பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
“பீமா கோரேகான் நிகழ்வு உட்பட, இந்தியாவில் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கவலையளிக்கிறது” என்று அந்த அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிர நரம்பியல் பிரச்சனையால் அவதிப்படும் 80 வயதான கவிஞர் மற்றும் எழுத்தாளர் வரவர ராவ் மற்றும் நடுக்கவாத பிரச்சனையால் அவதிப்படும் 83 வயதான செயல்பாட்டாளர் ஸ்டேன் சாமியும் பீமா கோரேகான் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய பெயரைக் குறிப்பிடாமல் “சிறையில் உள்ள சிலர் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள்” என்று மனித உரிமை அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
‘கவிஞர்களால் சிறையை நிரப்பாதீர்கள்’ – வரவர ராவ் விடுதலைக்கு இஸ்ரேலிய கவிஞர்களின் குரல்
“கொரோனா பெருந்தொற்று காலத்தில், சிறையில் நெரிசலை தவிர்க்க வேண்டும் என்ற (ஐ.நா மனிதஉரிமை) ஆணையரின் வேண்டுகோளின்படி, அவர்கள் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்திலும், குறைந்தபட்சம் அவர்களை பிணையிலாவது விட வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்” என்று, மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேஷ்வா இரண்டாம் பாஜி ராவின் படைகளை, பெரும்பாலும் மகர்களை (தாழ்த்தப்பட்டோர்) கொண்ட ஆங்கிலேயர் படை, பீமா கோரேகான் என்ற இடத்தில் வெற்றி கொண்டது. இந்த வெற்றியின் 200வது ஆண்டு விழா, 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பீமா கோரேகானில் கொண்டாடப்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், சோமா சென், சுதா பரத்வாஜ், சுதிர் தாவாலே, ரோனா வில்சன், மகேஷ் ரவுத், வெர்னான் கொன்சால்வேஸ், அருண் ஃபெரேரா, ஆனந்த டெல்தும்பே, கவுதம் நவ்லாகா ஆகிய எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முககை விசாரித்து வருகிறது.
83 வயதான ஸ்டேன் சாமி கலவரத்திற்கு காரணம் – ஜாமீன் வழங்க என்ஐஏ எதிர்ப்பு
கடந்த ஆண்டு, ஐ.நா மனித உரிமை அலுவலம், செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாகவும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்துவது தொடர்பாகவும் தனது கவலையை தெரிவித்திருந்தது.
அதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை, “சட்டத்தை உருவாக்குவது இறையாண்மை உரிமை. சட்ட மீறலை, மனித உரிமை என்ற பார்வையில் ஆதரிக்க முடியாது” என்று கூறியதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
—
அன்றாடம், சமூகத்தில் நிகழும் அனைத்துபிரச்சனைகளுக்கும் பின்னாள் உள்ள அரசியலை முழுமையாக புரிந்துகொள்ள, அரண்செய் யூடியூப் சேனலை பின் தொடருங்கள் என அன்போடு அழைக்கிறோம்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.