இந்த கட்டுரை, நெருக்கடிகள் பற்றி ஆய்வு செய்யும் புலிட்சர் மையத்துடன் (Pulitzer Center for Cricis Reporting) இணைந்து தயாரிக்கப்பட்ட “Barred – The Prisons Project” என்பதன் ஒரு பகுதி.
ஆல்வார் மாவட்ட சிறையில், தனது முதல் நாளில், அஜய் குமார் * மோசமான நிலைக்குத் தயாராக இருந்தார். சித்ரவதை, பழைய சோறு, கடுங்குளிர், கடின வேலை – திரைப்படங்கள் ஏற்கனவே சிறைகளின் கொடூரமான உண்மைகள் பற்றி அவருக்கு அறிமுகப்படுத்தி இருந்தன. சிறைச்சாலையின் அந்தப் பெரிய இரும்பு நுழைவாயிலைத் தாண்டும்போது அவனுடன் வந்த காவலர் “குணா பதாவ்” (என்ன குற்றம் செய்தாய்?) என்று கேட்டார். அஜய் எதையோ முணுமுணுத்தான். அதற்குள் அடுத்த கேள்வி, “கௌன் ஜாதி?”(என்ன சாதி) தீர்மானமின்றி, அஜய் சிறிது நேரம் கழித்து வெறுப்புடன், “ரஜாக்” என்றான். இந்த பதிலால் திருப்தி அடையாத காவலர் மேலும், “பிராதிரி பதாவ் (சாதிப் பிரிவைக் கூறு)”என்றார். அந்த, அவன் வாழ்க்கையில் இதுவரை முக்கியத்துவம் அற்றதாக இருந்த, “பட்டியல் சாதியில்” ஒரு பிரிவு என்ற அவனது சாதி அடையாளம், இப்போது அவனது சிறைவாசத்தை வடிவமைப்பதாக அமைந்து விட்டது.
2016 ல், 18 வயதே ஆன அஜய், கழிவறைகளைச் சுத்தம் செய்வது, தாழ்வாரத்தை துடைப்பது மற்றும் தண்ணீர் சேமித்து வைப்பது, தோட்டவேலை செய்வது போன்ற மோசமான வேலைகளில் உதவுவது ஆகிய அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நாளும் அவரது வேலை, விடியற்காலையில் துவங்கி மாலை 5மணி வரைத் தொடரும். “இது ஏதோ எல்லா புதிய சிறைவாசிகளும் வழக்கமாகச் செய்வதுதான் என நான் நினைத்தேன். ஆனால் ஒரு சில வாரங்களில் தெளிவாகிவிட்டது. சிலர் மட்டுமே கழிவறைகளை சுத்தம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்” என்கிறார் அஜய்.
இந்த ஏற்பாடு மிகத் தெளிவாக இருந்தது – சாதிப் படிநிலையில் கீழே இருப்பவர்கள் துப்புரவுப் பணிகளைச் செய்தனர்; மேலே உள்ளவர்கள் சமையலறை அல்லது சட்ட ஆவணப் பிரிவு வேலைகளைச் செய்தனர்; பணக்காரர்கள் மற்றும் செல்வாக்குள்ளவர்கள் ‘சதை போடுவதைத்’ தவிர எந்த வேலையும் செய்யவில்லை. இந்த ஏற்பாட்டிற்கும், ஒருவர் செய்த குற்றத்திற்கும் அல்லது அவரது சிறை நடத்தைக்கும் தொடர்பில்லை. “சப் குச் ஜாதி கே ஆதர் பர் தா (அனைத்தும் சாதியை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகிறது).” என்கிறார் அஜய்.
அஜய் சிறையிலிருந்து வந்து நான்காண்டுகள் ஆகப் போகிறது. அவனுடைய முதலாளி அவன் மீது திருட்டு குற்றம் சுமத்திவிட்டார். “அவன் வேலை செய்த பட்டறையில், ஒரு பெட்டி புதிய ஸ்விட்ச் போர்டுகள் காணாமல் போய்விட்டது. நான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். மிக சிறிய வயதும் கூட. கடை சொந்தக்காரர் என்மீது பழி சுமத்த முடிவு செய்து விட்டார். காவல்துறையிடம் புகார் செய்து, என்னைப் பிடித்துக் கொடுத்து விட்டார்.” என்று நடந்ததை நினைவு கூர்ந்தார் அஜய்.
97 நாட்களை சிறையில் கழித்த அஜய், ஆல்வார் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இறுதியாக விடுவிக்கப்பட்டார். எனினும் இனியும் ஆல்வார் நகரில் வாழ விரும்பாத அஜய் டெல்லிக்கு வந்துவிட்டார். தற்போது 22 வயதாகும் அஜய் மத்திய டெல்லியில் ஒரு வணிக வளாகத்தில் மின் பணியாளராக வேலை செய்கிறார்.
அந்த குறுகிய கால சிறை தன் வாழ்க்கையை பல வகையிலும் மாற்றி விட்டதாகக் கூறுகிறார் அஜய். “ஒரே இரவில் நான் குற்றவாளி என முத்திரைக் குத்தப்பட்டேன். அதோடு கூட நான் ‘ சோட்டி ஜாத்( கீழ்சாதி)’ ஆக மதிப்பிழந்தேன். “பீகார் மாநிலம் பான்கா மாவட்டத்தில் சாம்புகன்ஞ் வட்டத்தைச் சேர்ந்த அஜயின் குடும்பம் 1980ல் டெல்லியில் குடியேறியது. அவனுடைய தந்தை ஒரு கூரியர் நிறுவனத்திலும், அண்ணன் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பாதுகாவலராகவும் வேலை செய்கின்றனர். “நாங்கள் ‘தோபி’ அல்லது சலவைத் தொழில் செய்யும் சாதியைச் சேர்ந்தவர்கள் ஆனால் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அந்த சாதித் தொழிலில் ஈடுபடவில்லை. கிராமத்தின் சாதிய யதார்த்தங்களிலிருந்து ஓடிப் போவது போல் என் தந்தை வேண்டுமென்றே நகர வாழ்க்கையைத் தேர்வு செய்தார்.
ஆனால் சிறைக்குள் எனது தந்தையின் முயற்சிகள் பலிக்கவில்லை “நான் பணியாளனாகப் பயிற்சி பெற்றேன். ஆனால் சிறைக்குள் அது ஒன்றுமில்லை. இப்போது நான் அந்த வரையறுக்கப்பட்ட இடத்தில் ஒரு ‘சஃபாய் வாலா (சுத்தம் செய்பவன்) மட்டுமே.” என்று பகிர்ந்து கொள்கிறார், தற்போது வட டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் (barsati) இருக்கும் அஜய்.
