Aran Sei

திமுகவின் திராவிட மாடல்: உண்மையான விடியலா? மிகைப்படுத்தலா?

பெரியாரிய இயக்கங்களான திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் இயக்கம் எப்போதுமே திமுகவை சார்ந்துதான் பயணிக்கின்றன. அது புதிய விஷயம் இல்லை. ஆனால், இன்றைக்கு ஒருவரை ஒருவர் மிக நெருக்கமாக ஆதரித்துக்கொண்டும் பாராட்டிக்கொண்டும் ஒன்றையொன்று புதுப்பித்துக்கொண்டும் தங்களின் அரசியல் இருப்பை நிலைநாட்டிக்கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள்.

தேர்தல் அரசியலில் திமுக தனது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இந்த பெரியாரிய அமைப்புகளின் உதவி தேவைப்படுகிறது. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகும் தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்கும் இந்த அமைப்புகளின் உதவி, பலம் தேவைப்படுகிறது. இது இன்றைய முக்கிய கட்டமாக அந்த அமைப்புகளுக்கு உள்ளது.

இல்லாத குஜராத் மாடலை காட்டி எப்படி மோடியும், கேரளா மாடலை சிபிஎம் கட்சியும் எப்படி மிகைப்படுத்திக்காட்டினவோ அதேபோல தமிழ்நாட்டில் திராவிட மாடல் அண்மைக்காலமாக மிகைப்படுத்திக்காட்டப்படுகிறது.

திராவிட மாடல் மாயையா, உண்மையா?

திராவிட மாடலுக்காக திமுகவும் அதன் மாணவ அமைப்பும் திகவும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளையும் மாநாடுகளையும் நடத்தி வருகின்றன. அதே போல, தந்தை பெரியார் திராவிடர் கழகமும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. திராவிட மாடல் என்ற கருத்தாக்கத்தை பார்ப்பனிய மாடலுக்கு மாற்றாக காட்டுகிறார்கள். ஆனால், இந்த திராவிட மாடல் என்ற மாற்றானது அடிப்படையில் பரந்துபட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில்தான் ஆட்சிகளில் கொள்கைகளை கடந்த 50 ஆண்டுகளில் செயல்படுத்தி வருகின்றது. அதனால்தான் வீழ்த்த முடியாமல் உள்ளது.

ஓராண்டு திமுக ஆட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குறியீட்டு அரசியல்

இந்துத்துவ மாடலானது திராவிட மாடலை அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது. திராவிட மாடலும் அதை எதிர்கொள்வதற்கு தற்காப்பு தன்மையில் தான் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மத உணர்வைத் தூண்டி அரசியல் நடத்தும் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்காமல் பரந்துபட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் மக்களுடன் கூட்டு சேராமல், திராவிட மாடலானது எப்படி அதற்கு எதிராக உள்ள பார்ப்பனிய மாடலை வீழ்த்த முடியும்?

ஒரு அரசு மக்களுடன் பங்கிருந்தால் மட்டும் தான் எந்த ஒரு மாடலையும் உருவாக்க முடியும். எந்த ஒரு மாடலையும் வீழ்த்த முடியும். தமிழ்நாடு அரசியல் எந்திரமானது பார்ப்பனிய இந்துத்துவ மாடலின் ஊடுருவல் பிடியில் தான் உள்ளது. அதை கலையெடுத்தால் மட்டும் தான் குறைந்தபட்சம் திராவிட மாடல் இருப்பதையும் காப்பாற்ற முடியும். கல்வியையும் சுகாதாரத்தையும் தனியார் மயமாக்கும் சூழலில் இடஒதுக்கீடோ அனைவருக்குமான வளர்ச்சி என்பதோ திராவிட மாடல் ஆட்சியில் எப்படி சாத்தியமாகும்.

எனவே, தமிழ்நாட்டின் பரத்துபட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகளை மறப்பது தொடரும். நடப்பு திமுக ஆட்சியிலும் அது நீடிக்குமானால் அது சொல்லும் திராவிட மாடல் ஆட்சி என்பது சொல்லும் விஷயத்திற்கு எதிராகவே இருக்கும்.

ஆணவக் கொலைகளுக்கு சிறப்பு சட்டத்தை இன்னும் இயற்றாமல் ஆணவ கொலை நீடிப்பது இன்னும் தொடரும் நிலையானது போலி மோதல் படுகொலைகளையும் காவல் நிலைய மரணங்களையும் குறைக்காத திராவிட மாடல் ஆட்சியானது என்ன வகையான ஆட்சியாக இருக்க முடியும்?

அரங்க கூட்டங்களுக்கு கூட சட்ட விரோதமாக போலீசின் அனுமதியைப் பெற வேண்டிய ஒரு ஆட்சி தான் இன்னமும் நீடித்திருக்கும் நிலை இருக்கிறது. மொத்தத்தில் தொகுத்துப் பார்த்தால், பெயரளவிலான சில விஷயங்களைத் தவிர அடிப்படையில் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த நிலையில், திமுக ஆட்சியில்தான் பெரியாரிய அமைப்புகள், விமர்சனம் இன்றி திமுகவை ஆதரிக்கின்றன. போராட்டம் நடத்துவதே திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பதாகும் என்ற வகையில் தான் பெரியாரிய அமைப்புகள் கருதுகின்றன.

