பீகாரில் அனைத்து இந்திய மஜ்லிசே இத்திகாதுல் முஸ்லிமீன் கட்சி ஏற்படுத்திய தாக்கத்தைப் போல அசாமில் உள்ள அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சி பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ எனும் பீதியில் அரசியல் கட்சிகள் உள்ளன என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
“அசாமில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியின் பி டீமாக ஏஐயுடிஎஃப் செயல்படுவதாக அசாம் மாநிலத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் (தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள்) குற்றம்சாட்டியுள்ளன என தி இந்து கூறியுள்ளது.
அசாம் மாநிலம் பூர்வகுடிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து குடியேறிவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ள மாநிலமாகத் திகழ்கிறது. இதில் புலம்பெயர்ந்து வந்துள்ள இஸ்லாமியர்களின் ஆதரவு பெற்ற கட்சியாக ஏஐயுடிஎஃப் விளங்கி வருகிறது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்கான ஒரு மகா கூட்டணிக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியைத் தீர்மானிக்கும் இடத்தில் ஏஐயுடிஎஃப் இருப்பதாக தி இந்து தெரிவித்துள்ளது.
மேலும், இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சில மாநிலக் கட்சிகள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறுகிறது.
2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, போடோலாந்து மக்கள் முன்னணி, அசாம் கன பரிசத் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன.
இரண்டு பெரிய மாணவர் அமைப்புகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள கட்சியான அசாம் ஜத்திய பரிஷத் “காங்கிரஸ், பாஜக என அசாம் மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் அதனுடைய பி டீமாக ஏஐயுடிஎஃப் செயல்படுகிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளது.
”பத்ருத்தின் அஜ்மல் மக்களைப் பிரிக்கும் அரசியலைச் செய்கிறார். தனது வணிக நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர் அரசியல் அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு உதவுகிறார்” எனப் பல அரசு சாரா அமைப்புகளின் கூட்டணியில் உருவாகியுள்ள ராய்ஜர் தளம் கட்சியின் தலைவர் பாஸ்கோ டி சாய்கியா தெரிவித்துள்ளார்.
`மோடியை எதிர்க்கும் ஆண்மையைக் காங்கிரஸ் இழந்துவிட்டது’ – அசாதுதின் ஓவைசி
இஸ்லாமியர்கள் வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அசாமில் உள்ள 126 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் 45 தொகுதிகளில் ஒரு சக்திவாய்ந்த தேர்தல் சக்தியாக விளங்க முடியும் என்பதே காங்கிரஸ் மற்றும் ஏஐயுடிஎஃப் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்க முயன்று வருவதற்கு முதன்மைக் காரணம் என ராய்ஜர் தளம் கட்சி தெரிவித்துள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, அசாம் கன பரிஷத், ராய்ஜர் தளம் மற்றும் அஞ்சலிக் கானா மோர்ச்சா போன்றவர்கள் மகா கூட்டணியில் சேருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தேர்தல்கள் நெருங்கி வருகின்றன. ஆனால் மகா கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ” என்று சிபிஐ (எம்) தலைவர் சுப்ரகாஷ் தாலுக்தார் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.