Aran Sei

சிதம்பரம் கோயிலில் பட்டியலின பெண்மீது தாக்குதல்: தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தர் ஒருவர் சாமி வழிபாடு செய்யச் சென்றபோது சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் தாக்கிய தீட்சிதர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளது,

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிப்பிரவரி 13 ஆம் தேதி அன்று தரிசனம் செய்ய சென்ற ஜெயசீலா என்ற பட்டியலினப் பெண்ணை அவரது சாதியின் பெயரைச் சொல்லித் திட்டியும், கேவலமாகப் பேசிய தீட்சிதர்கள் அவரை தாக்கியும் உள்ளனர். இது தீண்டாமை வன்கொடுமையாகும்.

சிதம்பரம் கோயிலுக்கு வழிபட வந்தவரை சாதிப்பெயர் சொல்லி திட்டிய தீட்சிதர்கள் – 20 பேர் மீது வன்கொடுமை வழக்கு

இதுசம்பந்தமாக சிதம்பரம் நகரக் காவல்நிலையத்தில் ஜெயசீலா புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்து 6 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

‘சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள்’ என்ற போதும், மாவட்ட காவல்துறையினர் இதனைக் கண்டும், காணாமலும் இருப்பதும், கைது செய்யாமல் இருப்பதும் நீதிமன்றத்துக்குச் சென்று அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கு உடந்தையாகச் செயல்படும் நடவடிக்கை போலவே உள்ளது. இது குற்றவாளிகள் அனைவரையும் தப்பிக்கச் செய்யும் சட்டவிரோதமான நடவடிக்கை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் தீட்சிதர்கள் பக்தர்களைத் தாக்குவது உள்ளிட்ட சமூகவிரோதச் செயல்களை எல்லாம் கோயிலை மையமாக பயன்படுத்தியே செய்கின்றனர். இவர்கள் மீது வரும் புகார்களை மாவட்ட காவல்துறையினர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பது இல்லை. இது குற்றவாளிகளுக்கு மேலும் கூடுதலாக ஊக்கப்படுத்தும் செயலாகவே அமைந்து விடுகிறது.

“தென்னாடுடைய சிவனும் நந்தனை எரித்த நெருப்பும்” – சூர்யா சேவியர்

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் பட்டியலின பெண்ணைத் தாக்கிய தீட்சிதர்கள் அனைவரையும் உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சிதம்பரம் கோயிலில் பட்டியலின பெண்மீது தாக்குதல்: தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்