இந்தியாவின் 72 வது குடியரசு தினத்தில், அயோத்தியில் புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின், அயோத்தி நகரத்தில், 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதன்பிறகு, 28 ஆண்டுகள் கழித்து பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவிலைக்கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதற்கு மாற்றாக, உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு “முக்கிய” இடத்தில் புதிய மசூதியைக் கட்ட சன்னி வக்ஃப் வாரியத்திற்கு, ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாபர் மசூதி இடிப்பு – ‘வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டுள்ளது’ – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்
அந்த உத்தரவின் படி மத்திய அரசு, அயோத்தியின் சோஹவல் தெஹ்ஸில் உள்ள, தனிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை மாநில அரசுக்கு ஒதுக்கியது. புதிய மசூதியைக் கட்டுவதற்காக, சன்னி வக்ஃப் வாரியத்தால் இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம், மத்திய அரசு ஒதுக்கிய ஐந்து ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் புதிய மசூதியின் அடிக்கல் நாட்டு விழா குடியரசு தினத்தன்று நடைபெறும் என இந்தோ – இஸ்லாமிய கலச்சார அறக்கட்டளை தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக இந்த அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் ”அயோத்தி மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக, 2021 ஜனவரி 26-ம் தேதியை அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததால், இந்த நாளை அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. நம் அரசியலமைப்பு பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது, இதுவே நம் மசூதி கட்டுமான திட்டத்தின் முக்கிய அம்சமாகும்” என்று கூறியிருந்தார்ர்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தப்படி, நேற்று (26.01.21), இந்தோ- இஸ்லாமிய கலச்சார அறக்கட்டளையின் தலைவர் ஜாபர் அகமது பரூக்கி, தேசிய கொடியை ஏற்றி அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்துள்ளார். அந்த அறக்கட்டளையில் இருக்கும் 12 உறுப்பினர்களும் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சதித்திட்டம் – லிபர்ஹான் கமிஷன் கூறியது என்ன?
”இந்த இடத்தில் மண் பரிசோதனை பணிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். எனவே, மசூதி கட்டுமானத்திற்கான தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மண் பரிசோதனை அறிக்கைகள் வெளிவந்து, மசூதியின் வரைபடங்கள் அங்கீகரிக்கப்பட்டால், நாங்கள் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவோம். மசூதிக்கான நன்கொடைகளுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மக்கள் ஏற்கனவே பங்களிக்கத் தொடங்கியுள்ளனர்” என்று பரூக்கி தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மசூதியின் முதற்கட்ட கட்டுமானத்தில், மசூதியும் பல்நோக்கு மருத்துவமனையும், கட்டப்பட உள்ளன. மருத்துவமனையுடன் சேர்த்து ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு உணவளிக்கிற வகையில் சமுதாய உணவு கூடங்களும் கட்டப்பட உள்ளது.
“மருத்துவமனையின் தேவையை, உணர்ந்து கொள்வதற்காக இந்த மசூதியை சுற்றியுள்ள 25-30 கி.மீ பகுதிகளில், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், ஊட்டச்சத்து குறைபாடு ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனையை நாங்கள் சரி செய்ய முயல்வோம்” என்று அதார் உசேன் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில், ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.