கொரோனா நோய்த்தொற்றினால் நீண்டகாலமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால், கல்வியில் பல ஆண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளின் மனநலப் பிரச்சினைகள் ஆகியவை அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா போர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் கற்றல் திறனை அழித்துவிட்டதால், 2022ஆம் ஆண்டும் அவ்வாறு இருக்கக் கூடாது என்று ஹென்றிட்டா போர் கூறியுள்ளார்.
“உலகம் முழுவதும் ஓமிக்ரான் வேகமாகப் பரவி வரும் நிலையில், பரந்துபட்ட அளவில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுவது குழந்தைகளுக்கு படிப்பில் ஒரு பேரழிவை ஏற்படுத்தும். பள்ளிகள் என்பது குழந்தைகளின் கல்விக்கு மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பு, நட்பு வட்டம் மற்றும் அவர்களின் ஒரே சத்தான உணவிற்கும் ஆதாரமாக இருந்துள்ளது. ஆகவே இவையனைத்தையும் குழந்தைகள் இழந்துள்ளனர்” என்று ஹென்றிட்டா போர் தெரிவித்துள்ளார்.
“பள்ளிகள் தொடர்ந்து மூடப்படுவதால், ஒரு தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளின் கற்றல்திறன் முழுவதும் இழக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தும். ஆகவே, பள்ளிகளை பாதுகாப்பாகத் திறந்து வைப்பதற்கு எப்போதும் முன்னுரிமை தர வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
கடந்தாண்டு டிசம்பரில், இது குறித்து பேசியிருந்த ஹென்றிட்டா போர், “கொரோனா நோய்த்தொற்று பரவலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்படுவது முடிந்தவரைத் தவிர்க்கப்பட வேண்டும். கொரோனா நோய்த்தொற்று சமூகப் பரவலாக அதிகரித்து, கடுமையான பொதுச் சுகாதார நடவடிக்கைகள் அவசியமாகும்போது கூட கடைசியாக மூடப்பட வேண்டிய இடமாகவும், மீண்டும் முதலில் திறக்கப்பட வேண்டிய இடமாகவும் பள்ளிகள் இருக்க வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.