இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனால் கேரளாவில் மட்டும் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பதாக பாஜகவினர் நடிக்கிறார்கள் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடுமையாகச் சாடினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பாலக்கோட்டில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார். அக்கூட்டத்தில் பினராயி விஜயன் பேசியது,
“மிக அண்மையில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி ஆக்ராவில் கிறிஸ்துமஸ் தாத்தா உருவ பொம்மை எரிக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிறிஸ்தவர்களை இந்துத்துவவாதிகள் தாக்கினர். ஹரியானாவின் அம்பாலாவில் இயேசு கிறிஸ்துவின் சிலை உடைக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.”
“கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் 142 ஆக இருந்த நிலையில் தற்போது அது 478 ஆக அதிகரித்திருக்கிறது. கிறிஸ்தவ மக்கள் மீது நாடு முழுவதும் உள்ள சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்துகிறார்கள்.”
“மிகப்பெரிய அளவில் மதமாற்றம் செய்வதாகக் கிறிஸ்தவ சமூகத்தின் மீது சங்பரிவார் அமைப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை 2.3% மட்டும்தானே இருக்கிறது. நிலைமை இப்படியிருக்கையில் எவ்வாறு அவர்கள் மற்ற மத மக்களைக் கூட்டம் கூட்டமாக மதமாற்றம் செய்திருக்க முடியும்?”
“பல ஆண்டுகளாக மருத்துவச் சேவை, கல்விச் சேவை மற்றும் தன்னார்வ தொண்டுப் பணிகளில் ஈடுபடும் கிறிஸ்தவ அமைப்பினர், மிகப்பெரிய அளவில் மதமாற்றம் செய்திருந்தால் அவர்களின் மக்கள் தொகை அதிகரித்திருக்க வேண்டும்தானே”.
“இந்தியாவில் சங்பரிவார் அமைப்புகள் செய்யும் மதவெறுப்பு சம்பவங்களைக் கேரளாவில் செய்ய முடியாது. பாஜகவுக்கு மாற்று என்று ஒன்று இருக்கிறது என்பதைக் கேரளா நிரூபித்துள்ளது.சங்பரிவார் அமைப்பின் வகுப்புவாத சித்தாந்தங்களுக்கு எதிராக இந்திய மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பாஜகவின் வகுப்புவாத திட்டத்தை எதிர்க்க வலுவான சித்தாந்தம் தேவை. அந்த வலுவான சித்தாந்தம் இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது.”
என்று அக்கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Source : TheHindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.