சாதிப் பாகுபாடு சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர் அனுராதாவை இரண்டு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருபவர் பேராசிரியர் அனுராதா. தனது துறையில் பணியாற்றும் சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடயே சாதிப் பாகுபாடு பார்ப்பதாகவும், பட்டியலின வகுப்பினர் மீது வெறுப்புணர்வை உமிழ்ந்ததாகவும், மாணவர்களின் சாதி என்ன என்று அவர்களிடமே கேட்டறிந்து அதன்படி சில பாகுபாடுகளைக் காட்டியதாகவும் பேராசிரியர் அனுராதா மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டில் இவர் மீது சாதிப் பாகுபாடு குறித்து புகார் எழுந்த நிலையில், அப்போதே பேராசிரியர் அனுராதாவிடம் விளக்கம் கேட்டு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில், அண்மையில் தனது மாணவர் ஒருவரிடம் சாதியைக் குறிப்பிட்டு பேராசிரியை அனுராதா பேசிய செல்போன் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில், “கல்லூரிக்கு வரும் மாணவர்களின் முகத்தை பார்த்தாலே பி.சியா எம்.பி.சியா அல்லது எஸ்.சியா என்று தெரிந்துவிடும். நீ என்ன கம்யூனிட்டி என்பது கூட எனக்கு தெரியாது. நீ என்ன கம்யூனிட்டி” என கேட்கிறார். மேலும் தனது வகுப்பில் படிக்கும் துறை சார்ந்த மாணவர்கள் பெயரை சொல்லும் அவர் அவர்களின் ஜாதி என்ன என கேட்டது” பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்பினர், சக பேராசிரியர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் பேராசிரியர் அனுராதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்திய நிலையில், கல்லூரி நிர்வாகம் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
பேராசிரியர் அனுராதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதும், அவர் தவறிழைத்திருப்பதும் தெரியவந்ததன் இதன் அடிப்படையில் பேராசிரியர் அனுராதாவை இரண்டு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து பச்சையப்பன் அறக்கட்டளை செயலாளர் துரைக்கண்ணு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இரண்டு மாத காலத்திற்கு பின் பேராசிரியர் அனுராதா தரக்கூடிய விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று செயலாளர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
Source : puthiya thalaimurai
மூஞ்சிய பாத்தே சாதிய கண்டுபிடிப்பேன் | பேராசிரியர் அனுராதாவின் அதிசய திறமை | Aransei Roast | Periyar
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.