Aran Sei

‘அந்த கரடி பொம்மை எவ்வளவு?’ – அமித்ஷாவை கிண்டல் செய்த ஸ்டாலின்

credits : outlook

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருந்தார். தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த அரசு விழாவில் கலந்துக்கொண்ட அவர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

அந்த விழாவில் பேசிய தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நாடாளுமன்றத் தேர்தல் போலவே சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என அரசு நிகழ்ச்சியில் அறிவித்தனர்.

இதற்குப் பின்னர் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ”குடும்ப அரசியல் நடத்தி வரும் சில கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டி வருகிறார்கள். அதே பாடம் தமிழகத்திலும் புகட்டப்படும் என நம்புகிறேன். காங்கிரஸ் – திமுக ஊழலுக்கு எதிராக பேச என்ன அறுகதை உள்ளது. ஊழல் குற்றச்சாட்டை நீங்கள் வைக்கும் முன் உங்கள் குடும்பத்தை திரும்பி பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த நிகழ்வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

”கோட்டையில் கழகத்தின் ஆட்சி நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், மக்களின் மனக்கோட்டையில், என்றென்றும் ஆண்டு கொண்டிருப்பது தி.மு.கழகம்தான்“ என ஆரம்பிக்கும் அந்த கடிதத்தில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து எழுதியுள்ளார்.

”மக்களின் ஆதரவின்றி, மக்களுக்குத் தொடர்பே இன்றி, தத்தித் தவழ்ந்து முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த எடப்பாடி பழனிசாமி, இத்தனை ஆண்டுகளாக மக்களின் மீது எவ்வித அக்கறையுமின்றி செயல்பட்ட நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அதிகாரிகளைச் சந்திப்பதும், வரவேற்பு என்ற பெயரில் சொந்தக் கட்சிக்காரர்களைத் திரட்டி வருவதும், மக்கள் வரிப்பணத்தில் அரசு விழாக்களை நடத்தி, அதில் அரசியல் செய்து தேர்தல் பிரச்சாரம் நடத்திக் கொண்டிருப்பதையும் மக்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள்” என கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின் ”அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது ஆட்சியின் அவலத்தை மறைத்துவிடலாம் எனத் தப்புக்கணக்குப் போடும் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பளித்து, அவரது கட்சியினர் நடத்தும் நிகழ்வுகளுக்கு அனுமதி தருகிற காவல்துறை, தி.மு.கழகத்தின் பரப்புரை பயணத்திற்கு அனுமதி மறுக்கிறது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தனது பயணத்தைத் தொடங்கிய வேகத்தில் கைது செய்கிறது” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

”நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை-உறவினர்களை-பினாமிகளைக் கொண்டு அரசு கஜானாவைச் சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும் – வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

“காணொலி வாயிலாக மக்களைச் சந்தித்து உரையாடிவரும் உங்களில் ஒருவனான நானும், தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுதில் நேரடியாகப் பரப்புரையை மேற்கொள்ளவிருக்கிறேன்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘அந்த கரடி பொம்மை எவ்வளவு?’ – அமித்ஷாவை கிண்டல் செய்த ஸ்டாலின்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்