பீமா கோரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள 84 வயதான ஸ்டான் ஸ்வாமியின் உடல்நிலைக்கருத்தில் கொண்டு, அவரைத் தனியார் மருத்துவமனையில் இரண்டு வார காலம் அனுமதிக்க அனுமதியளித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
எனக்குப் பிணை வழங்க வேண்டும் என்பதே எனது ஒரே வேண்டுகோள் – ஸ்டான் ஸ்வாமி
மேலும், குறிப்பிட்ட அந்த காலத்திற்கு ஸ்டான் ஸ்வாமி பாந்த்ரா பகுதியில் உள்ள ஹோலி குடும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டுமெனவும் சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
இதற்கு முன்னர், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டும் என்ற மனு மீதான விசாரணையின்போது, அரசு மருத்துவமனையான ஜே.ஜே.மருத்துவமனையில் அனுமதிப்பதை விட சிறையில் இருந்தே தான் இறந்து போகலாம் என்று ஸ்டான் ஸ்வாமி தெரிவித்திருந்தார்.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டும் – ஸ்டான் ஸ்வாமி உயர்நீதிமன்றத்தில் மனு
இந்நிலையில், நேற்று மே 28 அன்று நடத்த விசாரணையின்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதை ஸ்டான் ஸ்வாமி ஏற்றுக்கொள்கிறார் என்று அவரது வழக்கறிஞர் தேசாய் தெரிவித்திருந்தாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேண்டுகோளை மகாராஷ்டிரா அரசின் வழக்கறிஞரும், தேசிய புலனாய்வு முகமையின் வழக்கறிஞரும் ஏற்க மறுத்ததாகவும், ஸ்டான் ஸ்வாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அதற்கான தொகையை அரசு செலுத்தாது என்று கூறியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த ஸ்டான் ஸ்வாமியின் வழக்கறிஞர், அந்த செலவீனங்களை ஸ்டான் ஸ்வாமி ஏற்றுக்கொள்வர் என்று கூறிய நிலையில், உயர்நீதிமன்ற அமர்வு இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக தி வயர் செய்தி குறிப்பிடுகிறது.
இதற்குமுன்னர், ஜாமீன் மீதான விசாரணையின்போது தனது உடல்நிலை குறித்து தெரிவித்த ஸ்டான் ஸ்வாமி,”நான் எட்டு மாதங்களுக்கு முன்பு தலோஜா சிறையில் அடைக்கப்பட்டேன். அதிலிருந்து எனது உடல் நலம் மெல்ல குன்றி வருகிறது. என்னால் தற்போது எழுத முடியவில்லை, நடக்கவும் இயலவில்லை. மற்றவர்கள் எனக்கு ஊட்டாமல் என்னால் சாப்பிடவும் முடியவில்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.