Aran Sei

பர்கூர் வன காப்பகம் அமைக்கும் முன் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – பழங்குடிகள் போராட்டம்

ரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கு முன் மலைவாழ் மக்களின் பாரம்பரிய வன உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் இக்கோரிக்கை வலியுறுத்தி பிப்பிரவரி 10ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் பர்கூர் மலைப்பகுதி பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அன்புடையீர் வணக்கம், பர்கூர் வனப்பகுதி புலிகள் காப்பகமாக விரைவில் அறிவிக்கப்படும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. ஏற்கனவே புலிகள் காப்பாக அறிவிக்கப்பட்டுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி மக்கள் இதனால் பெருந்துயர்களுக்கு ஆளாகியுள்ளனர். புலிகள் காப்பக பகுதிக்குள மக்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

வனதெய்வங்களை வழிபடக்கூட கடுமையான கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்படுகின்றன. காட்டுக்குள் உள்ள நீர்நிலைகளை பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. நமக்கு வாழ்வாதாரமாக உள்ள கால்நடை மேய்ச்சலுக்கு கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்படுகிறது.

`சிவனுக்கு ஒரு நீதி, அம்மனுக்கு ஒரு நீதியா?’ – பழங்குடி மக்கள் கேள்வி

வனத்தில் விளையும் சிறுவன மகசூலை சேகரிப்பபது தடுக்கப்படுகிறது. வீடுகளை கட்ட நாம் பயன்படுத்தி வந்த மண், கற்கள், மணல் கூட எடுப்பது தடுக்கப்படுகிறது.

வழக்கமாக நாம் பயன்படுத்திவரும் வனச்சாலைகள் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்படுகிறது, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவையெல்லாம் நமது பாரம்பரிய உரிமைகள்.

இவ்வுரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச்சட்டம் அமலாகாமல் தடுக்கப்படுகிறது. புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியில் வாழும் மக்கள் வெளியேற்றப்படும் அபாயமும் உள்ளது. (உதாரணமாக : பவானி சாகர் அருகில் உள்ள தெங்குமரஹாடா)

இந்த அபாயத்திலிருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்வது எப்படி?

2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன உரிமைச்சட்டம், வனப்பகுதியில் வாழும் மக்களின் பாரம்பரிய வன உரிமைகளை அங்கீகரிக்கிறது. இந்தச்சட்டம் நடைமுறைப்படுத்துவதன் மூலம் நமது பாரம்பரிய வன உரிமைகளை பாதுக்காக்க முடியும்.

நீலகிரி பழங்குடிகளிடையே அதிகரித்து வரும் தற்கொலைகள் – இடப்பெயர்வு காரணமா?

ஒருவனப்பகுதி புலிகள் காப்பமாக எந்த முறையில் அறிவிக்கப்பட வேண்டும் என 2006ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம் வழிகாட்டியுள்ளது. அச்சட்டத்திருத்தத்தின்படி ஒரு பகுதி புலிகள் காப்பமாக அறிவிக்கப்படு முன் அப்பகுதி மக்களின் ஒப்புதலை பெறவேண்டும். அவர்களது வன உரிமைகளை உறுதிசெய்யவேண்டும். ஆனால் இதுவரை பர்கூர் வனப்பகுதியில் அத்தகைய நடவடிக்கைகள் ஏதும் இல்லை.

சட்டம் சொல்லியுள்ள வழிமுறைகளை பின்பற்றாமல் புலிகள் காப்பகமென அறிவிக்கப்படுமானால் நாம் பெரும் நெருக்கடிக்கு ஆளாவோம் என்பது தான் சத்தியமங்கலம் வனப்பகுதி அனுபவம். ஆகவே, பர்கூர் வனப்பகுதி மக்கள் மிகவும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ளது. பர்கூர் வனப்பகுதி, புலிகள் காப்பமாக அறிவிக்கப்படும் முன் மக்களின் பாரம்பரிய உரிமைகள் சட்டப்படி அங்கீகரிப்பப்பட்ட வேண்டும்.

அதைசெய்யாமல் சட்டவிரோதமாக புலிகள் காப்பமாக அறிவிக்கக்கூடாது என நாம் அனைவரும் சேர்ந்து அரசை வலியுறுத்த வேண்டிள்ளது.

ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள்

தாமரைக்கரையில் அணி திரள்வோம்…! அரசின் கவனத்தை ஈர்ப்போம்..! சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பிசில் மாரியம்மனையே டிரக்கில் கட்டி இழுத்து அகற்றும் வனத்துறை…! கடவுளுக்கே இந்த கதியென்றால் நமது கதி என்ன?

இவ்வாறு பர்கூர் மலைப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பர்கூர் வன காப்பகம் அமைக்கும் முன் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – பழங்குடிகள் போராட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்