மாநிலத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் சாலைகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்படும் என பாஜக தலைமையிலான அசாம் அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, புதிய சாலைக்கு சுவாமி முக்தானந்த சரஸ்வதி பெயரை சூட்டும் முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
நிலச்சல் மலை உச்சியில் உள்ள காமாக்யா கோவிலுக்கு செல்லும் புதிய மாற்று சாலைக்கு சுவாமி முக்தானந்த சரஸ்வதியின் பெயரை சூட்டவுள்ளதாக மாநில அரசு அறிவித்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சுவாமி முக்தானந்த சரஸ்வதிக்கும் அசாம் மாநிலத்திற்கும் எந்த எந்த தொடர்பும் இல்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
‘முகலாயர்’ சாலை பெயரை மாற்றி உ.பி., அரசு – ‘மகாராஜா அக்ரசென்’ சாலை என்று பெயர் மாற்றம்
அரசின் முடிவு திரும்பப் பெறப்படுவதாக மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் அசோக் சிங்கால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில், “பாண்டு காட் வழியாக காமாக்யா கோவில் வரையிலான மாற்று சாலைக்கு ‘சுவாமி முக்தானந்த சரஸ்வதி சாலை’ என்று பெயரிடப்படும் என அறிவிக்கப்பட்ட முடிவானது, பொதுமக்களின் ஆட்சேபனையின் காரணமாக உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துக்களை நாங்கள் மதிக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, தேசிய விருது பெற்ற திரைக் கலைஞரான உத்பால் போர்புஜாரி, மாநில அரசின் முடிவை வரவேற்றுள்ளதோடு, “இந்த பெயர் பரிந்துரையை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Very good decision. Thank you @TheAshokSinghal.
It will be interesting to know whose idea was it to bestow the said name, and why.
— উৎপল বৰপূজাৰী Utpal Borpujari (@UtpalBorpujari) February 18, 2022
இந்திய லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்டிபி) தலைவர் ப்ரொடியூட் போரா, மாநில அரசாங்கம் ஏன் அந்த குறிப்பிட்ட பெயரைத் தேர்ந்தெடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஒரு ஆர்வத்தில், சுவாமி முக்தானந்த சரஸ்வதி யார்? என நான் கூகுளில் தேடினேன். பல சுவாமி முக்தானந்தாக்கள் இருக்கிறார்கள். (சாமியார்கள் மத்தியில் இது பொதுவான பெயர்). ஆனால், நீங்கள் குறிப்பிடும் சுவாமி முக்தானந்த சரஸ்வதி யார்? இதை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தின் பண்பாடு மற்றும் நாகரிகத்தைப் பிரதிபலிக்காத ‘இடங்களின் பெயர்களை’ மாற்றுவதற்கான பரிந்துரைகளைப் பெற்று பரீசிலிக்க ஒரு இணைய முகப்பு (வெப் போர்ட்டல்) விரைவில் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பிப்ரவரி 16 அன்று தெரிவித்திருந்தார்.
மாநிலத்தில் சரியான சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதைவிடுத்து பெயர்களை மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ட்விட்டர் பயனர்கள் விமர்சனங்களை வைத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம், ராஜீவ் காந்தி தேசியப் பூங்காவை ஒராங் தேசியப் பூங்கா என பெயர் மாற்றம் செய்ய அசாம் அமைச்சரவை முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.