Aran Sei

சிதம்பரம் நடராஜர் கோயில்: கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு கனகசபை மீது ஏறி பக்தர்கள் நேற்று (மே 19) சாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பாக நேற்று அரசாணை வெளியான நிலையில், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நேற்றே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நடைமுறைக்கு கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இதற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவரான நடராஜருக்கு அருகில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி கும்பிடுவது தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டபோது கனகசபை மீது ஏறி யாரும் சாமி தரிசனம் செய்யக் கூடாது என கோயில் தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா நோய்த்தொற்று குறைந்த பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது.

இதையடுத்து நேற்று மதியம் வருவாய்த்துறை, காவல்துறை, தீட்சிதர்கள் ஆகியோர் இணைந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் அரசாணையை அமல்படுத்துவதற்கு உரியக் கால அவகாசம் வேண்டும் என்று தீட்சிதர்கள் கேட்டிருந்தனர். ஆனால் அந்த கோரிக்கையை வருவாய்த் துறையினர் நிராகரித்து விட்டனர். மேலும் நேற்று மாலையே நடராஜர் கோயிலில் பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர்.

விழுப்புரம்: காவல் நிலைய சித்திரவதை – உதவி ஆய்வாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

அதன்படி இதற்கு முன் `கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ் பேரவை, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பக்தர்களோடு சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் போலீஸ் எஸ்பி சக்தி கணேசன் விழுப்புரம் போலீஸ் எஸ்பி ஸ்ரீநாதா உள்ளிட்டோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கோயில் தீட்சிதர்கள் சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் காவல்துறையினரிடம் பேசினார். அவர், `எங்களது கருத்துக்களைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்’ என கடிதம் அளித்தார். இதையடுத்து பக்தர்கள் கனகசபைக்குள் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்து வெளியே வந்தனர்.

‘என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்கிறேன்’ – பேரறிவாளன் நெகிழ்ச்சி

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர், “சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படியும், பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் அடிப்படையிலும் நடராசர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதன்படி இன்று சாமி தரிசனம் செய்தோம். தீட்சிதர்கள் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தார்கள். அது அவர்களது உரிமை. அதே நேரத்தில் இந்த வழிபாட்டு உரிமை தொடர்ந்து நடந்திட தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அதே நேரம் கோயில் தீட்சிதர்கள் சார்பில் செய்தியாளரிடம் பேசிய வழக்கறிஞர் சந்திரசேகர், “காலை அரசாணை பிறப்பித்து கால அவகாசம் கூட கொடுக்காமல் உடனடியாக அதை அமல்படுத்துவதாக தமிழக காவல்துறையும், அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கோயிலில் இவ்வளவு காவல்துறையினரை வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது தவறு. நீதிமன்றத்தின் சில உத்தரவுகள் இதில் மீறப்பட்டு இருக்கிறது. தீட்சிதர்கள் சார்பாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தொடர் சட்ட போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

Source : puthiyathalaimurai 

கலைஞரை வசைபாடும் சாதிவெறியர்கள் | Makizhnan | Indra Kumar

சிதம்பரம் நடராஜர் கோயில்: கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்