“அவர்கள் ‘ஹர ஹர மகாதேவ்’ என்று முழக்கமிட்டார்கள். நான் (பாபா குலாம் முகமது ஜௌலா) அந்த முழக்கத்தில் ‘அல்லாஹு அக்பர்’ என்று சேர்த்தேன். இரண்டும் சேர்ந்து பாரதிய கிசான் யூனியனின் மிக சக்திவாய்ந்த முழக்கமாக மாறியது” மேற்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளின் புகழ்பெற்ற தலைவர் பாபா குலாம் முகமது ஜௌலாவை நினைவுபடுத்தும் போது, ஒருவர் மனதில் உள்ளுணர்வாக தோன்றும் முதல் நினைவு இதுவாகும்.
பாபா குலாம் முகமது ஜௌலா மே 16, 2022 அன்று காலமானார். இவர், பாரதீய கிசான் யூனியனில் (BKU) மறைந்த மகேந்திர சிங் டிகாயித்தின் வலது கையாகக் கருதப்பட்டார்.பாபா குலாம் முகமது ஜௌலா அவர்கள் மகேந்திர சிங் டிகாயித் மரணமடைந்த (மே 15 2011) ஒரு நாளுக்குப் பிறகு காலமானார். ஒருவேளை விதி வேறு எந்த வகையிலும் விளையாடியிருக்க முடியாது. இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.
மேற்கு உ.பி.யில் கரும்பு விவசாயிகள் வேலைநிறுத்தம் செய்தபோது இரண்டு பழம்பெரும் தலைவர்கள் அதிகாரிகளை எப்படி மண்டியிட வைத்தனர் என்பது குறித்து பல்வேறு வகையான கதைகள் உலவுகின்றன. சமூக ஊடகங்கள் இல்லாத ஒரு காலகட்டத்தில், முக்கிய ஊடகங்கள் மேற்கு உ.பி.யின் கரடுமுரடான நிலப்பரப்பை அரிதாகவே கடந்து சென்றன.
‘உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கையில் இருந்து இந்தியா வெளியேறுவதே தீர்வு’- பாரதிய கிசான் யூனியன்
இந்த கதைகளில் பெரும்பாலானவை வாய்வழியாக அனுப்பப்பட்டவை. அவை வரலாற்றின் மெருகூட்டப்படாத வைரங்களாகத் திகழ்கின்றன. டெல்லியில் 1989 ஆம் ஆண்டு போட் கிளப் அந்தோலன் (போராட்டம்) தேசிய அளவில் அறியப்பட்டாலும், இது போன்ற பல கதைகள் மேற்கு உ.பி.யின் அடர்ந்த கரும்பு வயல்களில் புதைந்துள்ளன.
ஒரு வேலைநிறுத்தத்தின் போது, முசாபர்நகர் மாவட்ட ஆட்சியர் பாபா குலாம் முகமது ஜௌலாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உடன்படிக்கை செய்து கொள்ளச் சென்ற கதை அத்தகைய ஒரு கதையாகும். மாவட்ட ஆட்சியர் அவரது கிராமமான ஜௌலாவை அடைந்ததும், பாபா அவருக்காகக் காத்திருந்த வயல்களுக்கு ஆட்சியர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பாபா வேலை செய்வதைக் காண ஆட்சியர் கோடை வெயிலில் கரும்பு வயல்கள் வழியாகச் சென்றார். “உட்காருங்கள்” என்று ஆட்சியருக்கு பாபா தரையைச் சுட்டிக் காட்டினார். வழக்கம் போல், வரவேற்க அங்கு நாற்காலிகள் இல்லை. “இந்த வெயிலில் தரையில் உட்கார்ந்து, விவசாயிகளின் தலைவிதியை நீங்கள் முடிவு செய்வதற்கு முன், விவசாயிகள் அனுபவிக்கும் சிரமங்களை நீங்களும் அனுபவித்துப் பாருங்கள்.” என்று அவர் கூறி விட்டார்.
உண்மையோ அல்லது மிகைப்படுத்தப்பட்டோ, ஒவ்வொரு கதையும் இப்பகுதியில் கரும்பு விவசாயிகளின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதைப் பற்றிப் பேசுகிறது.
பாரதிய கிசான் சங்கத்தில் பிளவு ஏற்பட பாஜகதான் காரணம் – ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டு
மேற்கு உ.பி.யின் கரும்பு மாவட்டங்களில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக உள்ளனர். இரு மதங்களின் ஆதிக்கச் சாதிகளில் பலர் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களாக உள்ளனர். பாபாக்கள், டிகாயித் மற்றும் ஜௌலா ஆகிய இருவருமே, இப்பகுதியில் எந்தவொரு வெற்றிகரமான விவசாயிகளின் இயக்கத்திற்கும், இரு முக்கிய மதங்களின் ஒற்றுமை இன்றியமையாதது என்பதை அறிந்திருந்தனர்.