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ என்பது ஆர்.எஸ்.எஸின் கல்விக் கொள்கை’- கி.வீரமணி

இத்தகைய சூழலில் பெரியாரிய அமைப்புகள் தனது அரசியல் இருப்பே திமுகவின் அல்லது திராவிட மாடல் ஆட்சியில் ஆதரிப்பதில்தான் அடங்கியிருக்கிறது என்று மதிப்பிடுகின்றன.

 

திமுகவோடு முரண்படாத திராவிட அமைப்புகள்

திமுகவிற்கு முன்பே பெரியார் தோன்றிவிட்டாலும் திமுக உடன் முரண்பட்டு இருபது ஆண்டுகள் இருந்து வந்தார். இன்றைய பெரியாரிய அமைப்புகள் அதற்கு மாறாக திமுகவை பார்க்கின்றன. இப்படி, பார்ப்பனிய இந்துத்துவத்தை எதிர்ப்பதை முறியடிப்பதை முதன்மை கடமையாக பார்க்காமல், இந்துத்துவ ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு ஆட்சி அதிகாரத்தை மையப்படுத்தியே பெரியாரிய அமைப்புகள் செயல்பட்டு தம்முடைய அரசியல் இருப்பை நிலைநாட்ட எத்தனிக்கின்றன.

பாஜக குஜராத் மாடலை முன்வைத்து அரசியல் செய்கிறது என்றால் அதற்கு எதிராக திமுக திராவிட மாடலை முன்வைக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அண்மைக்காலமாக சட்டமன்றம் தொடங்கி தான் பங்கேற்கும் அனைத்து கூட்டங்களிலும் திராவிட மாடலை முதன்மையாக பேசுகிறார். ஆனால், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையிலேயே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, திமுக அரசு ஆன்மீக அரசாக திகழ்கிறது என்று பேசுகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தில் இது பெரியார் மண் என்று பேசும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு மூலமாக ஆன்மீக அரசு என்று பேசுவதே பாஜகவின் கருத்தியலுக்குள் திமுக நிற்க வேண்டிய நிலையில் தான் உள்ளது என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது.

ஜெயலலிதாவிற்கு பங்கு இல்லையா?

தமிழ்நாட்டை அண்ணா தலைமையில் 1967 மார்ச் 6ஆம் தேதி ஆட்சியை பிடித்த திராவிட கட்சி, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, ஸ்டாலின் வகை  தொடர்ச்சியாக ஆட்சி செய்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியையும் உள்ளடக்கியதா என்பதை திமுகவால் இதுவரை விளக்க முடியவில்லை. திமுகவை விட ஒப்பீட்டளவில் அதிமுததான் அதிக முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்தது.

தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி அதிமுகவால் நடக்கவில்லையா என்றும் அதை திமுக மட்டுமே நிலை நாட்டிவிட்டதா என்பதையும் இதுவரை உறுதியாக கூறாதது ஏன்? இதில், பெரியாரிய இயக்கங்களின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை விளக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தம் வாழ்நாள் முழுவது திமுக தலைவர் கருணாநிதி அதிமுக என்றே அழைத்தார். நீதிக்கு எதிர் அநீதியோ அது போலத்தான் திமுகவிற்கு எதிர் அதிமுக என்றார். அப்படி இருந்தால், அதிமுகவை உள்ளிடக்கியது தான் திராவிட ஆட்சியா  என்ற கேள்வியும் எழும். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அதிமுக ஆட்சியை திராவிட ஆட்சி என்று ஏற்றுக்கொண்டதை புறக்கணிக்க முடியாது.

‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின்’ – கி.வீரமணி

தமிழ்நாட்டில் ஆணவக்கொலைக்கு முடிவு இல்லை. அதிக அளவு தனியார் நிறுவனங்கள் வளர்ந்துவிட்ட தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை இதுவரை உறுதி செய்யவில்லை. கோயில்களின் கட்டுப்பாட்டை கையில் வைத்திருப்பதில் குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது தொடர்கிறது. பெரியார் மண்ணா – ஆன்மீக ஆட்சியா என்பதற்கு இறுதி வடிவம் கிடைக்கவில்லை. இப்படி பட்ட சூழலில் தான் திராவிட மாடல் பயணித்துக்கொண்டு இருக்கிறது.

கட்டுரையாளர்மூத்த பத்திரிகையாளர் ரீங்கன் சூசை முகமது

One Year Of DMK சாதனையா? சறுக்கலா? Ve Mathimaran Interview

திமுகவின் திராவிட மாடல்: உண்மையான விடியலா? மிகைப்படுத்தலா?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்