Aran Sei

பீகாரில் விசாயிகள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் – 2 மாதங்களாக அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, பீகார் மாநிலம், முசாபர்பூர் நகரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராடி வந்த விவசாயிகள்மீது ஆயுதத்துடன் வந்த இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், காயமடைந்த ஐந்து விவசாயிகள், சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14 ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கட்டிடம் திறக்கும் நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டதற்கு இரண்டு தினங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

“பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் இனி உரக்க பேசுவார்கள்” – பிரியா ரமணி

முசாபர்பூரில் இருக்கும் மாவட்ட நீதிபதி இல்லம் மற்றும் கம்பெனி பாக் அருகில் இருக்கும், ஷாஹீர் குதிராம் போஸ் நினைவிடத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதியிலிருந்து, அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த (All India Kisan Coordination Committee) விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும், காலை 11 முதல் மாலை 4 மணிவரை அந்த இடத்தில் கூடி போராட்டம் நடத்துவதாகவும், சாதாரண நாட்களில்  50 முதல் 60 வரையிலான எண்ணிக்கையிலும்  ஒரு சில தினங்களுக்கு 100க்கு மேற்ப்பட்ட எண்ணிக்கையில் விவசாயிகள் கலந்து கொள்வதாகவும் தி வயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 16) சரஸ்வதி பூஜையின் காரணமாக, குறைந்த அளவிலானவர்களே போராட்ட களத்தில் இருந்ததால், எதிர்ப்பாளர்கள் இதைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

“சமூக வலைதளங்கள் சமூகத்தை சீர்குலைக்கும் வலிமை பெற்றவை” – மத்திய அரசு

தி வயர் இணையதளத்திடம் பேசிய, துவக்க நாட்களிலிருந்து போராட்டத்தில்  ஈடுபட்டு வரும் 79 வயதான யூனுஸ், “மதியம் 3.35 மணியளவில் உள்ளூர் சமூக செயல்பாட்டாளர் முகமது அகீல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தடிகளுடன் வந்திருந்த அவர்கள், வெளியில் கட்டியிருந்த இரண்டு ஒலிபெருக்கிகளை அடித்து உடைத்தனர். பின்னர் போராட்டம் நடைபெறும் இடத்தை அடைந்து, அங்கிருக்கும் பொருட்களைச் சேதப்படுத்தினர். பின்னர் ஒருவர் மைக்கை பறித்தார். அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏதோ பேசப்போகிறார் என்று நினைத்தை போது, அவர் எங்களை மிரட்டத் தொடங்கினார்” எனக் கூறியுள்ளார்.

Photo Credit : TheWire.in

 

இந்த தாக்குதலில், 71 வயதான சந்தேஸ்வர் பிரசாத்  சவுத்ரி மற்றும் 68 வயதான ஷம்பு ஷரன் தேகூர் காயமடைந்துள்ளதாக தி வயர் தெரிவித்துள்ளது.

சம்பவம் நடக்கும்பொழுது அந்தப் பகுதியில் ஏராளமான உள்ளூர்வாசிகள் திரண்டதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள், பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்புகளின் முழங்களை எழுப்பியதையும் அவர்கள் கவனித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி வயர் இணையதளத்திடம் பேசிய, காவல்நிலைய ஆய்வாளர் ஓம் பிரகாஷ், விவசாயிகள்மீது தாக்குதல் நடத்தியதாக,  அடையாளம் தெரியாத 20 நபர்கள்மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது என்றும், “போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், சம்பவத்தை வீடியோ பதிவு செய்துள்ளனர். அதை அவர்கள் எங்களிடம் கொடுத்தால், தாக்குதல்  நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய ஆட்சியே காரணம் – நரேந்திர மோடி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், முசார்பூர் உள்ளிட்ட பீகாரின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும், இதில் பல இடங்களில் அது வன்முறையாக மாற்றப்பட்டது எனவும் கூறியுள்ள தி வயர்,  பாட்னாவில் இருக்கும் ஆளுநர் மாளிகைக்கு இடது சாரி கட்சி உறுப்பினர்கள் பேரணியாக சென்றபோது அவர்கள்மீது தடியடி நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், பிப்ரவரி 19 ஆம் தேதி, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும்போது, சட்டப்பேரவையை நோக்கிப் பேரணியாக செல்ல எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

பீகாரில் விசாயிகள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் – 2 மாதங்களாக அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்