அசாம் மாநில தேர்தல் நடத்தை விதிகளை பாஜகவைச் சேர்ந்த தற்போதைய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீறியதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த அம்மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சியான அசோம் ஜாதிய பரிஷத் (ஏஜேபி) புகார் அளித்திருந்தது. கம்ரூப் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அசாம் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஏஜேபி கட்சியின் தலைவர் சஞ்சீவ் போராவிடமிருந்து பெறப்பட்ட 18/04/2022 தேதியிட்ட புகார் மனுவின் நகலை இங்கு அனுப்பியுள்ளேன். இந்த விவகாரம் குறித்து தயவுசெய்து விசாரித்து அறிக்கையை ஆணையத்திடம் அளிக்குமாறு கம்ரூப் (மெட்ரோ) மாஜிஸ்திரேட்டிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22ஆம் தேதி நடக்கவுள்ள கவுகாத்தி முனிசிபல் கவுன்சில் தேர்தலுக்கான பரப்புரையின் போது, பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிப்பெற வைத்தால், ஒவ்வொரு குடும்பங்களுக்கும் நிதியுதவியும் ஒவ்வொரு வார்ட்டுக்கும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடும் வழங்கப்படும். ‘ஒருநோடோய் திட்டத்தின்’ பயனாளிகளின் பட்டியலில் ஒவ்வொரு வார்டில் இருந்தும் 1,000 பேர் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்ததாக அசோம் ஜாதிய பரிஷத் (ஏஜேபி) புகாரளித்திருந்தது.
இது தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பானது என்று அப்புகாரில் குற்றஞ்சாட்டியிருந்தது.
Source: New Indian Express
இளையராஜா, அம்பேத்கர், யுவன், மோடி சர்ச்சை… விளக்கமளிக்கிறார் பேரா. சுந்தரவள்ளி
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.