தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை எனக் கூறி அவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
தெலுங்கானாவில் ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு, டிஆர்எஸ் கட்சியின் தாண்டூரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த தகவலின் பேரில் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில், மொயினாபாத் காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த 3 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து ராஜேந்திர நகர் காவல் உதவி ஆணையர் ஸ்ரீ நிவாஸ் கூறும்போது, “ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க இவர்கள் பேரம் பேசினர். பாஜகவில் இணையும் டிஆர்எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு தலா ரூ.100 கோடி கொடுக்க இவர்கள் முன் வந்தனர்” என்றார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும் ஹைதராபாத் நகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு நீதிமன்றத்தில் காவல்துறையினர் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் மூவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் மர்ரிகூடாவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முனுகோடு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 3-ம் தேதி நடைபெறும் தேர்தலில் டிஆர்எஸ் தோல்வி அடைவது உறுதி. இதை அறிந்த டிஆர்எஸ்கட்சியினர், பாஜக மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்த தீர்மானித்தனர். எனவே கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக நாடகம் அரங்கேற்றியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் எங்கே? வெறும் கைப்பேசிகளை மட்டுமே பறிமுதல் செய்து விட்டு காவல்துறையினரும் ஆளும் கட்சியினரும் இந்தநாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
Source : indianexpress
பந்த் இல்லனு பம்மிய ஆட்டுக்குட்டி | பல்பு வாங்கிய வானதி அக்கா | Aransei Roast | Annamalaibjp
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.