இது எல்லாவற்றையும் விட மிக வேதனைத் தரக் கூடியது, ஒருநாள் சிறைக் காவலர் என்னை அடைத்துக் கொண்ட கழிவறை நீர்த் தொட்டியை சரிசெய்ய அழைத்ததுதான் என்று வேதனையுடன் நினைவு கூர்கிறார் அஜய். முந்தைய நாள் இரவிலிருந்தே சிறையில் இருந்த கழிவறைகள் நிரம்பி வழிந்தன. இதனை சிறைக்கு வெளியிலிருந்து ஆட்களைத் அழைத்து சரி செய்யவில்லை அந்த சிறை அதிகாரிகள். ” என்னை அந்த வேலையை செய்யக் கூறிய போது நான் திகைத்து போனேன். நான் எனக்கு இது போன்ற வேலைகள் தெரியாது என அடக்கமாக மறுத்தேன். அவரோ அங்கே என்னைப் போல் ஒல்லியான இளைஞன் வேறு யாரும் அங்கே இல்லை என்று மிரட்டவும் ஆரம்பித்தார். நான் பணிந்து போனேன். அஜய் தன் உள்ளாடையை தவிர அனைத்தையும் அவிழ்த்து போட்டுவிட்டு, தொட்டியின் மூடியைத் திறந்து மனித கழிவுகள் நிறைந்திருந்த அந்த தொட்டிக்கு வரும் குழாயினுள் உடலை வளைத்து நுழைத்தார். ” நான் அந்த நாற்றத்தில் மூழ்கி இறந்து விடுவேன் என்றே நினைத்தேன். நான் அலற ஆரம்பித்தேன். அந்த காவலருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மற்ற சிறைக் கைதிகளிடம் என்னை வெளியே இழுத்து விடுமாறு உத்தரவிட்டார்.”
முப்பதாண்டுகளுக்கு முன்பே மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதற்கான தடைச் சட்டம் இந்தியாவில் போடப்பட்டுள்ளது. 2013ல் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கழிவுநீர் சாக்கடைகள், கழிவறை நீர்த் தொட்டிகள் ஆகியவற்றை சுத்தம் செய்வதையும், “மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது”(manual scavenging) என்ற வரையறைக்குள் கொண்டு வந்து, ‘மனித கழிவை அகற்றுவதில் மனிதர்களை பயன்படுத்துவதை தடை செய்யும் மற்றும் நிவாரண சட்டத்தில்’ திருத்தம் கொண்டு வரப்பட்டது. அஜயை காவலர் செய்யக் கூறிய வேலை குற்றவியல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
“இந்த நிகழ்வை நினைக்கும் போதெல்லாம் எனக்கு வயிறு கலங்கி விடுகிறது” என்கிறார் அஜய். வீதியில் யாராவது சுத்தம் செய்பவரையோ, தெருக் கூட்டுபவரையோ பார்த்தால் கூட கலங்கிப் போய் அந்த இடத்தை விட்டு உடனடியாக விலகி ஓடி விடுகிறார். “அந்தக் காட்சி எனது இயலாமையை நினைவு படுத்துகிறது.” என்று கூறுகிறார் அவர்.
இது அதிர்ச்சி தருவதாக இருக்கலாம். ஆனால் அஜயின் விவகாரம் அசாதாரணமான ஒன்றல்ல. சிறையில் அனைத்தும் ஒருவரின் சாதியால் தான் தீர்மானிக்கப் படுகிறது என்னும் அஜயால் ஒருவர் சிறையில் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்தே அவரது சாதியை கூறி விட முடியும். அஜய் விசாரணைக் கைதிதான். தண்டனைப் பெற்ற சிறைக் கைதிகளைப் போல அவர்கள் சிறையில் வேலை செய்ய வேண்டியதில்லை. ஆனால் விசாரணைக் கைதிகள் உள்ள சிறைகளில் தண்டனைக் கைதிகள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்பதால் அஜய் போன்ற கைதிகள் ஊதியமில்லா வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.
விதிகளே சாதியமாகி இருக்கும் போது?
சாதி அடிப்படையிலான வேலை என்பது பல மாநில சிறைக் கையேடுகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது.19ம் நூற்றாண்டில் ஆங்கில காலனிய வாதிகளால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்கள் திருத்தப்படாமல் அப்படியே தொடர்கின்றன. சிறை விதிகளில் இந்தப் பகுதி தொடப்படாமலே உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக சிறைக் கையேடுகளை வைத்திருந்தாலும் அவையாவும் 1894 ம் ஆண்டின் சிறைச் சட்டங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. அந்த சிறை விதிகள், சிறை வாசிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய உணவின் அளவு, இடம், சிறையில் “ஒழுங்கீனமாக நடக்கும்” கைதிகளுக்குத் தரக்கூடிய தண்டனைகள் ஆகிய ஒவ்வொன்றையும் விளக்கமாகக் கூறுகின்றன.
அஜயின் அனுபவங்கள் ராஜஸ்தான் சிறைவிதி கையேடுகளை ஒத்திருக்கின்றன. சமைப்பது, மருத்துவம் தொடர்பானவற்றைக் கையாள்வது உயர் சாதியினருக்கான வேலையாக கருதப்படுகிறது. துடைப்பது, குப்பைக் கூட்டுவது ஆகியவை நேரடியாக கீழ்சாதியைப் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சமையல் பிரிவிற்கு,” பார்ப்பனர் அல்லது அதற்கு இணையான உயர்சாதி இந்து சிறைக் கைதிகள் சமையலராக நியமிக்கப் படலாம்” என்கிறது சிறை விதிகள்.
இதே போல, ” பணியாளர்கள் நியமனம், தண்டனைக் கைதிகளுக்கான விதிகளும் கட்டுப்பாடுகளும்” என்று தலைப்பிட்டுள்ள பிரிவு 10 ல் , சிறைத்துறைச் சட்டம் பிரிவு 59(12) ல் கூறப்பட்டுள்ளது போலவே,” துப்புரவு தொழிலாளர்கள் அவர்கள் சார்ந்துள்ள மாவட்டங்களில் பின்பற்றப்படும் வழக்கங்களின்படி, அங்கு அவர்கள் என்ன தொழிலைச் செய்தார்களோ அதன்படி தேர்ந்தெடுக்கலாம் அல்லது துப்புரவு பணிகளுக்கு, அந்தத் தொழிலுக்கு பழகிவிட்டவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வேறு யாராவது தானாக அந்த வேலையைச் செய்ய முன்வந்தாலும், அப்படி ஒருவரும் வராத போதும், தொழில்முறையில் துப்புரவு பணியாளராக இல்லாதவர்களையும், கட்டாயப்படுத்தி அந்த வேலையை செய்ய வைக்கலாம்.” என்று கூறுகிறது. இந்த விதி, “துப்புரவுத் தொழிலாளர் சமூகத்தினருக்கு ” ஒப்புதல் வழங்கும் பிரச்சனை குறித்து வாயே திறக்கவில்லை.
இந்த விதிகள் யாவும் ஆண் கைதிகள் அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு வரையப்பட்டிருக்கலாம் எனினும் பெண்கள் சிறைச்சாலைகளிலும் , பெண்களுக்கென தனியான சட்டங்கள் இல்லாத நிலையில் இவையே பின்பற்றப் படுத்தப்படுகின்றன. ஒரு வேளை, பெண் சிறைக்கைதிகளில் பொருத்தமான சாதியைச் சேர்ந்தவர்கள் கிடைக்கவில்லை என்றால், ” சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று ஆண் மெஹ்தார்களுடன்( சாதி ரீதியாக கழிவறை சுத்தம் செய்யும் வேலையை செய்பவர்கள்) ஒரு நிபந்தனையுடன் கூலி கொடுத்து வரவழைக்கப்பட்ட ஒருவருடன் சேர்த்து பெண்கள் பகுதிக்கு அனுப்பி பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்கின்றன ராஜஸ்தான் சிறைத்துறை விதிகள்.
“இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, நல்ல சாதியைச் சேர்ந்த நீண்ட நாள் கைதிகளுக்கு பயிற்சி அளித்து மருத்துவ பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்கின்றன அந்த கையேடுகள்.
எல்லா மாநிலங்களிலும், நாள் அடிப்படையிலேயே வேலைகள் தரப்பட வேண்டும் என்கின்றன அவற்றின் சிறைவிதிகள். வேலைப் பிரிவினை ‘சுத்தம்- அசுத்தம்’ என்ற அடிப்படையிலேயே பொதுவாக தீர்மானிக்கப்பட்டுள்ளன. உயர்சாதியினர் ‘சுத்தமான’ வேலைகளை மட்டுமே செய்ய, கீழ் சாதி என்ற கட்டத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு ‘அசுத்தமான’ வேலைகள் ஒதுக்கப்பட்டன.
பீகாரை எடுத்துக் கொண்டால், உணவுத் தயாரிப்பது என்ற தலைப்பிலானப் பிரிவு, “உணவு சமைப்பதில் தரத்திற்கும், முறையான தயாரிப்புக்கும் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் சம அளவில், முழுமையான அளவில் விநியோகிக்கப்படுவதிலும் கொடுக்கப்பட வேண்டும். ” என்று துவங்குகிறது. மேலும், சிறையில் அளவு மற்றும் சமையல் நுட்பம் பற்றிக் கூறும் அந்த கையேடு,” எந்த ஒரு ‘ஏ பிரிவு’ பார்ப்பனர் அல்லது பொருத்தமான உயர்சாதியைச் சேர்ந்த கைதியும் சமையல் காரராக நியமிக்கப்படலாம். எந்த ஒரு கைதியாவது, சிறைக் கைதிகளால் சமைக்கப்படும் உணவை உண்ண முடியாத அளவு உயர்சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் வேறு ஒரு சமையலரைக் கொண்டு முழு சிறைக் கைதிகளுக்கும் சமைக்கச் செய்யலாம். விதிப்படி அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதி கைதிகளைப் தவிர, பிற எந்த தனிப்பட்ட சிறைக்கைதியும் சொந்தமாக சமைத்துக் கொள்ள எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக் கூடாது.” என்று கூறுகிறது அந்த சிறை விதிகள்.
வெறும் காகித சட்டங்கள் அல்ல
இவை எல்லாம் ஏதோ அலுவலக ஏடுகளில் அச்சிடப்பட்ட, மறந்து விடக் கூடிய வெற்று வார்த்தைகள் அல்ல. இந்திய துணைக்கண்டம் முழுவதும் நடைமுறையில் உள்ள சாதிய அமைப்பு முறை ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வெளிப்படுகிறது. பிறப்பின் அடிப்படையில் சாதியாக பிரிக்கப்பட்டு, மோசமான வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்ட பல்வேறு கைதிகளும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பார்ப்பனர்களும் பிற உயர்சாதியினரும் தங்களுக்குத் தரப்பட்ட விலக்குகளை பெருமையாகவும், சிறப்பு உரிமையாகவும் நினைக்கும் அதே வேளையில், தங்கள் இழிநிலைக்கு சாதிதான் காரணம் என வேதனையோடு மற்றவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“உங்கள் நிலையை (aukaad) சிறை சொல்கிறது” என்கிறார் பின்ட்டு. இவர் பத்தாண்டுகளை ஜும்மா சாஹ்னி பகல்பூர் மத்திய சிறையிலும், சில மாதங்களை மோதிஹரி மத்திய சிறையிலும் கழித்திருக்கிறார். பின்ட்டு முடி வெட்டும் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்தவராக இருந்ததால் சிறையில் இருந்த நாள்வரை அதே தொழிலை செய்தார்.
பீகார் சிறைவிதிகள் கையேடும் சாதி அடிப்படையிலான வேலைப்பிரிவினையையே வலியுறுத்துகிறது. எடுத்துக்காட்டாக அது, ” துப்புரவு வேலைக்கு மெஹ்டார் அல்லது ஹரி சாதியிலிருந்தும் அல்லது சந்தால் அல்லது பிற கீழ்சாதியிலிருந்தும் கைதிகளைப் தேர்ந்தெடுக்கலாம். அவர்களுடைய மாவட்டத்தின் அது போன்ற வேலைகளை செய்யும் வழக்கப்படியோ அல்லது அந்த சாதியிலிருந்தே விருப்பப்பட்டு, அந்த வேலையை முன்வருவருக்கோ அத்தகைய வேலைகளை ஒதுக்கலாம்”. எனக் கூறுகிறது. இந்த மூன்று சாதிகளும் பட்டியல் சாதிகள் பிரிவைச் சேர்ந்தவை.
அவ்வப்போது சிறை விதிக் கையேடுகள் சில மாறுதலுக்கும் ஆளாகி உள்ளன. சில நேரங்களில் பொதுமக்களின் எதிர்ப்பு, உச்சநீதிமன்றம் அல்லது ஒரு உயர்நீதிமன்ற தலையீட்டால் இது நடக்கும். சில சமயங்களில் மாநில அரசுகளே, இதன் தேவையை உணர்ந்து மாற்றத்தை கொண்டு வரும். இருப்பினும் பெரும்பாலான மாநிலங்களில் இந்த சாதி அடிப்படையிலான வேலைப்பிரிவினை பிரச்சினை கவனிக்கப்படாமலே கிடக்கின்றன.
சில மாநிலங்களில், எடுத்துக்காட்டாக உ.பி.யில், “மத மன உளைச்சல்களும்”, “சாதிய பாகுபாடும்” தான் “சீர்திருத்தும் காரணிகள்” என கருதப்படுகிறது. இது குறித்து சிறையில் சீர்த்திருத்தும் காரணிகள் பற்றிய அத்தியாயம்,” அனைத்து வகையிலும், ஒழுக்கத்திற்கு இணையானது என்பதால் மத மன உளைச்சல்களுக்கும், சாதிய பாகுபாட்டிற்கும் நியாயமான மரியாதைத் தரப்பட வேண்டும்.” என்கிறது. இந்த பாகுபாடுகளின், “நியாயமான, இணக்கமான ” தன்மையைத் தீர்மானிக்கும் அதிகாரம் முற்றிலும் சிறை நிர்வாகத்திற்கே உரியது.
ஆண்- பெண் இரு பாலரிலும், சிறைக் கைதிகளுக்கிடையே வேலைப் பிரிவினையில், சிலருக்கு கடின வேலையிலிருந்து விலக்கு அளித்து, சாதிய பாகுபாட்டை மேலும் அதிகப்படுத்துவதே இந்த ‘நியாயமான’ என்பதன் பொருளாகும்.