‘ஹர ஹர மகாதேவ், அல்லாஹு அக்பர்’ என்ற பழம்பெரும் முழக்கம் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைந்ததாக முழக்கமாக மாறியது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங்களில் பாரதிய கிசான் யூனியனின் ஒரு நிகழ்வு மத ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்று ஐயமுற்றால் உடனடியாகச் செயலில் இறங்கியது. இப்பகுதியில் ஒரு இஸ்லாமியச் சிறுமி கடத்தப்பட்டபோது பாபா டிகாயிட் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வு குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் உள்ளூரில் பிரபலமாக ‘நைமா காந்த்’ என்று அழைக்கப்படுகிறது. உண்ணாவிரதப் போராட்டம் காவல்துறையினரை வேகப்படுத்தி, விரைவில் சிறுமி மீட்கப்பட வழி வகுத்தது.
‘விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாஜகவை உ.பி தேர்தலில் தேற்கடியுங்கள்’ – சம்யுக்த் கிசான் மோர்ச்சா
இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு முசாபர்நகர் மற்றும் ஷாம்லியில் நடந்த கலவரங்களுக்குப் பிறகு குலாம் சாஹப் தலைமறைவானது ஆச்சரியமல்ல. கலவரம் மேற்கு உ.பி.யின் மத ஒற்றுமை இழையை அறுத்தெறிந்தது. அத்துடன் இந்து மற்றும் இஸ்லாமிய விவசாயிகள் பரம எதிரிகளாக மாறினர்.
2013 செப்டம்பரில் நடந்த மகா பஞ்சாயத்துக்காக பாரதிய கிசான் யூனியனின் மேடை பயன்படுத்தப்பட்டது என்பது பலருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இது வன்முறைக்கு வழிவகுத்தது. அந்த இழிவான மகாபஞ்சாயத்தில், பாரதிய கிசான் யூனியன் மேடையை பாஜக தலைவர்கள் நயவஞ்சகமாக அபகரித்தனர். அதனைத் தொடர்ந்து மேற்கு உ.பி.யில் வன்முறை வெடித்தது.
“ஹர ஹர மகாதேவுக்கு அல்லாஹு அக்பர்’ என்ற முழக்கத்தை நான் தொழிற்சங்கத்திற்கு வழங்கினேன். இப்போது எஞ்சியிருப்பது ‘ஹர ஹர மகாதேவ்’ மட்டுமே. உண்மையில், அதுவும் இல்லை, ‘ஹர ஹர மோடி’ மட்டுமே எஞ்சியுள்ளது. தொழிற்சங்கத்தில் எங்களுக்கு என்ன பங்கு உள்ளது? ” என்று கலவரத்திற்குப் பிறகு ‘முசாபர்நகர் பாக்கி ஹை… (எஞ்சிய முசாபர்நகர் …)’ படத்திற்காக நகுல் சிங் சாவ்னி அவரை நேர்காணல் செய்யும் போது குலாம் சாஹப் அவரிடம் கூறினார்.
2013 கலவரத்திற்குப் பிறகு நினைத்துப் பார்க்க முடியாதது நடந்தது. பாரதிய கிசான் யூனியன் மத அடிப்படையில் பிளவுபட்டது. பாபா குலாம் முகமது ஜௌலா, பாரதிய கிசான் மஸ்தூர் மஞ்ச் (BKMM) என்ற தனது சொந்த தொழிற்சங்கத்தைத் தொடங்கினார். “ இது 35 சமூகங்களுக்கான தொழிற்சங்கம். ஜாட்களைத் தவிர” என்றார். பிரிந்ததில் அவர் மகிழ்ச்சியாக இருந்தாரா? “இல்லை,” என்று அவர் நேர்மையாக பதிலளித்தார், “ஆனால் அவர்கள் அதைத்தவிர எங்களுக்கு வேறு வழியின்றி விட்டுவிட்டனர்.”
இருப்பினும், பாபாவை ஒருபோதும் காட்டிக் கொடுக்காதது அவருடைய நம்பிக்கைதான். “ஜாட்கள் அடிப்படையில் மதச்சார்பற்ற சமூகம். எங்களிடம் மசூதிகள் இல்லாத பல கிராமங்களில், ஜாட் இனத்தவர்களே பணம் திரட்டி எங்கள் மசூதிகளை கட்டினார்கள். Fiza phir badlegi (நிலைமைகள் மீண்டும் மாறும்). அதற்கு நான்கு அல்லது ஐந்து வருடங்கள் ஆகும். ஜாட்களும் தங்கள் தவறை உணர்ந்துள்ளனர். அவர்களும் திரும்பி வர விரும்புகிறார்கள். அதற்கு சில ஆண்டுகள் ஆகும்.” என்றார் அவர்.
