பாஜக தலைமையிலான ஒன்றிய ஆட்சியில் தங்களது அரசியலை செயல்படுத்தும் நோக்கில், தாம் சொல்லும் பணிகளை மட்டும் செய்யும்படி, புலனாய்வு அமைப்புகளை பாஜக நிர்பந்திக்கிறது என்றும், அதன்பொருட்டு அவ்வமைப்புகள் மீதான நம்பகத்தன்மை சிதைந்து விட்டது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில், ரூ.1,437 கோடியில் கோமதி நதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறையும், சிபிஐயும் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன் தினம் (ஜூலை 6), இவ்வழக்கு தொடர்பாக, 16 அரசு ஊழியர்கள் உட்பட 189 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
ராஜஸ்தான், சத்தீஸ்கரை தொடர்ந்து, சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை ரத்துசெய்தது பஞ்சாப்
இந்நிலையில், இதுகுறித்து, அசோக் கெலாட் தனது டிவிட்டர் பக்கத்தில், “எந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, அரசியல் நெருக்கடி உருவாகிறதோ அங்கெல்லாம் சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் தயார் படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையிலேயே, தற்போது உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு சிபிஐ தனது சோதனை தொடங்கி இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
Whenever elections are round the corner in a state or when political crisis is created in a state, CBI, income tax and ED get active in that particular state. pic.twitter.com/JDaWFPOYZG
— Ashok Gehlot (@ashokgehlot51) July 6, 2021
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, இந்த புலனாய்வு அமைப்புகளை தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்தி வருகிறது என்றும் ராஜஸ்தான், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டன என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாபர் மசூதி தீர்ப்பு – ‘சிபிஐ பாஜக அரசின் கூண்டுக்கிளி’ : ஸ்டாலின்
மேலும், “ஒருகாலத்தில், இந்த புலனாய்வு அமைப்புகள் தங்களின் சார்பற்றதன்மையால் நம்பகத் தன்மையை பெற்றிருந்தன. ஆனால், பாஜக தலைமையிலான ஒன்றிய ஆட்சியில் தங்களது அரசியலை செயல்படுத்தும் நோக்கில், தாம் சொல்லும் பணிகளை மட்டும் செய்யும் படி அந்த அமைப்புகளை நிர்பந்திக்கிறது. அதன்பொருட்டு, அவ்வமைப்புகள் மீதான நம்பகத்தன்மை சிதைந்து விட்டது.” என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.
“இவையெல்லாம் அந்த அமைப்புகளில் பணிபுரியும் பெரும்பாலான அதிகாரிகளுக்கே நன்றாக தெரியும். ஆனால், வேறு வழியில்லாமல் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காலம் வரும் பொழுது, பாஜகவுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.