சில மாதங்களுக்கு முன் திருத்தப்பட்ட சிறைவிதிகள் கையேடு, கன்சர்வன்சி (conservancy work) வேலைக்கு- மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் (manual scavenging) வேலைக்கு அரசு கொடுத்துள்ள பெயர்- சாதி அடிப்படையிலான வேலைப் பிரிவினையைத் தொடர்கிறது. ‘மால் வாஹன்’ அல்லது கன்சர்வன்சி எனத் தலைப்பிட்டுள்ள அத்தியாயம்,” மெஹ்டார் சாதியைச் சேர்ந்த கைதிகளே கழிவறைகளில் உள்ள மனித கழிவுகளை அகற்றுவதற்கு பொறுப்பாவார்கள்.” என்று கூறுகிறது.
இதை ஒத்த நடைமுறைகளே பஞ்சாப் மற்றும் அரியானா மாநில சிறைத்துறை கையேடுகளிலும் உள்ளன. துப்புரவு தொழிலாளர், முடி திருத்துபவர், சமையல்காரர், மருத்துவமனை உதவியாளர்கள் அனைவரும் சாதிய அடையாளப்படியே தேர்ந்தெடுக்கப்படுவர். ஒருவேளை குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் ஒரு சிறையில் இல்லை எனில், அருகிலிலுள்ள சிறையிலிருந்து அந்த குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து அந்த வேலையை செய்ய வைக்க வேண்டும். இதில் எந்த விலக்கோ, மாற்றமோ அந்த கையேட்டில் குறிப்பிடப்படவில்லை.
சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பற்றி ஆய்வு செய்யும், காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு( CHRI) அமைப்பைச் நிரல் அதிகாரி, சபிதா அப்பாஸ் என்பவர் அண்மையில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில சிறைகளைப் பார்வையிடச் சென்றிருந்த போது வெளிப்படையாகவே சாதிய பாகுபாடு பின்பற்றப் படுவது கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறுகிறார். “ஆண்- பெண் கைதிகள் ஒன்று சேர்ந்து வந்து சாதி அடிப்படையில் தங்களுக்குத் ஒதுக்கப்படும் வேலைகள் பற்றிக் கூறினர். பலர் ஏழ்மையாலும், குடும்பத்தினரின் பொருளாதார உதவி இன்மையாலும் அந்த வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் வேதனையோடு கூறினர். இவர்களும் கூட பின்தங்கிய சாதியைச் சேர்ந்தவர்கள் தான்” என்கிறார் அப்பாஸ்.
இவரது ஆய்வு, பஞ்சாப் மற்றும் அரியானாவின் சட்ட சேவைகள் ஆணையத்தால்
நிறுவப்பட்டது. சிறை அமைப்பில் பிரச்சினைகள் குவிந்து, நோயாக பரவிக் கிடப்பது குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விசாரணக் கைதிகளுக்கு வேலை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்களையும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக அவர் கூறுகிறார். இந்த இரு மாநிலங்களிலும் உள்ள சிறைகளில் துப்புரவு பணியாளர்களுக்கான பணி இடங்கள் பல ஆண்டுகளாக காலியாகவே இருப்பதாகவும், அந்தப் பணியை கீழ் சாதியைச் சேர்ந்த கைதிகள் செய்வதாகவும் தெரிவிக்கிறார். ஆங்கில காலனிய சிறைச் சட்டங்களையே இன்னும் பின்பற்றி வரும் மற்ற மாநில அரசு சிறைத்துறைகள் போல் இல்லாமல் பஞ்சாப் சிறைத்துறை பல திருத்தங்களை செய்திருப்பதை அப்பாஸ் சுட்டிக்காட்டுகிறார். ” பஞ்சாப் ஒப்பீட்டளவில் புதிய மாநிலம். கடைசியாக 1996 ல் பதுப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் சாதி அடிப்படையிலான ஏற்பாட்டை ஒழிக்கவில்லை.” என்கிறார் அவர்.
மேற்கு வங்காளத்தில் மட்டுமே “அரசியல் மற்றும் ஜனநாயக இயக்கங்கள்” தொடர்பான கைதிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் வேலைப் பிரிவினை என வரும் போது, பிற மாநிலங்கள் போலவே பிற்போக்காகவும், அரசியலமைப்பை மீறும் வகையிலுமே சாதி அடிப்படையில் நடக்கிறது. உ.பி சிறை கையேட்டைப் போலவே மே.வங்க சிறைத்துறை கையேடும், “மத பழக்க வழக்கங்களிலும், சாதிய பாகுபாட்டிலும் தலையிடாக் கொள்கையை பின்பற்றுகிறது.” சில குறிப்பிட்ட சலுகைகள் கையேட்டில் இடம் பெற்றுள்ளன. பார்ப்பனர்கள் பூணூலை அணிந்து கொள்ளவும், முஸ்லீம்கள் நீண்ட கால்சட்டைகளை அணிந்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அத்துடன் அந்த கையேடு, சிறை அதிகாரியின் மேற்பார்வையில், குறிப்பிட்ட பொருத்தமான சாதியைச் சேர்ந்த சமையல்காரர்கள் சமைக்கலாம். அதனை கைதிகள் அறைக்குக் கொண்டு செல்லலாம்.” அதே போல, ” துப்புரவு பணியாளர்களை மெஹ்டார் அல்லது ஹரி சாதியிலிருந்தும், சந்தால் அல்லது பிற சாதியிலிருந்தும், அவர்களது மாவட்ட வழக்கத்திற்கு ஏற்ப அங்கு அவர்கள் செய்யும் இதே போன்ற தொழிலை இங்கும் செய்யத் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது வேறு எந்த சாதியினர் விரும்பி செய்ய முன்வந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.” என்கிறது.
இந்த நடைமுறை சிறை விதிகள் புத்தகத்தில் உள்ளன. ஆனால் இதுவரை யாரும் இதனை கேள்வி கேட்கவில்லை. ஆந்திரப்பிரதேச முன்னாள் காவல்துறை தலைவரும், அரசின் சிறைகள் மற்றும் ஒழுங்குப்படுத்தும் நிர்வாக அகாடமியின் முன்னாள் இயக்குநருமான Dr. ரியாசுதீன் அகமது, ” கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் போது சாதிப் பிரச்சினை வெளிப்படையாக விவாதிக்கப்படவே இல்லை. எனது 34 ஆண்டு பணிக் காலத்தில் இது விவாதத்திற்கு வந்ததே இல்லை.” என்கிறார். சிறைக் கையேடுகளில் உள்ள இந்த விதிகள் யாவும் அந்தந்த மாநிலங்கள் சிறைக் கைதிகள் மீது கொண்டுள்ள மனப்பான்மையின் பிரதிபலிப்பாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, சிறை அதிகாரிகள் வெளியே உள்ள இந்த சாதிய அமைப்புச் சமூகத்தில் இருந்து வந்தவர்களே. கையேடுகள் என்ன கூறினாலும், சிறைக் கைதிகளிடையே சமத்துவத்தையும், கண்ணியத்தையும் உறுதி செய்ய வேண்டியது சிறை அதிகாரியைச் சார்ந்தது.” என தெரிவிக்கிறார் அவர்.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும், இந்திய சாதிய அமைப்பு முறைக்கு எதிராக குரல் கொடுப்பவருமான திஷா வடேகர், சிறை விதிகளையும் மனுநீதியையும் ஒப்பிடுகிறார். மனுநீதியை எழுதியதாகக் கூறப்படும் மனு, ஒரு புராண உருவம். மனுநீதி அந்தக் காலத்தில் மனித இனத்தை, பால் மற்றும் சாதி அடிப்படையில் பிரித்து சீரழித்துவிட்டது. சிறை விதிகள் மனுநீதியின் மறு உருவமே அன்றி வேறல்ல. சிறை அமைப்பு, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” மற்றும் ” சட்டத்தைப் பாதுகாப்பது” என்ற கொள்கைகளின் மீது கட்டப்பட்ட நெறிமுறை சார்ந்த தண்டனை முறையை செயல்படுத்தத் தவறிவிட்டது. இதற்கு மாறாக, அநீதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மனுநீதியை பின்பற்றுகிறது. மனுநீதி, சில மனிதர்களை மற்றவர்களை விட அதிகமாக தண்டிக்கப் பட வேண்டும் என்றும், சிலரது உயிர் மற்றவர்களின் உயிரைவிட மதிப்புமிக்கது என்றும் நம்பிய ஒரு அமைப்பு. அரசுகள் இந்த சாதி அடிப்படையிலான புரிதலையே “நீதி” என ஏற்றுக் கொண்டு அதிலேயே ஊன்றி நிற்கின்றன. மேலும், சாதிக் கட்டமைப்பில் தனிநபரின் நிலைக்கேற்ப தண்டனையையும், வேலையையும் முடிவு செய்கின்றன.” என்று விளக்குகிறார் வடேகர்.
