கர்நாடக சட்ட மேலவையில் பாஜக உறுப்பினர் ஏ.எச்.விஸ்வநாத், முதல்வர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கத் தகுதியற்றவர் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டுக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விஸ்வநாத் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அமைச்சரவையில் இடம்பெற முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம், பாஜகவில் சேருவதற்காக, மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து ராஜினாமா செய்த 17 எம்எல்ஏக்களில் விஸ்வநாத்தும் ஒருவர். அவருடன் மற்ற எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். தகுதிநீக்கத்தை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
அவர், டிசம்பர் மாதம் நடைபெற்ற மறுதேர்தலில், ஹன்சூர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கர்நாடகாவில், பாஜக அரசை உருவாக்க உதவிய அனைவர்க்கும் அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றத் தான் எடியூரப்பா, விஸ்வநாத்துக்குச் சட்ட மேலவை உறுப்பினர் பதவியை வழங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“விஸ்வநாத் மீண்டும் தேர்தலில் வெற்றிபெறும் வரை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 164 (1) (பி) மற்றும் பிரிவு 361 (பி) ஆகியவற்றின் கீழ் அவரது தகுதி நீக்கம் தொடரும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எம்.டி.பி.நாகராஜ் மற்றும் ஆர்.சங்கர் ஆகியோரும் எம்எல்ஏக்களாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இருவரும் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்றதால் சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எடியூரப்பா தனது 27 உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவையை 34 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையாக விரிவுபடுத்த முயற்சித்து வருகிறார். மேலும் உள்ள 7 பதவிகளுக்குக் கடுமையான போட்டி நிலவுகிறது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்க உதவிய அனைவர்க்கும் அமைச்சர் பதவிகளை வழங்க உறுதி அளித்திருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் எடியூரப்பா சற்று ஆசுவாசம் அடைந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.