Aran Sei

12 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறிய முதியவர்மீது பீகார் சுகாதாரத்துறை புகார்- வழக்கு பதிந்த காவல்துறை

டந்த 11 மாதங்களில் 12 முறை கொரோனா கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டதாக 84 வயதான பிரம்மதேவ் மண்டல் என்ற பீகார் முதியவர் கூறியது சர்ச்சையானதைத் தொடர்ந்து, விமர்சனத்துக்கு உள்ளான பீகார் மாதேபுரா மாவட்டத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் அம்முதியவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

“பிரம்மதேவ் மண்டல் சுகாதார அதிகாரிகளிடம் பொய்யான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு தேதிகளில் 12 தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டுள்ளார். இது கொரோனா தடுப்பூசி விதிமுறைகளை மீறிய செயல் எனக்கூறி இவ்விவகாரத்தை விசாரித்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டும்” என்று அந்த புகாரில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 முறை கொரோனா கோவாக்சின் தடுப்பூசி போட்ட பீகார் முதியவர் – அலட்சியமாகச் செயல்பட்ட சுகாதாரத் துறை

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக வெவ்வேறு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக மண்டல் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி, அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்), பிரிவு 419 மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

84 வயதான பிரம்மாதேவ் மண்டல் சமீபத்தில் இரண்டு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு சுகாதார மையங்கள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் 12 தடுப்பூசிகளை எடுத்ததாகவும், அதில் ஆதார் அட்டையை பயன்படுத்தி 9 தடுப்பூசிகளும் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி 3 தடுப்பூசிகளும் போட்டதாக கூறியுள்ளார்.

“ஜனவரி 7 ஆம் தேதி மாலை சில சுகாதார அதிகாரிகள் எனது வீட்டிற்கு வந்தனர். நான் 12 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டது பற்றிக் கூறியதால் எனக்குத் தடுப்பூசி போட்டவர்களுக்கு வேலை பறிபோகும் என்று கூறினார்கள். எனவே எனக்குத் தடுப்பூசி போட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அந்த 12 தடுப்பூசிகளையும் தானாக முன்வந்துதான் நான் போட்டுக்கொண்டேன் என்று எழுதி என்னை கையெழுத்து போட சொன்னார்கள். இதனால் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் இன்று என் மீது மோசடி செய்ததாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். இது தவறானது” என்று மண்டல் தி வயர் செய்தி பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.

“பிரம்மதேவ் மாண்டல் இதுவரை ஐந்து தடுப்பூசி சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். அனைத்திலும், ஒரே பெயர் மற்றும் ஒரே ஆதார் அட்டை உள்ளது. மாண்டலின் பெயர் ஏற்கனவே கோ-வின் (Co-WIN) போர்ட்டலில் இருந்திருந்தால், சுகாதார அதிகாரிகள் அவருக்கு எப்படித் தொடர்ந்து தடுப்பூசி போட்டார்கள்?” என்று தி வயர் கேள்வி எழுப்பியுள்ளது.

“மண்டலுக்கு தடுப்பூசிகள் பற்றி எந்த அறிவும் இல்லாததால்தான் இவ்வளவு தடுப்பூசிகளைப் போட்டுள்ளார். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் என்ன செய்தார்கள்? ஒரே அடையாள அட்டையில் தடுப்பூசி போட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிரம்மதேவ் மண்டல் மீதான முதல் தகவல் அறிக்கை என்பது சுகாதாரத் துறை ஊழியர்களைக் காப்பாற்ற முயல்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” என்று உள்ளூர் அரசியல் கட்சித் தலைவர் குணால் கூறியுள்ளார்.

Source : The Wire

12 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறிய முதியவர்மீது பீகார் சுகாதாரத்துறை புகார்- வழக்கு பதிந்த காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்