Aran Sei

கிரையோஜெனிக் இன்ஞ்சின் இந்தியாவுக்கு கிடைக்கவிடாமல் தடுத்த வெளிநாட்டு சக்திகள்? – உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

ந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ரகசியங்களை வெளிநாட்டிற்கு வழங்கியதாக அவர்மீது தொடரப்பட்ட பொய் வழக்கில், மிகப்பெரிய சதி மற்றும் வெளிநாட்டு சக்திகளின் பங்கு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் உளவுத்துறை முன்னாள் அதிகாரிகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை எதிர்த்து சிபிஐ தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எஸ்.வி.ராஜூ, இந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான பொய் வழக்கு – போலீஸ் உயர் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

“இந்த பொய் வழக்கின் காரணமாக விஞ்ஞானிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பம் (இந்தியாவுக்கு) கிடைப்பது, திட்டமிட்டு 20 ஆண்டுகள் வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளது… வெளிநாட்டு சக்திகளின் மிகப்பெரிய சதித்திட்டம் இதில் அடங்கியிருக்கலாம்” என்று கூறிய எஸ்.வி.ராஜூ ஆகவே, முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இருந்தபோதும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் வயது மற்றும் அவர்கள் தேவையில்லாமல் சிறையில் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி, முன்ஜாமீனை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் சி.டி.ராவிக்குமார் அடங்கிய அமர்வு, இதுகுறித்து அவர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் கிரையோஜெனிக் என்ஜின் திட்டத்திற்கு தலைவராக இருந்த விஞ்ஞானி நம்பிநாராயணன், 1994 ஆம் ஆண்டு, ரகசியங்களை வெளிநாட்டிற்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தவறாக கைது செய்யப்படுபவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் வலியுறுத்தல்

1998 ஆம் ஆண்டு நம்பிநாராயணனை இந்த வழக்கிலிருந்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. தன்மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதற்கு நிவாரணம் கோரி நம்பி நாராயணன் தொடர்ந்து வழக்கில் 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அவருக்கு 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்த பொய் வழக்கு சதியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றம் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்து உத்தரவிட்டது.

இதுகுறித்து விசாரித்த டி.கே.ஜெயின் கமிஷன், உரிய ஆதாரம் இல்லாமல் நம்பி நாராயணனை கைது செய்ததுடன், இந்த வழக்கு தொடர்பான தகவல்களை சில அதிகாரிகள் வேண்டுமென்றே பத்திரிகைகளுக்கு கசியவிட்டதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் சிபிஐ தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

கிரையோஜெனிக் இன்ஞ்சின் இந்தியாவுக்கு கிடைக்கவிடாமல் தடுத்த வெளிநாட்டு சக்திகள்? – உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்