அசாமின் நாகோன் மாவட்டத்தில், காவல் நிலையத்திற்கு தீவைத்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி, காவல்துறையிடம் இருந்து தப்பியோட முயன்றபோது, விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட ஆஷிகுல் இஸ்லாம் தப்ப முயன்றபோது, அவருடன் வந்த எஸ்கார்ட் வாகனம் மோதியதில் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
”இஸ்லாம் உடனடியாக நாகோன் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அதிகாரிகள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஒரு துணை ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்துள்ளனர்” என்று நாகோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லீனா டோலி தெரிவித்துள்ளார்.
மே 29 தேதி இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பிறகு, ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை மீட்க ஜூரியாவில் உள்ள அவரது வீட்டிற்கு காவல்துறை குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
படத்ரா காவல் நிலையத்திற்கு எரிப்பு சம்பவம் நடைபெற்ற மே 21, பதிவான காணொளியில் இஸ்லாம் அணிந்திருந்த சிகப்பு டி-ஷர்ட், மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு துப்பாக்கிகளை அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக டோலி கூறியுள்ளார்.
மீன் விற்பனையாளரான சஃபிகுல் இஸ்லாம், காவல்நிலையத்தில் மரணமடைந்ததால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் படத்ரா காவல்நிலையத்திற்கு தீ வைத்தனர்.
இது தொடர்பாக உயிரிழந்த சஃபிகுல் இஸ்லாமின் மனைவி உள்ளிட்ட ஐந்து பேர்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மீன் விற்பனையாளரான சஃபிகுல் இஸ்லாம் உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தததாக காவல்துறையினர் தெரிவிக்கும் நிலையில், அவரை விடுவிக்க ரூ. 10 ஆயிரம் மற்றும் ஒரு வாத்தைக் காவல்துறையினர் லஞ்சம் கேட்டதாக இஸ்லாமின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் படத்ரா காவல்நிலையத்திற்கு தீவைத்தனர். இது தொடர்பாக அஷிகுல் இஸ்லாம் உள்ளிட்ட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் லீனா டோலி கூறியுள்ளார்.
காவல்நிலையத்திற்கு தீவைக்கப்பட்ட அடுத்த நாள் (மே 22), காவல்நிலையத்தில் உயிரிழந்த சஃபிகுல் இஸ்லாம் மற்றும் தீவைப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று குற்றம்சட்டப்பட்டவர்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மாவட்ட நிர்வாகம் இடித்தது.
முழு சம்பவம் தொடர்பாக விசாரணையைக் கண்காணிக்க நாகோன் காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமின் மரணம்குறித்து கர்பி ஆங்லாங் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்த உள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் ஹிமாந்த பிஸ்வா சர்மா அரசு ஆட்சிக்கு வந்தது முதல், காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது மற்றும் காவல்துறையினரை தாக்க முயன்றது போன்ற நிகழ்வுகளில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 116 பேர் காயமடைந்துள்ளனர்.
Karthik Gopinath ஐ காட்டி கொடுத்ததே பாஜக தான் | Piyush Manush
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.