Aran Sei

ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா? – தமிழக் அரசுக்கு திருமாவளவன் கேள்வி

காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 02 – காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அவ்வமைப்பு அரசியல் கட்சியல்ல; மாறாக, மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில், அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயமுள்ளது.

‘மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத்தான் தடை செய்ய வேண்டும்’ – பிஎப்ஐ தடைக்கு கேரள சிபிஎம் கருத்து

ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி அறப்போராட்டத்துக்குத் தடை விதித்திருப்பது எவ்வகையில் ஞாயம் என்னும் கேள்வி எழுகிறது.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில் அதற்குப் பின்வருமாறு காரணங்களைக் கூறுகிறது காவல்துறை.

‘இந்திய ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க, கண்காணிக்க காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்க இயலாது’ – என குறிப்பிட்டு இருந்தது.

சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு – தமிழ்நாடு காவல்துறை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்கத்தக்கதாக உள்ளது. ஏனெனில், அவை இரண்டும் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அல்ல. ஆனால் சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளும் விசிகவும் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளாகும்.

இந்த மூன்று அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து அறிவித்திருந்த “சமூக நல்லிணக்க மனித சங்கிலி” அறப்போராட்டத்துக்கு எமது தோழமை கட்சிகளான மதிமுக, மமக, தவாக, நாதக, எஸ்டிபிஐ, சிபிஐ (எம்.எல்- வி), தபுக என பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் திக, திவிக, தபெதிக, போன்ற சமூகநீதி இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதாவது இந்தப் போராட்டம் முற்றிலும் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துவதாகும்.

எனவே, இதனை மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதாக இல்லை. மதவெறி பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்புடன் சனநாயக வழியில் மக்களுக்குப் பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதே வேதனைக்குரியதாகும்.

தமிழ்நாடு: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த காவல்துறை

எனவே, காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் நாளன்று நடக்கவுள்ள எமது ‘சமூக நல்லிணக்க மனித சங்கிலி’ அறப்போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தனது அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

RSS Rally Banned | இது திருமா Sketchதொடங்கிய Stalin ஆட்டம் | Sangathamizhan Interview | BJP

ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா? – தமிழக் அரசுக்கு திருமாவளவன் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்