இது வெறும் காற்றில் ஒலித்த அசரீரி அல்ல. பாபா குலாம் முகமது ஜௌலா தன்னை உருவாக்கிய நிலத்தைப் பற்றிய புரிதல் இதுதான். அவர் எப்பொழுதும் தனது காதுகளை தரையில் வைத்திருக்கிறார் என்பதன் அடையாளமாக அது இருந்தது. அவரது கரம் எப்போதும் மக்களின் நாடித்துடிப்பில் இருந்தது. அவர் தனது மக்களை அறிந்திருந்தார். ‘அவரது மக்கள்’ இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, அப்பகுதியின் அனைத்து விவசாயிகளும்தான்.
‘அதிகாரத்தின் தாக்குதலே எங்களை பலப்படுத்தும்’ – விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத்
நிச்சயமாக, பாபா சரியானவர் என்பதை நிரூபித்தார். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மேற்கு உ.பி.யின் இந்து மற்றும் இஸ்லாமிய விவசாயிகள் ஒன்றிணைந்த பல சிறிய பஞ்சாயத்துக்கள் இருந்தன.ஆனால் ஒற்றுமையின் மிக முக்கியமான தருணம் ஜனவரி 2021 இன் பிற்பகுதியில், டெல்லியின் எல்லையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் போது இருந்தது.
ஜனவரி 29, 2021 அன்று, முசாபர்நகரில் ஒரு வரலாற்று மகாபஞ்சாயத்து நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பஞ்சாயத்தில் முக்கிய பேச்சாளர்களில் குலாம் முகமது ஜௌலாவும் இருந்தார். அவர் எதனையும் மறைக்க விரும்பவில்லை. “நீங்கள் இதுவரை செய்த பெரிய தவறுகள் இரண்டு. ஒன்று, நீங்கள் அஜித் சிங்கைத் தோற்கடித்தது. இரண்டு, இஸ்லாமியர்களைக் கொன்றது,” என்று அவர் கூறினார்.
வியப்பிற்குரிய வகையில் அங்கு எந்த கூச்சலும் இல்லை, அவரை மறுத்துப் பேச எந்த முயற்சியும் நடக்கவில்லை. கடல் போன்ற அமைதி நிலவியது. அதில் ஒரு உள்தேடல் இருந்தது. ஒற்றுமை என்பது ஒரு சமரசமாக இருக்க முடியாது என்று பாபா தெளிவாக வலியுறுத்தினார். குற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் இஸ்லாமியச் சகோதரர்கள் நடத்தப்பட்ட விதத்தில் நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அன்று மேடையிலிருந்த பல இந்து ஜாட் தலைவர்கள் பின்னர் இந்தக் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.
” போராடுவது அடிப்படை உரிமை, கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாது” – உச்சநீதிமன்றம்
செப்டம்பர் 5, 2021 அன்று நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிசான் மகாபஞ்சாயத்தில், அதாவது கலவரத்திற்கு வழிவகுத்த மகாபஞ்சாயத் தொடங்கி சரியாக எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பாபாவின் உடல் நலம் குன்றிக் காணப்பட்டது. மேலும் அவர் பேச முடியாத அளவுக்கு பலவீனமாக இருப்பதாக ராகேஷ் டிகாயிட்டிடம் கூறினார். ஆனால் அந்த பிரபலமான முழக்கம் மீண்டும் ஒருமுறை உச்சரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ராகேஷிடம் கேட்டுக் கொண்டார். ராகேஷ் ஏமாற்றவில்லை, ‘அல்லாஹு அக்பர், ஹர ஹர மகாதேவ்’ முழக்கம் முசாபர்நகர் முழுவதும் எதிரொலித்தது.
அடுத்து வந்த உ.பி. தேர்தலில் பாஜக வசதியாக வெற்றி பெற்றிருக்கலாம் என்றாலும், விவசாயிகள் இயக்கத்தால் (மற்றும் கலவரங்களால்) மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயப் பகுதியில் பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்தது.
அவரது உடல்நிலை சரியில்லாததால், ஜௌலா சாஹாபின் பொது வெளியில் தோன்றுவது குறையத் தொடங்கியது. ஆனால் அவரது இருப்பு ஒவ்வொரு கிசான் பஞ்சாயத்திலும் உணரப்பட்டது. இந்து-இஸ்லாமியர் ஒற்றுமை பற்றிய அவரது கனவு மேற்கு உ.பி.யில் ஓரளவு மட்டுமே நனவாகியிருக்கலாம். ஆனால் அவரது தொலைநோக்கும், உள்ளுணர்வும் எப்போதும் ஊக்கமளிக்கும்.
www.thewire.in இணையதளத்தில் திரைப்பட தயாரிப்பாளர் நகுல் சிங் சாவ்னி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
போதை மாத்திரை விக்கிறவன் கைய Police உடைக்குமா? Tada Rahim Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.