மே. வங்கத்தைக் தவிர பிற மாநிலங்கள் யாவும் 1894 ம் ஆண்டு சிறை சட்டத்தையே கடன் வாங்கி உள்ளனர். ” வெறும் கடன் வாங்கியது மட்டுமல்ல. அதிலேயே ஊன்றி நிற்கின்றனர்.” என்கிறார் அகமது. 2016 ல் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (BPRD) விரிவான மாதிரி சிறைத்துறை கையேடு ஒன்றை கொண்டு வந்தது. அது ஐக்கிய நாடுகள் சபையின் பெண் கைதிகளை நடத்த வேண்டிய விதிகள் (UN Bangkok Rules) மற்றும் ஐ.நா. வின் கைதிகளை நடத்துவதில் மேற்கொள்ள வேண்டிய குறைந்த பட்ச விதிகள்( the Mandela Rules) போன்றவற்றை உள்ளடக்கிய பன்னாட்டுத் தரத்துடன் இருந்தது. இவை இரண்டுமே, இன,நிற,பால், மொழி, மதம், அரசியல் அல்லது பிற கருத்துக்கள், தேசிய அல்லது சமூக மரபு, சொத்து, பிறப்பு அல்லது வேறு எந்த நிலை யின் அடிப்படையிலும் பாகுபாடு காட்டும் நடைமுறைகளைத் ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகின்றன. இந்தியாவும் பங்கேற்ற, 1977 ல் கூடிய ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய மாநாடு, ” எவரும் கட்டாயப் படுத்தப்பட்ட அல்லது வலுக் கட்டாயமாக வேலை செய்யத் தேவை இல்லை” என அறிவித்துள்ளது.
மாற்ற வேண்டும் என்று விருப்பமில்லையா?
சிறைத்துறை மாநில அரசுகளின் கீழ் வருவதால் மாதிரி சிறைத்துறை கையேட்டில் கூறப்பட்டுள்ள மாற்றங்களை நடைமுறைப் படுத்த வேண்டியது முற்றிலும் மாநில அரசுகளின் பொறுப்பாகும். ஏற்கனவே பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் சிறைக் கையேடுகளில் உள்ள பிரச்சனைகளை ஏற்றுக் கொண்டுள்ள மாதிரி கையேடு, ” சிறைகளில் சாதி,மத அடிப்படையில் சமையலறையை நிர்வகிப்பது அல்லது உணவு சமைப்பது ஆகியவை முற்றிலும் தடை செய்யப்படுகிறது.” என்கிறது. அதே போல அந்த கையேடு சாதி, மத அடிப்படையில் யாருக்கும் “சிறப்பு சலுகைக்” காட்டுவதையும் தடை செய்கிறது. உண்மையில், அது ” சாதி, மத அடிப்படையில் போராடுவது அல்லது நடப்பதை ” தண்டனைக்குரிய குற்றமாக பட்டியலிட்டுள்ளது. ஆனால் மாதிரி சிறைத்துறை கையேட்டினை நடைமுறைப்படுத்துவதை விருப்பத்தின் கீழ் விட்டுவிட்டது.
மாநில சிறைத் துறைகள் மனிதத்தன்மை அற்ற, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் நடைமுறை விதிகளை ரத்து செய்யவில்லை எனக் கூற முடியாது. கோவா செய்துள்ளது. அதுபோல டெல்லி மகாராட்டிரம், ஒடிசா ஆகியவையும் ரத்து செய்துள்ளன. அவைகள் சிறையை நடத்துவதில் சாதிக்கு எந்த தொடர்பும் இல்லை என மிகக் குறிப்பாகக் கூறுகின்றன. காலப் போக்கில் விலங்கிடுவது, சாட்டையால் அடிப்பது போன்ற பல மனிதத்தன்மை அற்ற செயல்கள் ஒழிந்து விட்டன. அது போன்றே சாதி அடிப்படையிலான வேலையும் சில மாநிலங்களில் ஒழிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவை சாதி நடைமுறையை முற்றிலும் களை எடுத்து விட்டனவா? “இல்லை” என்கிறார் ஒரு முன்னாள் சிறைவாசி லலிதா.* 2010 க்கும் 2017க்கும் இடையே மும்பை மற்றும் மகாராட்டிராவின் பல பகுதிகளிலும் பல வழக்குகளை சந்தித்துள்ளார் லலிதா. அவரது பெரும்பாலான சிறைவாசம் பைகுலா பெண்கள் சிறைச்சாலையில்தான். அவ்வப்போது பிற சிறைகளுக்கும் அவர் கூட்டிச் செல்லப்பட்டதுண்டு. அந்த பயணங்களும், பிற கைதிகளுடனும், சிறை அதிகாரிகளுடனும் மேற் கொண்ட பேச்சு வார்த்தையும் சிறை அமைப்பில் உள்ள அத்தனை குழறுபடிகளையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பை அவருக்கு தந்தது.
ஆண்கைதிகளை விட பெண் கைதிகள் குறைவாகவே இருப்பதால் அவர்களுக்கான வசதிகளும் குறைவாகவே இருக்கும். லலிதா தன்னுடைய மற்றும் சக கைதிகளுடைய கண்ணியத்திற்காகவும், அடிப்படை உரிமைகளுக்காகவும் சிறை யில் கடுமையாக சண்டைப் போடுபவராக இருந்தார். எனவே பெண் சிறைக் கைதிகள் நல்ல தரமான உணவிற்காகவும், முட்டை, கறி போன்றவற்றிற்காகவும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக போராடும் போது லலிதா முன்னே நிற்பார். ஏராளமான சிறை விதிகள் இருப்பதால் சிறை அதிகாரிகள் கைதிகளுக்கும் அவர்களுடைய சட்டப் பிரதிநிதிகளுக்கும் அவற்றை காட்டி அவர்கள் தலையிடுவதை தடுத்து விடுவர். ஆனால் அந்த அலுவலக ஆவணங்கள் எல்லாம் சாதாரண மக்களுக்கு எப்போதாவதுதான் எட்டும். சிறைக் கைதிகள் பற்றியோ சொல்லவே வேண்டாம். ” தகவல் அறிந்த கைதி தனது உரிமைக்காகப் போராடுவதை விட ஆபத்தானது எதுவுமில்லை.” என்கிறார் லலிதா.
