்கச் செய்த இயக்குனர் த.செ, ஞானவேல் தன் திரைப்பயணத்தின் ஆரம்பத்திலேயே மைல்கல்லை தொட்டுவிட்டார்.
இந்த திரைப்படத்திற்குப் பிறகு இருளர்களுக்கு இனச் சான்றிதழ், நிலப்பட்டா, போன்றவை கிடைக்கும் என்பது என் எதிர்ப்பார்ப்பு. அநீதிக்கு எதிரான ஒரு ‘கலைஞனின்’ குரல் வெளிப்படுகையில் திரைப்படம் என்னும் கலைவடிவின் வழியாக அது நிகழ்த்தும் தாக்கம் பெரும் மாற்றத்தை எல்லாவகையிலும் உண்டு பண்ணும் என்று நம்புகிறேன்.
‘டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றம் உலக மக்களின் சிந்தனையை தூண்டும்’ – அறிஞர் அண்ணா
பல ஆண்டுளாக இதற்காகப் போராடிய களப்போராளிகளின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இன்னொரு அறிக்கையாகத்தான் இத்திரைப்படத்தை நாம் பார்க்க வேண்டும். இதன் வெற்றியை, இதற்கு கிடைக்கும் அங்கிகாரத்தை அவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
ஜெய்பீம் என்ற சொல்லின் பொருளறியாமல் முனகிக் கொண்டிருந்த பொதுச்சமூகம் அவர்களுக்கு நீதியுணர்ச்சி இருப்பின் இத்திரைப்படம் பார்த்தாவது ‘ஜெய்பீம்’ என இனி உரக்கச் சொல்லட்டும். இதை ஜனநாயகப்படுத்திய சூர்யா அவர்களுக்கு நன்றியும் அன்பும். அது அவர் கடமையும் கூட. இது இரஞ்சித் இழுத்து வந்த திரைத்தேர். இணைந்திழுப்போம்.
கட்டுரையாளர்: தமிழ்ப்பிரபா, எழுத்தாளர்
பேட்டை, கோசலை நாவலின் ஆசிரியர். இயக்குநர் பா.ரஞ்சித்தோடு இணைந்து சார்பட்டா திரைப்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதியவர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.