கட்டட விதிமீறல்கள் குறித்து உச்சநீதி மன்றமும் உயர்நீதி மன்றமும் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அரசுத்துறைத் தலைவர்கள் கண்காணிக்கத் தவறிவிட்டதையே காட்டுகிறது எனச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ருக்மன்காதன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி ராயபுரத்தில் 5574 கட்டட விதிமீறல்கள் கண்டறியபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது என்றும் 1161 கட்டடப் பணிகளை நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 679 வீடுகளுக்கு சீல் வைப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 115 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராயபுரத்தில் மட்டும் 5574 விதிமீறல் கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போது, சென்னை முழுவதும் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விதிமீறல் கட்டடங்கள் இருக்கலாம் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சென்னையின் 5 வது மண்டலத்தில் உள்ள 5574 சட்ட விரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “விதிமுறையை மீறிக் கட்டிய கட்டடங்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்” எனக் கேள்வியெழுப்பினர். இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
சென்னையின் ராயபுரத்தில் மட்டுமே இவ்வளவு விதிமீறல்கள் என்றால், தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ”உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது, அரசுத்துறை தலைவர்கள் கண்காணிக்கத் தவறிவிட்டதையே காட்டுகிறது. 2015 பெரு வெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா?” என நீதிபதிகள் கேள்வியெழுப்பி உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், 5 வது மண்டல உதவி ஆணையர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து 450 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் நாளை மாலை அல்லது இரவு கரையைக் கடக்க இருக்கிறது. இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்புப் பணிகளும் தமிழக அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற வேளையில், சென்னைப் பெருவெள்ளத்தைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.