லலிதாவின் கூற்றை அகமது ஏற்றுக் கொள்கிறார். புதுப்பிக்கப்பட்ட கையேடு கிடைப்பதில் உள்ள தாமத்தைப்பற்றிக் கூறுகிறார், வேலூர் சிறைகள் மற்றும் நல்வழிப் படுத்துதல் அகாடமியின் பேராசிரியர் பெலுவா இம்மானுவேல். ஒரு திருத்தம் கையேடுகளில் இடம் பெற சராசரியாக 15 ஆண்டுகள் ஆகின்றன என்கிறார் அவர்.
“ஒவ்வொரு முறை மாநில அரசுகள் திருத்தங்களை கூறும் போதும் அவை அலுவலக மட்டத்தில் வெறும் குறிப்புகளாகவே குறித்துக் கொள்ளப் படுகின்றன. மாற்றங்கள் அனைத்தும் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறை கையேடுகள் மறு பதிப்பு செய்யப்படும் போது மட்டுமே சேர்க்கப்படுகின்றன. எல்லா திருத்தங்களையும் ஒரே இடத்தில் கண்டுபிடிப்பது இயலாத காரியம் ஆகும்” என்கிறார் இம்மானுவேல். சிஎச்ஆர்ஐ எனப்படும் காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு எனும் அமைப்பு சிறைக் கைதிகளின் உரிமைக்காக பல பத்தாண்டுகளாக பணியாற்றி வருகிறது. ஆனால் பல காலமாக ஒரு திருத்தப்பட்ட கையேட்டை பெறும் முயற்சிகளில் வெற்றியடையவில்லை. வெறும் 10 மாநிலங்கள் மட்டுமே தங்கள் சிறைத்துறை விதிகளை சிறை இணைய தளத்தில் பதிவிட்டுள்ளன. பிற மாநிலங்களில் திருத்தப்பட்ட கையேடுகளைப் பெறுவது மிகவும் கடினம். எங்கள் அனுபவத்தில், சிறைவாசிகள் சிறை கையேடுகளைப் பார்ப்பதே பெரும் சவாலாகும். உண்மையில் சட்டப்படி, சிறை நூலகங்கள் சிறை விதிக் கையேடுகளின் பிரதிகளை வைத்திருக்க வேண்டும்.” என்கிறார் சிஎச்ஆர்ஐ அதிகாரி சுகந்தா சங்கர்.
சிறையில் ஒரு பெண் துறவி
மகாராஷ்டிரா சிறைகளில் எழுதப்படாத சாதிய நடைமுறை எங்கும் பரவலாக உள்ளது என்கிறார் லலிதா. அவர் பைகுலா சிறையில் இருந்த போது 2008 ம் ஆண்டு நடந்த மாலேகோயன் குண்டுவெடிப்பு வழக்கில், முக்கிய குற்றவாளியாக கைதாகி சிறைக்கு வந்த பிரக்யா சிங் தாக்கூரும் இருந்திருக்கிறார். 2017 ல் அவர் விடுதலையான உடன் பாஜக வில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பின்னர் 2019 ல் அவர் அவரது சொந்த ஊரான போபாலிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கைதாகி வரும்போது, அவர் தனக்குத்தானே சாமியார் எனக் கூறிக் கொண்ட சாதாரண ஆளாகத்தான் இருந்தார். ஆனால் சிறையில் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதில் அது தடையாக இருந்ததில்லை. சிறை அதிகாரிகள் மீதும் செல்வாக்குச் செலுத்துவதையும் அது தடுக்கவில்லை. தாக்கூர் அங்கிருந்த மூன்று “தனிச்சிறையறைகளில்” ஒன்றில் வைக்கப்பட்டார். அவைகள் ஒருபுறம் பணக்கார, செல்வாக்குள்ளவர்களுக்கான “சிறப்பு அறையாகவும்” மறுபுறம் தவறு செய்யும் கைதிகளைச் சித்ரவதை செய்யும் அல்லது தனிமைப்படுத்தப்பட்டு வைக்கும் சிறையாகவும் இருந்தது. தாக்கூர் இருந்த அந்த தனி அறைக்கு வெளியே மூன்று விசாரணைக் கைதிகள், அவர் கூப்பிட்டக் குரலுக்கு ஓடிப் போய் சேவை செய்ய, வேலையாட்களாக (சேவிகாக்கள்) எப்போதும் நின்றிருப்பர். அதே தாக்கூர் வகுப்பைச் சேர்ந்த அல்லது ” போர் வீரர்” சாதியைச் சேர்ந்த பெண் விசாரணைக் கைதி அவரது உணவுத் தேவையை கவனிக்க நியமிக்கபட்டிருந்தார்.
புழுக்களும், முட்டை ஓடுகளும் உள்ள உணவை சிறை அதிகாரிகள் தனக்குத் தருவதாகக் கூறியதால், விசாரணை நீதிமன்றம் அவருக்கு வீட்டிலிருந்து சமைத்த உணவை கொண்டு வர அனுமதித்திருந்தது. அவரது மைத்துனர் தினமும் பல அடுக்கு சாப்பாட்டு கேரியரில், சூரத்திலிருந்து 280 கி. மீ தூரம் வந்து அவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டுச் செல்வார். அதிகாலையில் புதிதாக சமைத்த உணவு வந்த உடன் ‘ சேவிகா’ (பணியாள்) விரைந்து சென்று சிறை அலுவலகத்திலிருந்து அதை எடுத்து வருவார். அவரது ஒரே வேலை மூன்று வேளையும் தாக்கூருக்கு உணவு பரிமாறுவது மட்டுமே. இதே போல, ஒரு போதைப் பொருள் கடத்தல் பெரும்புள்ளி என்று கூறப்பட்ட, ஆதிக்கசாதியான ஜாட் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் விசாரணைக் கைதி அவருக்குப் ‘மெய்காப்பாளராக’ இருந்தார். ஒரு உள்ளூர் தலித் இன பெண் கைதி அவரது கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும்.
பிரக்யாவின் மதமும், அவரது சாதி நிலையும், அரசியல் செல்வாக்கும் சிறையில் அவரது இடத்தையும், அவரது உதவியாளர்களின் நிலையையும் தீர்மானித்தன. பிரக்யா, அவர்களின் சேவையை அவரது சட்டப்படியான உரிமை என்பது போல் அனுபவித்தார். அரசும் அதை ஏற்றுக் கொண்டது. ” சிறை விதிகளில் அத்தகைய வசதிகளை பெறுவதற்கு இடமிருக்கிறதா என்பது ஒரு விடயமே அல்ல. அவையாவும் சிறை அதிகாரிகளின் முழு அறிதலுடன் தான் நடந்தன என்பதுதான் முக்கியமான விடயம். ” என்கிறார் லலிதா. அப்போது சிறையிலிருந்த பல முன்னாள் சிறைக் கைதிகளும் இதனை ஆதரித்தனர்.
