சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் சராசரியாக 1000 மாணவர்கள் சேர்ந்து படிக்கும் அரசு உதவி பெறும் பிரிவில் உள்ள 7 இளங்கலை 3 முதுகலை பாடப்பிரிவுகளை நிரந்தரமாக மூட கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரி 1972 ஆம் ஆண்டு துங்கபட்டது. கடந்த 50 ஆண்டுகளாக இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
1990 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகள் சுயநிதி பிரிவை தனியாக துவங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இக்கல்லூரியில் மேலே கூறப்பட்ட 10 பாடப் பிரிவுகளுடன் சுயநிதி பிரிவில் மேலும் 10 பாடங்களை இக்கல்லூரி நிர்வாகம் நடத்துகிறது. இந்த சுயநிதி பிரிவில் ஆண்டுதோறும் 1500 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் அரசு உதவி பெறும் பிரிவை காட்டிலும் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதாவது அரசு உதவி பெறும் பிரிவில் வருடத்திற்கு சுமார் 1000 ரூபாய் வரைதான் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சுயநிதி பிரிவில் சுமார் 42000 ரூபாய் ஆண்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சென்னை நகரத்திலிருந்து மறுகுடியமர்வு செய்யப்பட்ட செம்மஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் இக்கல்லூரியின் அரசு உதவி பெறும் பிரிவுதான் மிக முக்கிய காரணம் என்று அக்கல்லூரியின் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி, சுயநிதி பிரிவுக்கு இணையான 40000 ரூபாய்க்கும் அதிகமான கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் வசூலித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை முற்றிலுமாக கல்லூரி நிர்வாகம் நிறுத்தி விட்டது.
2003 க்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் பிரிவில் பணி நிறைவு பெரும் பேராசிரியர்களின் இடத்தில் புதிய பேராசிரியர்களை நியமிப்பதையும் கல்லூரி நிர்வாகம் நிறுத்தி விட்டது.
இப்படி அரசின் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், சுயநிதி கல்லூரிக்கு பிரிவிற்கு அரசு உதவி பெறும் பிரிவில் அதிக கட்டணம் வசூலித்ததை கண்டித்த 11 பேராசிரியர்களை 2 ஆண்டுகளுக்கு முன்பாக சட்டவிரோதமாக கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. தங்களின் பணிநீக்கத்திற்கு எதிராக பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் என்ற சங்கத்தின் கீழ் பேராசிரியர்கள் போராடி வருகின்றனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வரை நியமிக்காமல் பொறுப்பு முதல்வரை நியமித்து கல்லூரியை நடத்தி வருகிறார்கள். இது சட்ட மீறல் என்றும், முதல்வரை நியமித்து கல்லூரியை ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் இத்தகைய சட்டவிரோத செயல்களுக்காகத்தான் முதல்வரை நியமிக்காமல் கல்லூரி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்துள்ளது என்று இக்கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சொல்லப்போனால் 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு உதவி பெரும் கல்லூரியின் பிரிவு முழுவதுமாய் சுயநிதி கல்லூரி பிரிவாக செயல்பட்டு வந்துள்ளது. இதில் அரசு உதவி பெரும் பிரிவில் உள்ள மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பிறகு, சுயநிதி கல்லூரி பிரிவில் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையான கட்டணத்தை கல்லூரி முதல்வரின் வங்கி கணக்கிற்கு சட்ட விரோதமாக செலுத்த மாணவர்கள் கட்டாயப் படுத்தப்பட்டனர் என்று அந்த கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய அதிக கட்டண கொள்ளையால் அரசு உதவி பெரும் பாடப்பிரிவுகளிலிருந்து எண்ணற்ற ஏழை எளிய மாணவர்கள் தங்களது படிப்புகளை கைவிட்டனர். இத்தகைய கட்டண கொள்ளையிலும் சிலர் வேறு வழியின்றி கடன் வாங்கி தங்களது படிப்பை தொடந்தனர்.
மேலும் குறிப்பாக பல்கலைக்கழக மானிய குழுவின் நிதியில் அதாவது அரசின் நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்களை வாடகைக்கு விட்டு பணம் வசூலித்தது. கல்லூரியை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களை கல்லூரி நிர்வாகம் சட்டவிரோதமாக விற்று வருகிறது என்று கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக அரசு உதவி பெரும் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேரவில்லை என்றால், அதனை சுயநிதி பிரிவாக மாற்றிக் கொள்ளலாம். அதன் வழியாக அதிக கட்டணம் வசூலிக்கலாம் என்பது தான் கல்லூரியின் நோக்கமாக உள்ளது என்று பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக இக்கல்லூரியின் அரசு உதவி பெரும் பிரிவில் மாணவர் சேர்க்கை மிக கடுமையாக குறைந்த பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் உள்ளதால், தற்பொழுது 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களும் படிப்பை முடித்து விட்டால் அக்கல்லூரியில் ஒரு மாணவர் கூட இருக்க மாட்டார். அதைத்தான் கல்லூரி நிர்வாகமும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த கல்லூரியை சுயநிதி கல்லூரியாக மாற்றுவதோடு மட்டுமின்றி, அந்த கல்லூரி அமைந்துள்ள இடம் ஐடி துறை நிரம்பிய முக்கியமான இடமாக அமைந்துள்ளதால் அடுத்த சில வருடங்களில் இந்த கல்லூரியை இழுத்து மூடிவிட்டு அந்த நிலத்தை விற்று விடலாம் என்று அக்கல்லூரியின் முதலாளியான ஹரிஷ் மேத்தா திட்டமிட்டு வருவதாக அக்கல்லூரியில் பணியாற்றிய பேராசியர் குற்றம் சாட்டுகிறார்.
அரசு உதவி பெரும் பல்கலைக்கழகமாக இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதை அடுத்து அந்த பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு நடத்தியது. அதேபோல் சட்டத்துக்கு புறம்பாகச் செயல்படும் டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டம் 1976-ன் பிரிவு 14 (அ) பிரிவை பயன்படுத்தி ஒரு தனி அலுவலரை நியமித்து அரசின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி தமிழ்நாடு அரசே இக்கல்லூரியை ஏற்று நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 250 அரசு உதவி பெரும் கல்லூரிகள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா? அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறதா? என்பதை தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்திற்கு வாத்தி ரெய்டு | கொந்தளித்த actor Vijay ரசிகர்கள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.