Aran Sei

ஆக்ராவில் காதலர் தினம்: பொதுவிடத்தில் இருந்த ஆண்களையும் பெண்களையும் மிரட்டிய பஜ்ரங் தள் – காவல்துறை வழக்குப்பதிவு

காதலர் தினத்தன்று பொது இடங்களில் ஜோடிகளை துன்புறுத்தியதாக பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்த சிலர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள ஆக்ரா காவல்துறைத் துணைத்தலைவர் சுதிர் குமார் சிங், பஜ்ரங் தள உறுப்பினர்கள் இளம் பெண்கள், இளம் ஆண்கள், சிறுவர் சிறுமிகளை துன்புறுத்தியது தெரியவந்ததை அடுத்து, அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

“ஹரிபர்வத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலிவால் பூங்காவில் சில சிறுவர்களும் சிறுமிகளும் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் அங்கு வந்த சில பஜ்ரங் தள உறுப்பினர்கள் தவறாக நடந்திருக்கிறார்கள். இது தொடர்பாக, காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தக்கூடாது – வி.எச்.பி, பஜ்ரங் தள் மிரட்டல்

நேற்று(பிப்பிரவரி 14), பெண்கள் உட்பட பஜ்ரங் தள உறுப்பினர்கள் பாலிவால் பூங்காவிற்கு சென்று, காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆண்கள் மற்றும் பெண்களைச் சூழ்ந்துக்கொண்டு, அச்சுறுத்தியுள்ளனர். இச்சம்பவத்தை காட்டும் காணொளியானது, சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

அக்காணொளியில், காவித்துண்டு அணிந்த பஜ்ரங் தள பெண் உறுப்பினர் ஒருவர் பள்ளிச் சீருடையில் இருந்த ஒரு பெண்ணைப் பிடித்து, அவரது அடையாள அட்டையை ஆராய்ந்து, அவரது பெற்றோரை அழைக்க உத்தரவிடுகிறார்.

“இந்தியாவில் மேற்கத்திய பண்பாடு தழைத்தோங்கி வருகிறது. ஆனால், இதை வளர விட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நேற்று நாங்கள் வேலண்டைனின் உருவபொம்மையை எரிக்க தொங்கவிட்டோம்” என்று பஜ்ரங் தள அமைப்பின் பொறுப்பாளர் அவதார் சிங் கூறியுள்ளார்.

‘இந்து கடவுள்களை தவறாக சித்தரிக்கும் காம சாஸ்திரம்’ – நூலை எரித்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் போராட்டம்

நேற்று முன்தினம்(பிப்பிரவரி 13), ஆக்ராவில், புனிதர்.வேலண்டைனின் உருவபொம்மையை பஜ்ரங் தள உறுப்பினர்கள் தொங்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் இந்துத்துவாவை காப்பாற்றுவதற்காக, காதலர் தினத்தன்று மட்டும் அல்லாமல், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற ஜோடிகளை பொது இடங்களில் பார்க்கும் போதும், அவர்களைப் பிடித்து கேள்வி கேட்க வேண்டும்” என்று அவதார் சிங் வலியுறுத்தியுள்ளார்.

காதலின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ள தாஜ்மஹால், இதே ஆக்ரா நகரில்தான் அமைந்துள்ளது.

Source: PTI

ஆக்ராவில் காதலர் தினம்: பொதுவிடத்தில் இருந்த ஆண்களையும் பெண்களையும் மிரட்டிய பஜ்ரங் தள் – காவல்துறை வழக்குப்பதிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்