மகாராட்டிராவில் உள்ள 60 மாவட்ட, மத்திய சிறைகளில் பைகுலா சிறை மட்டுமே பெண் விசாரணைக் கைதிகளுக்கான ஒரே சிறை ஆகும். இதில் 262 கைதிகளை வைத்துக் கொள்ள முடியும். ஆனால் அவ்வப்போது இந்த கொள்ளளவை மீறி வியக்கத்தக்க வகையில் கைதிகள் வருவதும் உண்டு. தண்டனைப் பெற்ற கைதிகளை விட்டுவிட்டு பார்த்தாலும்கூட, அன்றாட வேலைகளைச் செய்வதற்காக விசாரணை கைதிகள் வந்தனர். பெரும்பாலான உடலுழைப்பு வேலைகளை விசாரணை கைதிகளே செய்தனர். இதில் எளிதில் சிக்கிக் கொள்பவர்கள் வங்காள மொழி பேசும் முஸ்லீம் பெண்கள்தான். அவர்கள் எப்படி இருந்தாலும் வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்தவர்கள் என்ற குற்றச் சாட்டில் சிறைக்குள் தள்ளப்பட்டவர்களாகவே இருப்பர்.
ஒருவர் கைது செய்யப் பட்டால் காவல்துறைக்குப் பயந்து வெளி உலகம் அவருடன் உள்ள தொடர்பைத் துண்டித்துக் கொள்ளும். தான் சிறையிலிருந்த நான்கு மாதங்களில் வீட்டு வேலை செய்து வந்த, 33 வயதான நூர்ஜஹான் மண்டலைச் சந்திக்க ஒருவர் கூட வரவில்லை. ” எனது குடும்பம் என்னைத் தொடர்பு கொள்ளவோ, ஏன் பணவிடை அனுப்புவதற்கும் கூட அஞ்சுகின்றனர். நான் பசியோடிருக்கும் போது சாப்பிட ஏதாவது நொறுக்குத் தீனி வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. சிறையில் என்னை கவனித்துக் கொள்ள இந்த மோசமான வேலைகளையே முற்றிலும் நம்பி இருக்கிறேன்.”என்கிறார் அவர். மே.வங்காளத்தின் வங்க தேச எல்லையில் உள்ள நகரைச் சேர்ந்த தலித் இன முஸ்லீம் பெண் மண்டல். அவள் குப்பைக் கூட்டுவது, துடைப்பது, வயதான பெண் கைதிகளை குளிப்பாட்டுவது போன்றவற்றின் மூலம் சில சிற்றுண்டி வில்லைகளைப் (coupon) பெற்றுக் கொள்கிறார்.
இவரைப் போலவே, மும்பை பெரு நகரப் பகுதியில் உள்ள ஐந்து சிறைகளிலும் பல வங்க மொழி பேசும் முஸ்லீம் பெண் கைதிகள், சிறையில் சிறிது பணத்திற்காகவும் அல்லது உணவுக்காகவும் மோசமான வேலைகளைச் செய்கிறார்கள்.” சாதியும் வறுமையுமே இங்கே அடிப்படை காரணிகள்” என்கிறார் லலிதா. ” நீங்கள் சிறையில் எந்த ஒரு ஏழை பார்பனப் பெண்ணும் இத்தகைய அவநம்பிக்கையான நிலைக்குத் தள்ளப்படுவதைப் பார்க்க முடியாது. இந்திய அரசாங்கமும், சமூகமும் அவர்களுக்கு ஆதரவாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை.” என்கிறார் லலிதா.
சிறை என் சாதியை வரைந்தது
1994 ல் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வாய்த் தகராறு முற்றி வன்முறையாக மாறி ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் 20 வயதான செல்வம்* என்பவரும் ஒருவர். சில நாட்கள் துணைச் சிறைச்சாலையில் இருந்த செல்வம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். ” நான் அங்கு 75 நாட்கள் இருந்தேன். எல்லா சிறைச்சாலைக் கட்டிடங்களைப் போலவே பல வார்டுகளும் சிறை அறைகளும் இருந்தன. நான் தனிமைப்படுத்ப்பட்ட 2ம் வார்டில் அடைக்கப்பட்டேன்.” என்கிறார் செல்வம்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1998 ல் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். ” சிறைச்சாலை இப்போது வித்தியாசமாக இருந்தது. வார்டுகள் சாதிப் பெயரைச் சூடி இருந்தன. தேவர்கள், நாடார்கள், பள்ளர்கள், ஒவ்வொன்றும் தனித்தனியான அமைப்புடன் இருந்தன.” என நினைவு கூர்கிறார் செல்வம். அவர் கொல்லர் அல்லது கருமான் என்ற, எண்ணிக்கையில் மிகக் குறைவான சாதியைச் சேர்ந்தவர். ” சிறை அதிகாரிகள் சில சாதியினரை சண்டைச் சாதிகள் (warring castes) எனப் பிரித்து அவர்களைத் தனியாகவும், மற்றவர்களை அவர்களது சாதிப்படியும் வைத்திருந்தனர்.” என விளக்குகிறார் அவர்.
இந்த கொத்தளங்கள் சாதி ஆதிக்கத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்தன. பிற்படுத்த சாதியைச் சேர்ந்த தென் தமிழகத்தில் ஆதிக்கமாக உள்ள தேவர்கள் சிறை, சிற்றுண்டி சாலை, நூலகம்,மருத்துவமனை அருகில் வைக்கப்பட்டனர். அடுத்து நாடார்கள் பகுதி (பிற பிற்படுத்தப்பட்ட சாதி) அதற்கு அடுத்து தொலைவில் பள்ளர்கள் பகுதியில் தலித் இன கைதிகள் வைக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், இந்த பிரிவினை முதலில் விசாரணைக் கைதிகள் பிரிவில் மட்டுமே இருந்தது. அதுவும் தண்டனைக் கைதிகள் பிரிவைப் போல கடுமையானதாக இருக்கவில்லை. இதற்கு நீதித்துறைக்கு இது நெருக்கமாக இருந்ததே காரணம் என விளங்கிக் கொள்ள முடியும். ” சிறைக் கைதிகளை சிறை அதிகாரிகள் மிக கடுமையாக நடத்தினர். ஆனால் விசாரணைக் கைதிகளை அளவுக்கு மீறித் தாக்குவதில்லை. ஏனெனில் அவர்கள் நீதிமன்றத்தில் மனு கொடுக்கும் வாய்ப்பு அதிகம். தண்டனைக் கைதிகள் நீதிமன்றத்தையும் வெளி உலகையும் எளிதாக அணுக முடியாது என்பதால் அவர்களை எளிதாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என நினைக்கின்றனர் அதிகாரிகள். அதனால்தான் பிரிவினை விதிகள் வித்தியாசமாக உள்ளன.” என்கிறார் வழக்கறிஞரும், சமத்துவத்துக்கான குளோபல் நெட்வொர்க் என்ற அமைப்பை நிறுவியரும், சிறுவர் சிறைக் கைதிகளுக்காக பணியாற்றும் தன்னார்வலருமான கே. ஆர் ராஜா.
