அடுத்த மாதம் உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின் (சோனேலால்) இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
நேற்று(ஜனவரி 13) மாலை, லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த பிறகு, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள சோஹ்ரத்கர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினரான சவுத்ரி அமர் சிங், தான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சவுத்ரி அமர் சிங் சோஹ்ரத்கர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்னா தளம் (சோனேலால்) கட்சியைச் சேர்ந்த, விஸ்வநாத் கஞ்ச் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ஆர்.கே.வர்மாவும் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை(ஜனவரி 14) முறைப்படி ராஜினாமா செய்வதாகவும், கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை விரிவாகக் கூறுவதாகவும் அவர் பிடிஐ-யிடம் கூறியுள்ளார்.
ஒன்றிய அமைச்சர் அனுப்ரியா படேல் தலைமையிலான அப்னா தளம் (சோனேலால்), 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. 12 தொகுதிகளில் களமிறங்கி, 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆளும் பாஜகவில் இருந்தும் ராஜினாமா செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக தலைவர் தரம் சிங் சைனி இந்த வாரம் உத்தரப் பிரதேச அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த மூன்றாவது அமைச்சராவார். இது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜகவிற்கு மற்றொரு அதிர்ச்சியைக் கொடுத்தது.
இதுதொடர்பாக, ஜனவரி 12 அன்று, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தாரா சிங் சவுஹன், “உத்தரபிரதேசத்தில் தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமூக மக்களின் உதவியால்தான், பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அவர்களுக்கான ஆட்சியைக் வழங்க பாஜக தவறிவிட்டது. அதனால்தான் நான் என் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறியிருந்தார்.
தரம் சிங் சைனி ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஷிகோஹாபாத் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினர் முகேஷ் வர்மா பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கடந்த மூன்று நாட்களாக பதவி விலகுவதாக அறிவித்த அமைச்சர்கள் உட்பட எட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: PTI, ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.