ஐஏஎஸ் (கேடர்) விதிகள், 1954 சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தம் குறித்த முன்மொழியப்பட்ட வரைவு மசோதா குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இது அதிகாரிகள் மத்தியில் பய உணர்வை உருவாக்கி, அவர்களின் செயல்திறனை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டு நடைமுறையை பின்பற்றாமலேயே, ஒன்றிய அரசுடைய பிரதிநிதித்துவத்தின்கீழ் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியமர்த்தும் அதிகாரத்தை ஒன்றிய அரசிற்கு இந்த சட்டத்திருத்தம் வழங்குகிறது.
கடந்த எட்டு நாட்களில் இரண்டாவது முறையாக இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்த சட்டத் திருத்தம் கூட்டாட்சி அமைப்பையும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
‘ஒன்றிய அரசின் அணைகள் பாதுகாப்புச் சட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது’- மாநிலங்களவையில் வைகோ கண்டனம்
“திருத்தப்பட்ட வரைவின் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒன்றிய அரசால் ஒரு அதிகாரி, ஒரு மாநிலத்திலிருந்து நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள பணியிடத்திலும் நியமிக்க முடியும். அந்த அதிகாரியின் உடன்பாடு இல்லாமலும், அவர் பணிபுரிந்துக்கொண்டிருக்கும் மாநில அரசிடமிருந்து ஒப்புதல் இல்லாமலும், அவருடைய பணியிலிருந்து உடனடியாக அவர் விடுவிக்கப்படலாம்” என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
“இச்செயலானது கூட்டாட்சி அல்லாத நிலையை நோக்கி இழுக்க முயல்கிறது. இச்சட்டத்திருத்தம் முந்தையதை விட மிகவும் மோசமானதாக இருப்பதாக நான் உணர்கிறேன். உண்மையில், இது நமது சிறந்த கூட்டாட்சி அரசியலின் அடித்தளத்திற்கும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கும் எதிரானது” என்று அக்கடிதத்தில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்மொழியப்பட்ட சட்டத்திருத்த வரைவை எதிர்த்து குறைந்தபட்சம் ஐந்து மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவைத் தவிர, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களும் கடிதம் எழுதியுள்ளன. ‘தற்போதைய விதிகளே சரியாகத்தான் உள்ளது’ என்று பீகார் மாநில தலைமைச் செயலாளர் அமீர் சுபானி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார் .
மகாராஷ்டிரா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், முன்மொழியப்பட்ட வரைவு மசோதாவை கடுமையாக எதிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Source: PTI, The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.