ராஜா, பாளையங்கோட்டை சிறை அமைப்பைக் குறித்து கூர்ந்து ஆய்வு செய்துள்ளார். சிறைக்குள் நடக்கும் மாற்றங்களையும் அந்த சமயத்தில் வெளியில் நடந்த சமூக அரசியல் மாற்றங்களையும் இணைக்கிறார் அவர். “சிறைக்குள் நடப்பவை வெளியில் சமூகத்தில் நடப்பதன் பிரதிபலிப்புத்தான்.” என விவரிக்கிறார் அவர். 1990 களின் இடைக்காலத்தில் தமிழகத்தில், குறிப்பாக தென் தமிழகத்தில் தலித் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வந்தன. 1997 ல் மதுரை மேலவளவு பகுதியில் கிராம பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலை ஒட்டி, ஆறு தலித் இனத் தலைவர்களை தேவர் சமூகத்தினர் படுகொலை செய்தனர். ” தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தர்மபுரி மாவட்டங்களில் தொடர் வன்முறை வெடித்தது. ஆதிக்க சாதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலாத அரசு, திடீர் நடவடிக்கையாக சிறைச்சாலைக்குள் இந்த சாதிப் பிரிவினையை ஏற்படுத்தினர்.” என்கிறார் ராஜா.
இந்த ஏற்பாடு பத்தாண்டு களுக்கும் மேல், பொது மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இன்றி நீடித்தது. 2011 ல் மதுரை வழக்கறிஞர் ஆர் அழகுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
“நான் எனது கட்சிக்காரர்களுடன் நேரடியாகப் பேச விருப்புபவனாக இருந்ததால் அடிக்கடி சிறைச்சாலைக்கு அவர்களை சந்திக்கச் செல்வது வழக்கம். முதல் முறையாக முருகன் என்பவரைப் சந்திக்க பாளையங்கோட்டை சிறைக்கு சென்றது இன்னும் என் நினைவில் உள்ளது. அவரைப்பற்றிய குறைவான விவரங்களே எனக்குத் தெரிந்திருந்தால், சிறைக் காவலர் சரியான ஆளை கண்டுபிடித்து விடுவார் என எண்ணினேன். நான் முருகன் என்றதும் அவர் என்னிடம் என்ன சாதி எனக் கேட்டார். நான் கலங்கிப் போனேன். எனக்கு அவரது சாதி தெரியாததால் காவலரும் எனக்கு உதவ முடியவில்லை. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது பாளையங்கோட்டை சிறையில் ஒரு கைதியை பார்க்க வேண்டும் என்றால் அவரது பெயரும், வழக்கு விவரங்களும் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. உங்களுக்கு அவரது சாதியும் கூடத் தெரிந்திருக்க வேண்டும் என்று.” என்கிறார் அழகுமணி.
இது அரசியலமைப்புக்கு விரோதமானது. ஆனால் இதனை காலப்போக்கில் நிறுவனமயமாக்கிவிட்டனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட முடிவு செய்தார் அழகுமணி. நீதிமன்றம் இதைக் கவனத்தில் கொண்டு விரைவாக தலையிடும் என நம்பினேன். ” மாறாக, இவ்வாறு பிரிப்பதைத் தவிர சிறைக்குள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழித் தெரியவில்லை என வாதாடினர் சிறை அதிகாரிகள். நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்து விட்டது.” என்கிறார் அவர். இவ்வாறு சமூகத்தில் அமைதியை உறுதி செய்ய “நம்பத்தகுந்த வழி” என்ற பெயரில் ஒரு பிரிவினைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது.
இது வசதியானது என்பதற்கும் மேலான ஒன்று, என வாதிடும் அழகுமணி,” இந்திய அரசு இத்தகைய பிரிவினையையும், பாகுபாட்டையும் சிறைக்கு வெளியே நியாயப்படுத்த முடியுமா? அப்படியானால் சிறைக்குள் அது எப்படி நியாயமாகும்?” என்று வினா எழுப்புகிறார் அழகுமணி.
பாளையங்கோட்டை சிறையில் நடைமுறையிலிருக்கும் இந்த பிரிவினை ஊரறிந்த ஒன்றாக இருந்தாலும் இதே போன்ற நடைமுறை பிற மாவட்ட மத்திய சிறைச்சாலைகளிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ளன. எடுத்துக்காட்டாக மதுரை மத்திய சிறையில், இந்தப் பிரிவினை மட்டுமல்ல, சாதி அடிப்படையிலான வேலைப் பிரிவினையும் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. மிக மோசமாக, தலித் இன கைதிகளுக்கே துப்புரவு பணிகளை ஒதுக்குகின்றனர். இதற்கு எதிராக மீண்டும் அழகுமணி தொடுத்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தேசிய குற்ற ஆவணத் துறை தரவுகள் இந்திய சிறைகளில் தொடர்ந்து பட்டியலின சாதியினர், ஒதுக்கப்பட்ட பழங்குடிகள், பிற பிற்படுத்தப்பட்ட சாதியை மக்களே மிக அதிகமாக இருப்பதாக காட்டுகின்றன. எனினும், ஒரு சில சாதி எதிர்ப்பு அமைப்புகளையும், அழகுமணி, ராஜா போன்ற வழக்கறிஞர்களையும் தவிர்த்து பெரும்பாலான உரிமைக் குழுக்களும் இந்திய சிறைகளில் இந்த சாதிய நடைமுறை உண்மைகளை பார்க்கத் தவறி விடுகின்றனர். ஆய்வுகளும், வாதங்களும்பெரும் அளவில் தெளிவாகத் தெரியக்கூடிய சட்டமீறல்களிலேயே கவனத்தை குவிக்கின்றன. சாதிப் பாகுபாடு போன்ற சட்டமீறல்கள் அவர்கள் கண்களில் படுவதே இல்லை.
செல்வாக்கான இடங்களில் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்ற அபாயகரமான பிரச்சினையின் அடையாளம்தான் இது என்கிறார் வடேகர். ” ஏறத்தாழ எல்லா சிறைவாசிகளின் உரிமைக்காகப் போராடும் அமைப்புகளும், கல்வியாளர்களும் சாதிப் பிரச்சனையிலிருந்து ஒதுங்கியே இருக்கின்றனர். அப்படியே பேசினாலும் அது பிற்சேர்க்கையாகவே உள்ளதே தவிர பிரச்சினையின் ஒருங்கிணைந்தப் பகுதியாகப் பார்க்கப் படுவதில்லை. சிறைக்கைதிகள் உரிமைப் பற்றிப் பேசும் போது சாதியை வலுக்கட்டாயமாக அழித்து விடுவது நேர்மையான செயல் ஆகாது. இந்திய சிறைகளைப் பற்றியும், சிறைத்துறை அமைப்பு பற்றியும் விமரிசையாகப் பேசும் போது சாதியை வெளிப்படையாக மறந்துவிடுவதை யாராவது விளக்க முடியுமா? என்று கேட்கிறார் திஷா வடேகர்.
(*சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
(www.thewire.in இணையதளத்தில், சுகன்யா சாந்தா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.