கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.